உண்மைச் சரிபார்ப்புகளும்
பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதியின் பிரதானியுமான சமிந்த குலரத்ன ஜனவரி 23, 2026 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின் கீழ் பிரதிச் செயலாளர் நாயகத்தை நீக்குவதற்கான நேரடி அதிகாரம் சபாநாயகருக்கு இல்லாத காரணத்தால் அவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பிரித்தானியப் பாராளுமன்றத்தின் மரபைப் பின்பற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல கூறுகின்றார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை அரசியலமைப்பு, தாபன விதிக்கோவை, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள், 1953 ஆம் ஆண்டின் 9 ஆம் இல. பாராளுமன்றப் பணியாட்டொகுதி சட்டம் (திருத்தப்பட்டது), 1953 ஆம் ஆண்டின் 21 ஆம் இல. பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம் (திருத்தப்பட்டது) மற்றும் கல்வி நூல்கள் ஆகியவற்றை FactCheck.lkஆராய்ந்தது.
வெளியிடப்பட்ட சட்ட ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளவாறு, இலங்கை பாராளுமன்றம் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் மரபுகள், முன்னுதாரணங்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்ற இடமுள்ளது. ஆனால் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்படாத நிலைமைகளில் மட்டுமே அவற்றைப் பின்பற்ற முடியும் (ஜயசிங்க மற்றும் பலர், 2019, ப.57). எனவே முன்னாள் அமைச்சர் குறிப்பிடுவதைப் போன்று பிரதிச் செயலாளர் நாயகத்தை நீக்குவதற்கு/ இடைநீக்கம் செய்வதற்கு சட்டங்களில் தெளிவான விதிகள் இல்லாத நிலையில், முன்னாள் அமைச்சரின் கூற்றை நியாயப்படுத்த பிரித்தானிய மரபைப் பின்பற்ற வேண்டிய தேவை உள்ளதா என FactCheck.lk ஆய்வுசெய்தது.
பிரதிச் செயலாளர் நாயகத்தை இடைநீக்கம் அல்லது பணி நீக்கம் செய்வதற்கான செயல்முறையை நிலையியற் கட்டளைகள் வழங்குகின்றனவா?
பிரதிச் செயலாளர் நாயகம் உட்பட பாராளுமன்ற செயலாளர் நாயகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பணியாளர்களை தற்காலிகமாக நீக்குவதற்கு/இடைநீக்கம் செய்வதற்கு அல்லது பணி நீக்கம் செய்வதற்கான செயல்முறை தொடர்பில் நிலையியற் கட்டளைகளில் எந்த விதிகளும் இல்லை என FactCheck.lk கண்டறிந்தது.
இலங்கை சட்டத்தில் பிரதிச் செயலாளர் நாயகத்தை இடைநீக்கம் அல்லது பணி நீக்கம் செய்வதற்கான செயல்முறை உள்ளதா?
ஆம். செயலாளர் நாயகத்தின் பணியாளர்களை தற்காலிகமாக நீக்குவது/இடைநீக்கம் செய்வது அல்லது பணி நீக்கம் செய்வது உட்பட ஒழுக்காற்று நடவடிக்கைகளை நிர்வகிக்கும் 1953 ஆம் ஆண்டின் 9 ஆம் இல. பாராளுமன்ற பணியாட்டொகுதி சட்டம் (திருத்தப்பட்டது) என்னும் உள்நாட்டுச் சட்டத்தை FactCheck.lk கண்டறிந்தது (மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்).
அதன் பிரகாரம், ஒவ்வொரு சபையின் செயலாளரின் (Clerk) கீழ் பணிபுரியும் உறுப்பினர்கள் மீது இடைநீக்கம், தண்டனை மற்றும் பணிநீக்கம் உட்பட ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரம் செயலாளரிடமே உள்ளது என பாராளுமன்ற பணியாட்டொகுதி சட்டத்தின் பிரிவு 7 குறிப்பிடுகின்றது. மேலும் அது ஜனாதிபதி அல்லது சபாநாயகருடனான ஆலோசனையுடன் பிரிவு 6 இல் குறிப்பிடப்பட்டுள்ள திணைக்கள விதிகளுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பாராளுமன்றப் பணியாட்டொகுதி சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் முந்தைய பாராளுமன்ற அமைப்பைப் பிரதிபலித்தாலும், அவை இன்றைய அமைப்பிற்கும் தேவையான மாற்றங்களுடன் பொருந்துகின்றன. இந்தச் சூழலில் “செயலாளர்” என்னும் சொல் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்தைக் குறிக்கின்றது [பாராளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் பிரிவு 2 இல் “செயலாளர்” என்ற சொல்லுக்கான வரையறையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல்].
பாராளுமன்றப் பணியாட்டொகுதி சட்டத்தின் பிரிவு 6, பணியாளர் ஆலோசனைக் குழுவைக் கலந்தாலோசித்து பணியாளர்களை இடைநீக்கம், தண்டனை மற்றும் பணி நீக்கம் செய்வது உட்பட ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் துறைசார் விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரத்தை செயலாளர் நாயகத்திற்கு வழங்குகின்றது.
மொத்தத்தில், முன்னாள் அமைச்சர் குறிப்பிடுவது போன்று நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பாராளுமன்றப் பணியாளர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதை நிர்வகிக்க உள்நாட்டுச் சட்டம் உள்ளதால் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் மரபில் தங்கியிருக்கத் தேவையில்லை. எனவே இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பிரித்தானியப் பாராளுமன்றத்தின் மரபில் பாராளுமன்றம் தங்கியிருப்பதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிடும் முடிவு சரியானதல்ல.
எனவே நாங்கள் முன்னாள் அமைச்சரின் கூற்றை தவறானது என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மேலதிகக் குறிப்பு: “அரச அலுவலர்களுக்கு” பொருந்தக்கூடியதும் பொதுச் சேவை உத்தியோகம் மற்றும் ஒழுக்கம் தொடர்பில் பொது விதிகளைக் குறிப்பிடுவதுமான தாபன விதிக்கோவையும் இந்த உண்மைச் சரிபார்ப்பிற்காக ஆராயப்பட்டது. எனினும், அரசியலமைப்பின் உறுப்புரை 170 மற்றும் தாபன விதிக்கோவை அத்தியாயம் 1 ஆகியவை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகத்துடன் இணைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் “அரச அலுவலர்கள்” இல்லை எனக் குறிப்பிடுகின்றன.
மூலம்
Jayasinghe, P., Reid, P., & Welikala, A. (2019). Parliament: Law, History and Practice. Centre for Policy Alternatives. https://www.cpalanka.org/wp-content/uploads/2023/10/Parliament-Law-History-and-Practice.pdf
Erskine May’s treatise on the law, privileges, proceedings and usage of Parliament (25th edition, 2019)
Establishments Code of the Government of the Democratic Socialist Republic of Sri Lanka Volume I (2013)
Parliamentary Staffs Act No. 9 of 1953 (as amended)
Parliament (Powers & Privileges) Act No. 21 of 1953 (as amended)
The Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka (1978)
Standing Orders of the Parliament of the Democratic Socialist Republic of Sri Lanka (as amended up to November 2022)