உண்மைச் சரிபார்ப்புகளும்
எரிபொருள் மானியம்: அமைச்சர் ஜயதிஸ்ஸ சரியாகக் கூறுகின்றார்
பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலைகளுக்கு மானியம் வழங்குவதன் மூலம் அரசாங்கம் மாதம் ஒன்றுக்கு ரூ.20 பில்லியன் நிதிச் சுமையைத் தாங்குவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் மாதாந்தக் குறிகாட்டிகள், வெரிட்டே ரிசேர்ச்சின் எரிபொருள் விலை கண்காணிப்பானால் மாதாந்தம் மதிப்பிடப்படும் நிதி அமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம், பெற்றோல் மற்றும் டீசல் மீதான ஒரு லீற்றருக்கான மானியத்தின் ரூபாய் பெறுமதி குறித்த அரசாங்கத்தின் அறிக்கைகள் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
ஒரு லீற்றர் பெற்றோலுக்கு ரூ.20 மற்றும் ஒரு லீற்றர் டீசலுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படுவதாக அரசாங்கத்தின் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. அமைச்சர் குறிப்பிடுவதைப் போன்று, இது மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.20 பில்லியன் செலவை ஏற்படுத்துமா என்பதை FactCheck.lk மதிப்பீடு செய்கின்றது.
இலங்கை மத்திய வங்கியின் மாதாந்தக் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, FactCheck.lk இந்த மானிய விகிதங்களை 2025 ஆம் ஆண்டின் பெற்றோல் மற்றும் டீசல் விற்பனை அளவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தது. கிடைக்கக்கூடிய மிக சமீபத்திய முழுமையான ஆண்டுத் தரவு இதுவாகும்.
அட்டவணை 1 இல் காட்டப்பட்டது போன்று, 2026 ஆம் ஆண்டிலும் இதே அளவிலான எரிபொருள் விற்பனை செய்யப்படுமாயின், மதிப்பிடப்பட்ட மானியம் ஆண்டொன்றுக்கு ரூ.251.75 பில்லியனாக இருக்கும். இது மாதம் ஒன்றுக்கு ரூ.20.98 பில்லியனுக்குச் சமமானதாகும். அமைச்சரினால் குறிப்பிடப்பட்ட தொகையை விட இது சுமார் 5% அதிகமாகும்.
எனவே, அமைச்சரின் ரூ.20 பில்லியன் என்பது 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனையில் சுமார் 5% வீழ்ச்சியை எதிர்பார்க்கும் ஒரு மதிப்பீடாகத் தெரிகின்றது. விலை அதிகரிப்பு காரணமாக எரிபொருள் விற்பனை குறையக்கூடிய வாய்ப்பு உள்ளதால் (அதனை இதுவரை கணிக்க முடியாவிட்டாலும்), இவ்வாறான குறைந்த விற்பனை மதிப்பீடு நியாயமானது ஆகும்.
எனவே, நாங்கள் அமைச்சரின் கூற்றைச் சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
அட்டவணை 1: மானியத்தின் மாதாந்தச் செலவு மதிப்பீடு
2025 வருடாந்த எரிபொருள் விற்பனையை அடிப்படையாகக் கொண்டது.

மேலதிகக் குறிப்பு 1: இது அரசாங்கத்திற்குச் ‘சுமையை’ ஏற்படுத்துகின்றதா?
இந்த மானியத்தால் அரசாங்கம் மேலதிகச் சுமையை “ஏற்றுக்கொள்வதாக” அமைச்சர் குறிப்பிடுகின்றார். எனினும் இது பகுதியளவில் மட்டுமே உண்மை என சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. பெற்றோலைப் பொறுத்தவரை, இந்த மானியமானது எரிபொருள் விலை அதிகரிப்பால் கிடைக்கும் மேலதிக வரி வருமானத்தின் மூலம் முழுமையாக ஈடுசெய்யப்படுகின்றது. எனவே, இந்தச் செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகக் கருதுவதை விட, மேலதிக வரி அறவீட்டைத் தள்ளுபடி செய்வதாகக் குறிப்பிடுவதே சரியானது. டீசலைப் பொறுத்தவரை, அதன் ஒரு பகுதி மாத்திரமே மேலதிக வரி வருமானத்தால் ஈடுசெய்யப்படுகின்றது. மிகுதியை அரசாங்கமே ஏற்றுக்கொள்கின்றது.
எரிபொருள் வரிகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதே இதற்கு காரணமாகும். நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலைச் சூத்திரத்தின் கீழ், எரிபொருள் இறக்குமதி செலவின் ஒரு குறிப்பிட்ட சதவீதமாகவே பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) ஆகிய வரிகள் விதிக்கப்படுகின்றன. உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் போது, இந்த வரிகளும் தானாகவே அதிகரிக்கின்றன. இதன் மூலம் அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்பார்க்காத மேலதிக வருமானம் கிடைக்கின்றது. 2026 மார்ச் 1 முதல் மார்ச் 22 வரையான காலப்பகுதியில், எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரித்ததன் காரணமாக, ஒரு லீற்றர் பெற்றோல் மீதான வரி 21 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசல் மீதான வரி 31.5 ரூபாவினாலும் அதிகரித்துள்ளன.
பெற்றோலைப் பொறுத்தவரை, இந்த ரூ.21 அதிகரிப்பானது ஒரு லீற்றருக்கான ரூ.20 மானியத்துடன் கிட்டத்தட்ட முழுமையாகப் பொருந்துகின்றது. அதாவது, விலையைக் குறைப்பதற்காக அரசாங்கம் தனது கையில் இருந்து பணத்தைச் செலவிடவில்லை. மாறாக, தமக்குக் கிடைக்க வேண்டிய மேலதிக வரியை அறவிடவில்லை. டீசலைப் பொறுத்தவரை, ரூ.31.5 அதிகரிப்பானது அரசாங்கம் அறிவித்துள்ள ஒரு லீற்றருக்கான ரூ.100 மானியத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே ஈடுசெய்கின்றது. ஒரு லீற்றருக்கான எஞ்சிய ரூ.68.5 அரசாங்கத்திற்கு உண்மையான நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றது.

மூலம்
- இலங்கை மத்திய வங்கி. மாதாந்தக் குறிகாட்டிகள் ஜனவரி 2026. பார்வையிடுவதற்கு: MEI_202601_e.pdf
- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலை. பார்வையிடுவதற்கு: https://ceypetco.gov.lk/marketing-sales/
- எரிபொருள் விலை கண்காணிப்பான். பார்வையிடுவதற்கு: https://dashboards.publicfinance.lk/fuel-price-tracker/
- இலங்கைப் பாராளுமன்றம், நேரடி பதிவுகள் ஏப்ரல் 7, 2026. பார்வையிடுவதற்கு: https://www.youtube.com/watch?v=cWm2NgMzUp0