ரில்வின்: மாகாண சபைத் தேர்தல் தாமதத்திற்கு தவறான காரணம் – நிதிப்பற்றாக்குறை காரணமாக இருக்க முடியாது

"

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. எனினும், அந்தச் சமயத்தில்தான் தித்வா சூறாவளி தாக்கியது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி அப்படியே இருக்கும்போது, தித்வா சூறாவளிக்காக நாங்கள் ரூ.500 பில்லியனை

நியூஸ் ஃபெர்ஸ்ட் | மே 24, 2026

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

மே 24, 2026 அன்று, தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரண்டு கூற்றுக்களை முன்வைத்தார்: (அ) மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்காக முந்தைய வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, தித்வா சூறாவளி மீட்பு பணிகளுக்காக ரூ.500 பில்லியனாக மீண்டும் ஒதுக்கப்பட்டது, (ஆ) எனவே இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, இலங்கை அரசியலமைப்பு, 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இல. பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம், 2026 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள், 2026 குறைநிரப்பு மதிப்பீடு மற்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு SC.FR 69/2023 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

சில்வாவின் கூற்று உண்மையாக இருப்பதற்கு இரண்டு கருத்துகள் சரியாக இருக்க வேண்டும். முதலாவது, மாகாண சபைத் தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியானது தித்வா சூறாவளி மீட்பு பணிகளுக்காகத் திருப்பி விடப்பட்டது என்பதாகும். இரண்டாவது, இந்த ஆண்டு தேர்தலை நடத்தாதிருப்பதற்கு இது சரியான அடிப்படையை வழங்குகின்றது என்பதாகும்.

முதலாவது கருத்து: கிடைக்கப்பெறும் வரவு செலவுத் திட்ட ஆவணங்கள் சில்வாவின் கூற்றை ஆதரிக்கவில்லை. 2026 வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஐந்து பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இது தவிர டிசம்பர் 19, 2025 திகதியிடப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடானது தித்வா சூறாவளி பாதிப்புகளுக்காக ரூ.500 பில்லியனை வழங்கியது. எனினும், குறைநிரப்பு மதிப்பீடானது இந்த ரூ.500 பில்லியனை “கூடுதல் ஒதுக்கீடு” என்றே அடையாளம் காண்கின்றது. இதன் அர்த்தம் என்னவென்றால், 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட செலவினங்களுக்கு மேலதிகமாக செய்யப்பட்ட ஒதுக்கீடு ஆகும். ரில்வின் சில்வா குறிப்பிடுவது போன்று, தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல் தொடர்பான வரவு செலவுத் திட்டத்தின் “மறு ஒதுக்கீடு” அல்ல.

இரண்டாவது கருத்து: நிதி நெருக்கடியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தேர்தலைத் தாமதப்படுத்தலாம் என்ற கூற்றை சட்ட நிலைப்பாடும் ஆதரிக்கவில்லை. உள்ளூராட்சி தேர்தல்களைத் தாமதப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் நிர்வாகப் பிரிவினால் 2023 ஆம் ஆண்டில் இதே வாதம் முன்வைக்கப்பட்டது. பின்னர் இது குறித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது (SC.FR 69/2023  தீர்ப்பைப் பார்க்கவும்). தேர்தல்களை நடத்துவதன் மூலம் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவது அரசியலமைப்பின் 14(1)(அ) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை என்றும், அந்த அடிப்படை உரிமையைக் கட்டுப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட அரசியலமைப்புக்கு உட்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நிதி நெருக்கடியின் அடிப்படையில் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு நடைமுறையிலுள்ள எந்தவொரு சட்டமும் நிறைவேற்று அதிகாரத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என உயர் நீதிமன்றம் கண்டறிந்தது. மேலும், 2023 ஆம் ஆண்டின் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், தித்வா சூறாவளியால் ஏற்பட்ட செலவினத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்க அனுமதிக்கும் பாராளுமன்றச் சட்டம், பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட அவசரகால விதி அல்லது சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற வேறு எந்த ஆவணமும் FactCheck.lkக்கு கிடைக்கவில்லை.

இந்தக் குறிப்பிட்ட காரணம் குறித்து உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளதால், நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி சட்டபூர்வமாக ஒரு தேர்தலை நிறைவேற்று அதிகாரத்தால் கூட தாமதப்படுத்த முடியாது என்பது தெளிவாகின்றது.

அந்த அடிப்படையில், சில்வாவின் கூற்று இரண்டு காரணங்களாலும் தவறானதாகும். முதலாவதாக, தித்வா சூறாவளி நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.500 பில்லியன் கூடுதல் ஒதுக்கீடேயன்றி, மாகாண சபைத் தேர்தல்களுக்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மறு ஒதுக்கீடு அல்ல. இரண்டாவதாக, நிதி நெருக்கடிகள் காரணமாக இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது என முடிவெடுப்பதற்கு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அடிப்படையையும் கண்டறிய முடியவில்லை.

எனவே, சில்வாவின் இந்தக் கூற்றை நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு: அரசியலமைப்பின் 75 மற்றும் 76 உறுப்புரைகளின் கீழ் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டமன்ற அதிகாரங்களின் கீழ் பாராளுமன்றச் சட்டம், ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால விதிகள் (இவை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்) அல்லது பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட சட்டத்தின் மூலம் அதிகாரமளிக்கப்பட்ட ஒரு நபர் அல்லது அமைப்பினால் உருவாக்கப்பட்ட துணைநிலைச் சட்டங்கள் என்பன சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.



மூலம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு (1978)

2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இல. பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம்

2026 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள்

2026 குறைநிரப்பு மதிப்பீடு

உயர் நீதிமன்ற அடிப்படை உரிமைகள் மனு இல.: SC/FR 69/2023

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன