உண்மைச் சரிபார்ப்புகளும்
ஜுலை 24, 2026 அன்று பூகொடையில் புதிதாக அமைக்கப்பட்ட நீதிமன்றக் கட்டடத் தொகுதியைத் திறந்துவைக்கும் நிகழ்வில், நீதி அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார மேற்கண்ட கூற்றைத் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் கூற்றைச் சரிபார்ப்பதற்கு, FactCheck.lk இரண்டு பிரதான கருதுகோள்களை மதிப்பீட்டிற்கு உட்படுத்தியது: (1) அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொதுவாக ஒரு மில்லியன் சனத்தொகைக்கு குறைந்தது 40 முதல் 60 வரையான நீதிபதிகள் உள்ளனர்; மற்றும் (2) இலங்கையில் ஒரு மில்லியன் சனத்தொகைக்கு சுமார் 20 நீதிபதிகள் உள்ளனர். நீதிபதிகளின் எண்ணிக்கை தொடர்பான தரவுகள் பிரதானமாக நீதிக்கான வினைத்திறன் தொடர்பான ஐரோப்பிய ஆணைக்குழு (CEPEJ), போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் (UNODC), மற்றும் இலங்கை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டன.
முதலாவது கருதுகோள்தொடர்பில், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட 28 அபிவிருத்தியடைந்த நாடுகளின் தரவுகளை FactCheck.lk பரிசீலனை செய்தது (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்). இந்த ஆய்விற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் வளர்ச்சியடைந்த பொருளாதாரங்கள் என்ற வகைப்படுத்தலையும், உலக வங்கியின் உயர் வருமானம் பெறும் பொருளாதாரங்கள் என்ற வகைப்படுத்தலையும் அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி அடைந்த நாடுகள் அடையாளம் காணப்பட்டன.
உயர் வருமானம் பெறும் நாடுகளுக்கிடையே குறிப்பிடத்தக்க அளவிலான வேறுபாடுகள் காணப்படுவதை அட்டவணை 1 இல் உள்ள ஒப்பீடானது காட்டுகின்றது (மேலதிகக் குறிப்பு 2 ஐப் பார்க்கவும்). ஹொங்கொங் விசேட நிர்வாகப் பிராந்தியத்தில் ஒரு மில்லியன் பேருக்கு 22.3 நீதிபதிகள் என்பதிலிருந்து, கிரேக்கத்தில் 373 நீதிபதிகள் என்பது வரை எண்ணிக்கைகள் வேறுபட்டுக் காணப்பட்டன. எனினும், பரிசீலிக்கப்பட்ட 28 நாடுகளில் 23 இல் ஒரு மில்லியன் பேருக்கு குறைந்தது 40 நீதிபதிகளும், 21 நாடுகளில் குறைந்தது 60 நீதிபதிகளும் உள்ளனர். எனவே, ஒரு மில்லியன் பேருக்கு 40 முதல் 60 நீதிபதிகள் என்பது அபிவிருத்தியடைந்த நாடுகள் முழுவதிலும் சீரான நியம அளவுகோலாக இல்லாத போதிலும், அபிவிருத்தியடைந்த நாடுகளில் பொதுவாக ஒரு மில்லியன் சனத்தொகைக்கு 40 முதல் 60 வரையான அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான நீதிபதிகள் உள்ளனர் என்ற அமைச்சரின் நிலைப்பாட்டினைத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
இரண்டாவது கருதுகோள் தொடர்பில், டிசம்பர் 31, 2025 நிலவரப்படி உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய நீதிசார் கட்டமைப்புகள் உள்ளடங்கலாக 419 நீதிபதிகளையும் ஏனைய நீதித்துறை உத்தியோகத்தர்களையும் நீதி அமைச்சின் வருடாந்த அறிக்கை பதிவு செய்துள்ளது.
இலங்கையின் சமீபத்திய சனத்தொகை கணக்கெடுப்பு 21.78 மில்லியன் சனத்தொகையைப் பதிவு செய்துள்ளது. இச்சனத்தொகையினால் 419 நீதித்துறை உத்தியோகத்தர்களை வகுக்கும் போது, ஒரு மில்லியன் சனத்தொகைக்கு சுமார் 19.2 நீதிபதிகள் என்ற விகிதம் பெறப்படுகின்றது. இது ஒரு மில்லியனுக்கு 20 நீதிபதிகள் என்ற அமைச்சரின் புள்ளிவிபரத்துடன் ஒத்துப்போகின்றது.
அதன் பிரகாரம், கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகள் அமைச்சரின் கூற்றின் இரண்டு பகுதிகளையும் உறுதிப்படுத்துகின்றன: பரிசீலிக்கப்பட்ட பெரும்பாலான அபிவிருத்தியடைந்த நாடுகள் ஒரு மில்லியன் சனத்தொகைக்கு 40க்கும் மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்டுள்ளன, அதேவேளை இலங்கை சுமார் 20 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.
எனவே, அமைச்சரின் கூற்றை உண்மையானது என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.
மேலதிகக் குறிப்பு 1: பல்வேறு நீதித்துறை அமைப்புகளில் ‘தொழில்சார் நீதிபதி’ என்பதற்கு ஒரே மாதிரியான வரைவிலக்கணத்தைப் பயன்படுத்தும், முழுமையாக ஒப்பிடக்கூடிய உலகளாவிய தரவுத்தொகுப்பு எதுவுமில்லை என்பதால், நாடுகளுக்கிடையிலான ஒப்பீடுகளை ஒரு குறியீடாகவே கருத வேண்டும். எனினும், இது தரவுகளில் காணப்படும் பொதுவான போக்கை எந்த வகையிலும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றுவதில்லை.
மேலதிகக் குறிப்பு 2: இந்த சர்வதேச ஒப்பீடானது நியாயமான அளவில் கிடைக்கக்கூடிய, அண்மைக்கால ஒப்பிடத்தக்க தரவுகளைப் பயன்படுத்துகின்றது. பெரும்பாலான அவதானிப்புகள் 2022 ஆம் ஆண்டிற்கு உரியவை. எனினும், சில நாடுகள் முந்தைய ஆண்டுகளின் சமீபத்திய தரவுகளைப் பயன்படுத்தியுள்ளன. நாடு அளவிலான முழுமையான தரவுகள், தரவுகளுக்குரிய ஆண்டுகள் மற்றும் மூலங்கள் என்பன அட்டவணை 1 இல் விபரிக்கப்பட்டுள்ளன.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.





மூலம்
- நீதிக்கான வினைத்திறன் தொடர்பான ஐரோப்பிய ஆணைக்குழு (CEPEJ), ‘CEPEJ-STAT: ஐரோப்பிய நீதித்துறை அமைப்புகளின் இயங்குநிலைத் தரவுத்தளம்’ [https://www.coe.int/en/web/cepej/cepej-stat]
- போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் (UNODC), ‘குற்றவியல் நீதித்துறை ஆளணியினர்’, UNODC தரவுத் தளம் [https://data.unodc.org/datareport/cjs-personnel]
- நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, வருடாந்த செயலாற்றுகை அறிக்கை 2025 (இலங்கை அரசாங்கம் 2025) https://www.moj.gov.lk/images/pdf/Annual_Performance/PerformanceReport-2025-E.pdf
- தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், சனத்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு 2024: இறுதி அறிக்கை (இலங்கை அரசாங்கம் 2025) https://www.statistics.gov.lk/Resource/en/Population/CPH_2024/CPH2024_Final_Eng.pdf