உண்மைச் சரிபார்ப்புகளும்
தித்வா சூறாவளியைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து துரித நிதியளிப்புச் சாதனத்தின் (RFI) கீழ் இலங்கை மேலதிக நிதியைப் பெற்றுக்கொண்டது. இந்தப் பின்னணியில், பெப்ரவரி 11, 2026 திகதியிடப்பட்ட முதலீட்டாளர் எடுத்துரைப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் துரித நிதியளிப்புச் சாதனத்தின் கீழ் பெறப்பட்ட கடனுக்கு இலங்கை கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதி அமைச்சு பதிலளித்திருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் கூடுதல் கட்டணங்கள் “தானாக விதிக்கப்படுபவை அல்ல” எனவும், “சர்வதேச நாணய நிதியத்தின் நிலுவைத் தொகையானது ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்ட வரம்புகளை நீண்ட காலத்திற்கு மீறினால் மட்டுமே” ஏற்படும் எனவும் பதிலளிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, சர்வதேச நாணய நிதியத்தின் கட்டணங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்களுக்கான கொள்கை தொடர்பில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நாட்டுக்கான அறிக்கை இல.25/339 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களுக்கு இரண்டு வகையான கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படலாம்.
முதலாவது மற்றும் அதிகமானது, கடன் மட்டத்தை (level-based) அடிப்படையாகக் கொண்ட 2 சதவீதப் புள்ளிகள் கூடுதல் கட்டணம் ஆகும். ஒரு நாடு சர்வதேச நாணய நிதியத்திற்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை அதன் ஒதுக்கீட்டை விட 300% அதிகரிக்கும்போது இது உடனடியாக நடைமுறைக்கு வரும். இந்தக் கூடுதல் கட்டணத்திற்கு காத்திருப்பு காலம் எதுவும் கிடையாது. வரம்பைத் தாண்டியவுடன் இது தானாகவும் உடனடியாகவும் நடைமுறைப்படுத்தப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் நாட்டுக்கான அறிக்கையின் பிரகாரம், துரித நிதியளிப்புச் சாதனக் கடனான ஐ.அ.டொ 206 பில்லியன் வழங்கப்பட்டதும் இலங்கை 300% என்னும் ஒதுக்கீட்டைத் தாண்டுவதனால் அந்த 300% என்னும் மட்டத்தைத் தாண்டிய தொகைக்கு உடனடியாக கடன் மட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இரண்டாவது கூடுதல் கட்டணம் நேரத்தை (time-based) அடிப்படையாகக் கொண்ட கூடுதல் 0.75 சதவீதப் புள்ளிகள் ஆகும். இது கடன் மட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கூடுதல் கட்டணத்தைப் போன்றே அறவிடப்படும். ஆனால் கடன் நிலுவைத் தொகை 300% என்னும் ஒதுக்கீட்டை விட நீண்ட காலத்திற்கு – வழங்கப்பட்ட கடன் வசதியைப் பொறுத்து வழமையாக 36 அல்லது 51 மாதங்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே அறவிடப்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கூடுதல் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சு வழங்கிய பதிலில் “ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்ட வரம்புகளை விட சர்வதேச நாணய நிதியத்தின் நிலுவைத் தொகை நீண்ட காலத்திற்குஅதிகரித்தால் மட்டுமே “அவை” (பன்மை, இரண்டு கட்டணங்களையும் குறிப்பிடுகின்றது) ஏற்படும் எனப் பதிலளித்திருந்தது. இந்தக் கூற்று தவறானது. ஏனெனில் ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்ட வரம்பைத் தாண்டியதும் கடன் மட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கூடுதல் கட்டணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டியிருக்கும். துரித நிதியளிப்புச் சாதனக் கடன் வழங்கப்பட்டதும் இலங்கைக்கு இந்த நிலைமையே ஏற்பட்டது.
எனவே நாங்கள் இந்த அறிக்கையைத் தவறானது என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டேFactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளைFactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மேலதிகக் குறிப்பு: RFI கடன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 300% ஒதுக்கீடு தாண்டியதும், சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து கடன் வழங்கல்களும் (சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டம் உட்பட) மேலதிகமாக கடன் மட்டத்தை அடிப்படையாகக் கொண்ட 2 சதவீத கூடுதல் கட்டணத்திற்கு உட்படும். தற்போதைய திட்டத்தின் கீழான கடன் வழங்கல்களில் RFI இல்லாமல் 300% வரம்பை எட்டியிருந்தாலும் இந்தக் கூடுதல் கட்டணம் அறவிடப்பட்டிருக்கும்.
FactCheck.lk என்பது வெரிட்டே ரிசேர்ச்சினால் முன்னெடுக்கப்படும் ஒரு தளம் ஆகும்.
மேலும் பல உண்மைச் சரிபார்ப்புகளுக்கு, www.factcheck.lk என்னும் எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுங்கள்.
மூலம்
International Monetary Fund, “Frequently Asked Questions on the Fund’s Charges and the Surcharge Policy,” last updated 11 October 2024, at, https://www.imf.org/en/about/faq/charges-and-surcharge-policy
International Monetary Fund, Sri Lanka: Request for Purchase Under the Rapid Financing Instrument—Press Release; Staff Report; and Statement by the Executive Director for Sri Lanka, IMF Country Report No. 25/339, 19 December 2025, at,https://www.imf.org/en/publications/cr/issues/2025/12/19/sri-lanka-request-for-purchase-under-the-rapid-financing-instrument-press-release-staff-572679