அநுர குமார திசாநாயக்க

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் டீசல் நட்டம் குறித்து ஜனாதிபதி சரியான பெறுமதியைக் குறிப்பிட்டாலும் பகுப்பாய்வு முழுமையற்றதாக உள்ளது

"

ஒரு லீற்றர் டீசலின் விலை சுமார் ரூ.720 என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதை நான் அவதானித்தேன். எனினும், நாம் ஒரு லீற்றர் டீசலை ரூ.392க்கு வழங்கி வருகின்றோம். அதனை ரூ.392க்கு வழங்குவதில், ஒவ்வொரு லீற்றர் டீசலுக்கும் அரசாங்கம் ரூ.100 சுமையை ஏற்கின்றது. இதன் பொருள் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் | மே 13, 2026

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உலகளாவிய எரிபொருள் விலைகளின் பின்னணியில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு லீற்றர் டீசலுக்கான செலவு சுமார் ரூ.750 ஆக இருக்கும் நிலையில், அதற்கு 492 ரூபாவே கிடைப்பதாகக் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் “பாரிய நட்டத்தை” எதிர்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இந்தக் கூற்றைச் சரிபார்ப்பதற்கு, வலுசக்தி அமைச்சின் 2026 மே மாத எரிபொருள் விலை அறிவித்தல் மற்றும் publicfinance.lk தளத்தில் வெரிட்டே ரிசர்ச் வெளியிட்ட 2026 மே மாதத்திற்கான எரிபொருள் விலை கண்காணிப்பான் தரவு ஆகியவற்றை FactCheck.lk  ஆராய்ந்தது. இந்தக் கண்காணிப்பான் தரவானது, 2018 ஆம் ஆண்டில் நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட விலைச் சூத்திரத்தைப் பயன்படுத்தி, முழுச் செலவையும் ஈடுசெய்யக்கூடிய எரிபொருள் விலைகளை மாதாந்த அடிப்படையில் கணக்கிடுகின்றது.

முதலாவதாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ரூ.492 கிடைப்பதாக ஜனாதிபதி குறிப்பிடும் கணக்கீடு சரியானது. சமீபத்திய சந்தை விலை திருத்தத்திற்கு முன்னதாக, 2026 மே மாத விலைகளின் கீழ் ஒரு லீற்றருக்கான சில்லறை விலையான 392 ரூபாவை ஜனாதிபதி சரியாகக் குறிப்பிடுகின்றார். அதனைத் தொடர்ந்துவரும் கணக்கீடும் சரியானது: நுகர்வோரால் செலுத்தப்படும் ரூ.392 உடன், அரசாங்கத்தால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படும் ரூ.100 மானியமும் (உண்மையில் இது வரியைத் திருப்பிச் செலுத்துதல் ஆகும்) சேரும் போது, கூட்டுத்தாபனத்திற்கு லீற்றருக்கு ரூ.492 கிடைக்கின்றது.

இரண்டாவதாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசலில் “பாரிய நட்டத்தை” ஈட்டுகின்றது என ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். செலவை ஈடுசெய்வதற்குக் கிடைக்க வேண்டிய ரூ.750 என்ற கூட்டுத்தாபனத்தின் அறிக்கையிடப்பட்ட கணக்கீட்டிற்கும், கூட்டுத்தாபனத்திற்குக் கிடைக்கும் ரூ.492க்கும் இடையிலான இடைவெளியை இந்தப் “பாரிய” நட்டம் என்பது பிரதிபலிக்கின்றது. ஜனாதிபதி தனது கூற்றில் இந்தச் செலவை ஈடுசெய்யும் தொகையை சுமார் ரூ.720 எனக் குறிப்பிட்டிருந்தார். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிக்கையிடலின் அடிப்படையில், அதற்கு ரூ.492 கிடைக்கும் போது ஏற்படும் நட்டம் லீற்றருக்கு ரூ.258 ஆகும்.

எனினும், இந்த நட்டம் ஏன் இவ்வளவு “பாரியதாக” உள்ளது என்பதற்குச் சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

அரசாங்கத்தின் எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் 2026 ஏப்ரல் மாதத்திற்கான சிங்கப்பூர் டீசல் குறியீட்டு விலைகளை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச கொள்வனவு செலவு ஆகியவற்றைப் பயன்படுத்தி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செலவுகள் கணக்கிடப்பட்டால், கூட்டுத்தாபனம் அனைத்து செலவுகளையும் மீட்டெடுப்பதற்கு ரூ.551 ஐப் பெற்றால் போதுமானதாகும், அவர்கள் குறிப்பிடுவது போன்று ரூ.750 அல்ல. எனவே, 2026 மே மாதத்தில் கிடைத்த லீற்றருக்கு ரூ.492 தொகையைக் கொண்டு பார்க்கும்போது, கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ந்து நட்டம் ஏற்படும், ஆனால் அது லீற்றருக்கு சுமார் ரூ.59 ஆக இருக்கும். இது கூட்டுத்தாபனம் குறிப்பிடும் லீற்றருக்கு ரூ.258 என்ற நட்டத்தை விட மிகக் குறைவானதாகும்.

சுருக்கமாகச் சொல்வதானால், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் “பாரிய நட்டங்களை” எதிர்கொள்கிறது  என்ற ஜனாதிபதியின் கூற்றைச் சான்றுகள் ஆதரிக்கின்றன. ஆனால், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கையிட்டுள்ள சர்வதேசக் கொள்வனவு செலவானது, கொள்வனவிற்கான உரிய குறியீட்டு விலைகளை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இருப்பதே லீற்றருக்கு சுமார் ரூ.258 என்ற மிக பெரிய நட்டம் ஏற்படுவதற்கான காரணம் ஆகும் (மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்). எனினும், இந்த விளக்கமானது 2026 மே மாதத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் டீசலில் பெரும் நட்டத்தைச் சந்தித்தது என்ற ஜனாதிபதியின் ஒட்டுமொத்தக் கூற்றைப் பொய்யாக்கவில்லை.

எனவே, ஜனாதிபதியின் கூற்றை நாங்கள் ‘உண்மையானது’ என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு: பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கையிட்டுள்ள லீற்றருக்கு ரூ.750 என்ற செலவை ஈடுசெய்யும் விலையானது எரிபொருள் விலை சூத்திரத்துடன் ஒத்துப்போவதற்கு, அதன் கொள்வனவு விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் 268 அமெரிக்க டொலராக இருக்க வேண்டும். எனினும், 2026 ஏப்ரல் மாதத்தில் சிங்கப்பூர் டீசல் குறியீட்டு விலையானது சராசரியாக ஒரு பீப்பாய்க்கு சுமார் 190 அமெரிக்க டொலராக இருந்ததுடன், ஏப்ரல் 2 முதல் 6 வரையான குறுகிய காலப்பகுதியில் மட்டுமே 268 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது. ஏப்ரல் 8 ஆம் திகதி முதல், ஒரு நாளைத் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் 200 அமெரிக்க டொலருக்கும் குறைவாகவே இருந்ததுடன், சராசரியாக ஒரு பீப்பாய்க்கு சுமார் 172 அமெரிக்க டொலராகக் காணப்பட்டது. 2026 மே மாதத்தில், இது சுமார் 157 அமெரிக்க டொலராக மேலும் குறைவடைந்தது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிடும் லீற்றருக்கு ரூ.750 என்ற செலவானது, குறிப்பிட்ட காலப்பகுதியில் நிலவிய சர்வதேச குறியீட்டு விலையை விட குறிப்பிடத்தக்க அளவு அதிக விலையில் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதைப் பிரதிபலிக்கின்றது.”

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

  1. நியூஸ்வயர், “ஒரு லீற்றர் டீசலின் தற்போதைய  விலை ரூ.720 –  எரிபொருள் நிலைமை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரை,” 13 மே 2026, https://www.newswire.lk/2026/05/13/diesel-litre-now-costs-rs-720-president-akd-speaks-on-fuel-situ/  [இறுதியாக அணுகியது: 27 மே 2026].
  2. வலுசக்தி அமைச்சு, இலங்கை, “2026 மே மாதத்திற்கான விலைத் திருத்தம்”, https://energymin.gov.lk/wp-content/uploads/2026/05/Price-Applicable-for-May-2026.pdf [இறுதியாக அணுகியது: 27 மே 2026].
  3. வெரிட்டே ரிசேர்ச் / PublicFinance.lk, “எரிபொருள் விலை கண்காணிப்பான் — 2026 மே புதுப்பிப்பு”, https://dashboards.publicfinance.lk/fuel-price-tracker/  [இறுதியாக அணுகியது: 27 மே 2026].
  4. வெரிட்டே ரிசர்ச் / PublicFinance.lk, “எரிபொருள் விலை சூத்திரம்: திருத்தப்பட்ட முறைமை (மார்ச் 2025)”, https://dashboards.publicfinance.lk/fuel-price-tracker/wp-content/uploads/2025/03/Fuel-Price-Methodology.pdf  [இறுதியாக அணுகியது: 27 மே 2026].
  5. இலங்கை பெற்றோலியக்  கூட்டுத்தாபனம், “சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை — தற்போதைய சில்லறை விலைகள்”, https://ceypetco.gov.lk/marketing-sales/  [இறுதியாக அணுகியது: 27 மே 2026].

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன