அநுர குமார திசாநாயக்க

தித்வா மீட்புப் பணிகளுக்கான நிதி தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்

"

(தித்வா சூறாவளிக்குப் பின்னரான மீட்புப் பணிகளுக்காக) நாங்கள் ஒரு சதம் கூட கடனாகப் பெறவில்லை. அதற்காக நாங்கள் பணத்தை அச்சிடவும் இல்லை. எங்கள் திறைசேரி கணக்கில் ரூ.1.2 ட்ரில்லியன் இருந்தது. அதிலிருந்து நாங்கள் இதற்காக ரூ.500 பில்லியனை ஒதுக்கினோம்.

அநுர குமார திசாநாயக்கவின் யூடியுப் பக்கம் | பிப்ரவரி 11, 2026

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

தித்வா மீட்புப் பணிகளுக்காக அரசாங்கம் ரூ.500 பில்லியனை ஒதுக்கியது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரண்டு கூற்றுக்களை முன்வைக்கின்றார்: (1) இது திறைசேரியில் ஏற்கனவே இருந்த (பணம்) இருப்பான ரூ.1,200 பில்லியனில் (அல்லது ரூ.1.2 ட்ரில்லியன்) இருந்து பெறப்பட்டது. (2) இது கடனாகவோ பணத்தை அச்சிடுவதன் மூலமோ பெறப்படவில்லை.

இந்த இரண்டு கூற்றுக்களையும் மதிப்பிடுவதற்கு, 2025 ஆம் ஆண்டுக்கான சமீபத்திய தரவுகளில் கவனம் செலுத்தி நிதி அமைச்சின் ஆண்டறிக்கைகள் மற்றும் வரவு செலவுத்திட்ட, பொருளாதார மற்றும் நிதி நிலை அறிக்கை 2026 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

திறைசேரி இருப்பு தொடர்பில்: ஆகஸ்ட் 2025 இல் திறைசேரியில் சுமார் ரூ.1,200 பில்லியன் பணம் இருப்பில் இருந்ததை மேலேயுள்ள மூலங்கள் உறுதிப்படுத்துகின்றன. 2026 இல் தித்வா தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கு மேலதிகமாக கடன் வாங்க வேண்டிய தேவையின்றி ஏற்கனவேயுள்ள இந்த நிதியை அரசாங்கத்தால் பயன்படுத்த முடிந்தது என்பதை இது சுட்டிக்காட்டுகின்றது. இந்தக் கண்ணோட்டத்தில் ஜனாதிபதியின் கூற்று சரியாக உள்ளது.

“கடன் வாங்கவில்லை” என்ற கூற்று தொடர்பில்: இந்தக் கூற்று இரண்டு விடயங்களில் தவறாக உள்ளது.

முதலாவது, ஒதுக்கீட்டில் கடனும் உள்ளது – இது முன்னர் பெறப்பட்ட கடன். திறைசேரியின் பண இருப்பானது முந்தைய ஆண்டுகளில் அதிகமாகப் பெறப்பட்ட கடன்களின் மீதத்தால் உருவாக்கப்பட்டது. இது செலவினங்களுக்குப் பின்னர் மேலதிகமாக இருக்கும் வருமானத்தால் உருவாக்கப்பட்டதல்ல. அட்டவணை 1 இல் காட்டப்பட்டது போன்று, 2022 ஆம் ஆண்டில் மொத்தக் கடனானது கடன் மீள்கொடுப்பனவுகள் மற்றும் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தேவையை விடவும் ரூ.605 பில்லியன் அதிகமாக இருந்தது. இதேபோன்று 2023 ஆம் ஆண்டில் ரூ.642 பில்லியன், 2024 ஆம் ஆண்டில் ரூ.131 பில்லியன் மற்றும் ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டில் ரூ.405 பில்லியன் மேலதிகமாக இருந்தன. இவையே ஒன்றாகச் சேர்ந்து திறைசேரியில் பண இருப்பாக இருந்தது. எனவே தித்வா மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட நிதி, இதற்கான ஒதுக்கீட்டின்போது புதிய கடன்களில் இருந்து பெறப்படவில்லை என்றாலும், முன்னர் பெறப்பட்ட கடன்களிலிருந்தே பெறப்பட்டுள்ளது.

இரண்டாவது, மேலதிக இருப்பிலிருந்து தற்போது செலவிடுவது எதிர்காலத்தில் கடன் தேவைகளைப் பாதிக்கும்.முதிர்ச்சியடையும் திறைசேரி உண்டியல்களின் மீள்கொடுப்பனவிற்காகப் புதிய கடனைப் பெறாமல், இந்தப் பண இருப்பிலிருந்து ரூ.500 பில்லியனைச் செலவிடுவதற்கு அரசாங்கத்தின் 2026 கடன் பெறுகைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாகக் கடனைப் பெறாமல் எதிர்காலக் கடன் மீள்கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு இந்தப் பண இருப்பைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பதை இது காட்டுகின்றது. அதே பண இருப்பை தித்வா மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது எதிர்கால மீள்கொடுப்பனவுகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையைக் குறைக்கின்றது. அதாவது, இருப்பிலுள்ள பணத்தை தற்போது அதிகமாகச் செலவிட்டால், புதிதாகக் கடன் வாங்காமல் முதிர்ச்சியடையும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குக் கிடைக்கும் தொகை குறையும்.

மொத்தத்தில், திறைசேரியில் போதுமான பண இருப்பு இருந்ததால் ஒதுக்கீட்டின் போது எந்தவிதப் புதிய கடனையும் பெறும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கவில்லை என்பதில் ஜனாதிபதி குறிப்பிடுவது சரியாக உள்ளது. ஆனால் ஆழமாகப் பார்க்கும்போது, செலவிடுவதற்காக ஒதுக்கிய தொகையில் கடன் எதுவும் இல்லை என்பது தவறானது. செலவிடப்படும் பண இருப்பானது கடந்த காலக் கடன்களிலிருந்து உருவாக்கப்பட்டது. கடன்களை மீளச் செலுத்துவதற்குப் பதிலாக அதைச் செலவிடுவது எதிர்காலத்தில் அதிக கடனைப் பெறுவதற்கு வழிவகுக்கும்.

எனவே நாங்கள் ஜனாதிபதியின் அறிக்கையை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

மேலதிகக் குறிப்பு: குறைநிரப்பு ஒதுக்கீட்டுக்குப் பின்னர் அரசாங்கம் குறிப்பாக தித்வா மீட்பு நடவடிக்கைகளுக்காக கடன்களைப் பெற்றுள்ளது. இந்திய அரசாங்கத்திடம் இருந்து ஐ.அ.டொ 350 மில்லியன் கடன் உறுதிப்பாடு தித்வா மீட்பு நடவடிக்கைகளுக்காக குறிப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 2025 இல் விரைவு நிதியளிப்பு சாதனத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து SDR 150.5 மில்லியன் வரவு செலவுத்திட்ட உதவியும் தித்வா விளைவுகளைக் கையாள்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஏற்கனவே வழங்கிய கடன்களின் நோக்கத்தை மாற்றி தித்வா மீட்பு பணிகளுக்காக வழங்கியுள்ளன. இந்தக் கடன்கள் பொதுப் படுகடனை நேரடியாக அதிகரிக்கின்றன.

அட்டவணை 1: அரசாங்கத்தின் பணப் பாய்ச்சல் நடவடிக்கைகளின் சுருக்கம்

மூலம்: நிதி அமைச்சின் ஆண்டறிக்கைகள் 2022 – 2024 மற்றும் வரவு செலவுத்திட்ட, பொருளாதார மற்றும் நிதி நிலை அறிக்கை 2026



மூலம்

  1. நிதி அமைச்சு, இலங்கை, ஆண்டறிக்கை 2022 https://www.treasury.gov.lk/api/file/1c6c5c7d-annual-report-2022 [இறுதியாக அணுகியது: மார்ச் 24, 2026].
  2. நிதி அமைச்சு, இலங்கை, ஆண்டறிக்கை 2023 https://www.treasury.gov.lk/api/file/annual-report-2023 [இறுதியாக அணுகியது: மார்ச் 24, 2026].
  3. நிதி அமைச்சு, இலங்கை, ஆண்டறிக்கை 2024 https://www.treasury.gov.lk/api/file/annual-report-2024 [இறுதியாக அணுகியது: மார்ச் 24, 2026].
  4. நிதி அமைச்சு, இலங்கை, வரவு செலவுத்திட்ட, பொருளாதார மற்றும் நிதி நிலை அறிக்கை 2026 https://www.treasury.gov.lk/api/file/budget-economic-fiscal-position-report-2026 [இறுதியாக அணுகியது: மார்ச் 24, 2026].
  5. நிதி அமைச்சு, இலங்கை, வருடாந்தக் கடன் பெறுகைத் திட்டம் மற்றும் படுகடன் முகாமைத்துவ மூலோபாயம் 2026 https://www.treasury.gov.lk/api/file/annual-borrowing-plan-debt-management-strategy-2026 [இறுதியாக அணுகியது: மார்ச் 24, 2026].
  6. சர்வதேச நாணய நிதியம் இலங்கை: பெப்ரவரி 28, 2026 நிலவரப்படி நிதியத்தின் நிலை நிலை https://www.imf.org/external/np/fin/tad/exfin2.aspx?memberkey1=895&date1Key=2026-02-28 [இறுதியாக அணுகியது: மார்ச் 24, 2026].
  7. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு. இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் திட்டத்திற்காக இந்தியா ஐ.அ.டொ 450 மில்லியன் நிவாரணப் பொதியை அளித்துள்ளது, https://pmd.gov.lk/news/india-extends-usd-450-million-relief-package-for-rebuilding-sri-lanka-programme/ [இறுதியாக அணுகியது: மார்ச் 24, 2026].

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன