உண்மைச் சரிபார்ப்புகளும்
2022 ஆம் ஆண்டைப் போலல்லாது, தற்போது இலங்கையிடம் சுமார் ஐ.அ.டொ 7 பில்லியன் மத்திய வங்கியில் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகளை FactCheck.lk ஆராய்ந்தது.
இந்தக் கூற்றை FactCheck.lk இரண்டாகப் பிரித்து ஆராய்கின்றது: (1) 2022 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய வங்கியிடம் டொலர்கள் இருக்கவில்லை (2) தற்போது அதனிடம் சுமார் ஐ.அ.டொ 7 பில்லியன் உள்ளது. இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும்போது, இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்குகள் சுமார் ஐ.அ.டொ 7 பில்லியனால் அதிகரித்துள்ளன என்ற கருத்தை வலியுறுத்துகின்றது.
ஜனாதிபதி குறிப்பிடும் இறுதி பெறுமதி இலங்கை மத்திய வங்கியின் மார்ச் 2026 மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை அடிப்படையாகக் கொண்டது. இது ஐ.அ.டொ 7,026 மில்லியனாக உள்ளது. எனினும், இந்தப் பெறுமதியில் சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர நாணயப் பரிமாற்றல் வசதி உள்ளடக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஐ.அ.டொ 1,436 மில்லியன் ஆகும் (மேலதிகக் குறிப்பு 2 ஐப் பார்க்கவும்). இந்தப் பரஸ்பர நாணயப் பரிமாற்றலைப் “பயன்படுத்துவது நிபந்தனைகளுக்கு உட்பட்டது” என்பதனால் “பயன்படுத்த முடியாதது” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
சீன மக்கள் வங்கியுடனான பரஸ்பர நாணயப் பரிமாற்றல் வசதியைத் தவிர்த்தால், இலங்கையின் ஒதுக்குகள் மார்ச் 2026 இல் ஐ.அ.டொ 5,590 மில்லியனாக உள்ளன. எனவே ஜனாதிபதியின் ஆரம்பக் கூற்றைச் சரி என ஏற்றுக்கொண்டாலும், ஒதுக்குகளில் ஏற்பட்ட அதிகரிப்பு அவர் குறிப்பிடுவதைப் போன்று ஐ.அ.டொ 7,026 மில்லியன் அல்ல.
பயன்படுத்த முடியாத பரஸ்பர நாணயப் பரிமாற்றல் வசதியை உள்ளடக்குவதன் மூலம் பெறப்பட்ட ஒதுக்குப் பெறுமதியைக் கொண்டு இலங்கையின் ஒதுக்குகளில் ஏற்பட்ட அதிகரிப்பை ஜனாதிபதியின் கூற்று மிகைப்படுத்துகின்றது.
எனவே நாங்கள் ஜனாதிபதியின் கூற்றை தவறானது என வகைப்படுத்துகின்றோம்.

மேலதிகக் குறிப்பு 1: ஜுன் 2024 இல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய சிறப்பு உரையில் இதே தவறைச் செய்துள்ளார். அதன்போது அவர் ஏப்ரல் 2022 இல் “முழுவதும் காலியான” நிலையில் இருந்து ஐ.அ.டொ 5.5 பில்லியனால் ஒதுக்குகள் அதிகரித்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். முந்தைய உண்மைச் சரிபார்ப்பைப் பார்வையிட: https://factcheck.lk/fact-check-on-president-ranil-wickremesinghes-special-address-to-the-nation-on-june-26-2024/
மேலதிகக் குறிப்பு 2: சீன மத்திய வங்கியுடனான பரஸ்பர நாணயப் பரிமாற்றல் வசதியைத் தற்போது வரை ஒதுக்குச் சொத்தாகப் பயன்படுத்த முடியாதென சர்வதேச நாணய நிதியம் தற்போதைய நிகழ்ச்சித் திட்டக் காலப்பகுதியில் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் மே 27, 2026 வெளியான மிகச் சமீபத்திய சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வில், 2026 இறுதியில் இந்தப் பரஸ்பர நாணயப் பரிமாற்றலை ஒதுக்காகப் பயன்படுத்த முடியும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. 2026 இறுதிக்குள் அதனைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பை இது பிரதிபலிக்கின்றது. எனவே எதிர்காலத்தில் இலங்கையின் பயன்படுத்தக்கூடிய ஒதுக்குகளாக இந்தப் பரஸ்பர பரிமாற்றல் வசதி சட்டபூர்வமாகத் தகுதிபெற்றாலும் தற்போது அதன் நிலைமை அதுவல்ல.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகள், Weekly Economic Indicators | Central Bank of Sri Lanka