உண்மைச் சரிபார்ப்புகளும்
இலங்கையின் சமீபத்திய ஏற்றுமதி வளர்ச்சியானது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்தவில்லை எனவும், நாட்டின் கடந்த கால போக்கை ஒத்ததாக இருக்கின்றது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியரான கலாநிதி பிரியங்க துணுசிங்க குறிப்பிடுகிறார். அவர் 1978 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையான வருடாந்த வளர்ச்சியான 6.75 சதவீதத்தை மேற்கோள் காட்டுவதுடன், இதனை 2025 ஆம் ஆண்டின் ஏற்றுமதி செயல்திறனுடன் ஒப்பிடுகின்றார்.
இந்தக் கூற்றை மூன்று கேள்விகளை ஆராய்வதன் மூலம் FactCheck.lk மதிப்பிடுகின்றது: (1) 1978 முதல் 2024 வரை வருடாந்த ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 6.75 சதவீதமா? (2) 2025 ஆம் ஆண்டின் ஏற்றுமதி வளர்ச்சி (2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்) 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலகட்டத்தின் வருடாந்த ஏற்றுமதி வளர்ச்சியை ஒத்ததா அல்லது குறைவானதா? (3) சமீபத்திய ஆண்டுகளில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்ற கூற்றை மதிப்பிடுவதற்கு 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலகட்டத்தின் வருடாந்த ஏற்றுமதி வளர்ச்சியை ஒப்பிடுவது பொருத்தமானதா?
இவற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஏற்றுமதி தரவை FactCheck.lk ஆராய்ந்தது.
1978 முதல் 2024 வரை வருடாந்த ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 6.75 சதவீதமா?
அவருடைய கூற்றில் பொருட்களின் ஏற்றுமதியை மட்டுமே அவர் குறிப்பிடுவதாக FactCheck.lk விளங்கிக்கொள்கின்றது. ஏனெனில் 1978 வரை கிடைக்கக்கூடிய ஒப்பிடத்தக்க கடந்தகால தரவுகளில் சேவை ஏற்றுமதிக்கான தரவுகள் இல்லை.
1978 முதல் 2024 வரையான வருடாந்த ஏற்றுமதி வளர்ச்சி விகிதங்களின் சராசரி FactCheck.lk கணக்கீட்டின் பிரகாரம் 6.69% ஆகும். இது கலாநிதி துணுசிங்க மேற்கோள் காட்டும் 6.75 சதவீதத்திற்கு அருகில் உள்ளது.
2025 ஆம் ஆண்டின் வளர்ச்சியானது 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியின் ஏற்றுமதியின் வருடாந்த வளர்ச்சிக்கு ஒத்ததாக இருக்கின்றதா அல்லது குறைந்துள்ளதா?
இந்த அறிக்கை தயாரிக்கப்படும் வரையில், இலங்கை மத்திய வங்கியின் ஏற்றுமதி தரவு 2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டெம்பர் வரை மட்டுமே கிடைக்கின்றது. கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதற்காக, ஒன்பது மாதத்திற்கான தரவு ஆண்டு முழுவதுக்கும் மாற்றப்பட்டு 2024 ஆம் ஆண்டின் ஏற்றுமதிகளுடன் ஒப்பிடப்பட்டன.
இந்தக் கணக்கீட்டின் பிரகாரம், 2025 ஆம் ஆண்டில் ஏற்றுமதிகள் 6.6 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கலாநிதி துணுசிங்க ஒப்பிடுவதற்காகப் பயன்படுத்திய 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதிக்கு நாங்கள் கணக்கிட்ட 6.69 சதவீதத்துடன், இந்தப் பெறுமதி நெருக்கமாக உள்ளதுடன் அதை விட சற்றுக் குறைவாக உள்ளது. மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்.
இந்தக் கூற்றுக்கு 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியை ஒப்பிடுவது பொருத்தமானதா?
2025 ஆம் ஆண்டின் சமீபத்திய ஏற்றுமதி வளர்ச்சியை 1978 ஆம் ஆண்டிலிருந்து வருடாந்த ஏற்றுமதி வளர்ச்சியுடன் ஒப்பிடுவது, இலங்கையின் ஏற்றுமதிகளில் கடந்த இரண்டு தசாப்தங்களில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றங்களைப் போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை. ஏனெனில் அந்தக் காலகட்டத்தில் ஏற்றுமதி வளர்ச்சி குறைவாகவே இருந்துள்ளது. உதாரணமாக, கடந்த 20 ஆண்டுகளில் (2005-2024) வருடாந்த வளர்ச்சி விகிதங்களின் சராசரி 4.3% ஆகும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் (2015-2024) இது 2.7% ஆகும்.
1978 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியின் நீண்ட கால சராசரியை சமீபத்திய ஏற்றுமதி வளர்ச்சி பிரதிபலிக்கவில்லை என்பதை இந்தப் பெறுமதிகள் காட்டினாலும், கடந்த 10 மற்றும் 20 ஆண்டுகளில் பதிவான சராசரி வளர்ச்சியை விட இது குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும்.
சுருக்கமாகச் சொல்வதானால், 2025 ஆம் ஆண்டுக்கு மதிப்பிடப்பட்ட 6.6% என்னும் ஏற்றுமதி வளர்ச்சி 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலகட்டத்தின் சராசரியை விட அதிகம் இல்லை. இது கலாநிதி துணுசிங்கவின் கூற்றை ஆதரிக்கின்றது. ஆனால் மிகச் சமீபத்திய செயல்திறன் கடந்த காலத்தை விட முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்ற அவரது கூற்றுக்கு 1978 ஆம் ஆண்டுக்கு பின்னரான காலகட்டத்தை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல. ஏனெனில் ஏற்றுமதிகளின் சராசரி வளர்ச்சி விகிதம் 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 10 மற்றும் 20 ஆண்டுகளில் உண்மையில் மிகவும் குறைவாகும்.
எனவே கலாநிதி துணுசிங்கவின் அறிக்கையை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
மேலதிகக் குறிப்பு 1: 2025 ஆம் ஆண்டின் முழு ஆண்டுக்குமான ஏற்றுமதி தரவுகள் தற்போது கிடைத்துள்ளதால், 2025 ஆம் ஆண்டின் உண்மையான முடிவை கடந்த கால சராசரியுடன் FactCheck.lk ஒப்பிட்டுப் பார்த்தது. முழு ஆண்டிற்குமான தரவை அடிப்படையாகக் கொண்டால், ஏற்றுமதிகள் 2024 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 6.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளன. இதுவும் கலாநிதி துணுசிங்க குறிப்பிடும் 1978 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலகட்டத்தின் சராசரி வளர்ச்சி விகிதமான 6.69 சதவீதத்தை விடக் குறைவாகும். மேலும் கடந்த 10 மற்றும் 20 ஆண்டுகளின் சராசரி விகிதத்தை விட அதிகமாகும்.
மூலம்
வெளிநாட்டுத் துறை, இலங்கை மத்திய வங்கி, https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector