உண்மைச் சரிபார்ப்புகளும்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நிகழ்வொன்றில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் கையிருப்புகளின் போதாமை குறித்து கவலை தெரிவித்திருந்தார். தனது வாதத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், மார்ச் 2027 இல் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் முடிவடையும் போது எட்டப்பட வேண்டிய ஐ.அ.டொ 14.2 பில்லியன் கையிருப்பு இலக்கிற்குத் தேவையான கையிருப்பில், நாடு 50% ஐக் கூட அடையவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இக்கூற்றைச் சரிபார்ப்பதற்காக, இலங்கை மத்திய வங்கியின் வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள் மற்றும் “விரைவான நிதியளிப்பு வசதியின் கீழ் கொள்வனவு செய்வதற்கான கோரிக்கை” என்ற தலைப்பிலான IMF நாட்டின் அறிக்கை இல. 25/339 ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடும் ஐ.அ.டொ 14.2 பில்லியன் என்ற ஒதுக்குக்கான இலக்கு, இலங்கையின் IMF திட்டத்தில் 2027 ஆம் ஆண்டிற்காக எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாகும். இக்கூற்று வெளியிடப்பட்ட நேரத்தில் 2027 ஆம் ஆண்டிற்கான மொத்த அலுவல்சார் கையிருப்பிற்கான கணிப்பு சுமார் ஐ.அ.டொ 13.4 பில்லியனாக இருந்ததுடன், அது பின்னர் மேலும் குறைத்து திருத்தப்பட்டுள்ளது (விளக்கப்படம் 1 ஐப் பார்க்கவும்).
நாட்டின் கையிருப்புகள் உண்மையில் போதுமானதாக உள்ளதா என்பதே இங்குள்ள பிரதான கேள்வியாகும். IMF திட்ட மதிப்பாய்வு ஆவணங்கள் “ஒதுக்குகளின் போதிய தன்மையை மதிப்பிடுவதற்கான” (ARA) அளவுகோலை முன்வைக்கின்றன. இது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்குகள் போதுமானதாகக் கருதப்படுவதற்குத் தேவையான குறைந்தபட்ச மட்டத்தைக் கணக்கிடுகின்றது. இலங்கைக்கு 2026 ஆம் ஆண்டிற்காகக் கணக்கிடப்பட்ட ARA ஐ.அ.டொ 11.5 பில்லியன் ஆகும் (இது எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பதை அறிய மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்).
எதிர்க்கட்சித் தலைவர் தனது கூற்றை வெளியிட்ட போது, கையிருப்புகள் குறித்த தரவுகள் 2026 பெப்ரவரி வரை மட்டுமே பகிரங்கமாகக் கிடைக்கப்பெற்றிருந்தன. அக்காலப்பகுதியில், சீன மக்கள் வங்கியின் (PBoC) பரஸ்பர நாணயப் பரிமாற்றல் தொகையையும் சேர்த்து, மொத்த ஒதுக்குகள் ஐ.அ.டொ 7.3 பில்லியனாக இருந்தன. பரஸ்பர நாணயப் பரிமாற்றல் பயன்படுத்துவதற்கு நிபந்தனைகளைக் கொண்டுள்ளதால் ஒதுக்குச் சொத்தாகத் தகுதி பெறாது. PBoC பரஸ்பரப் பரிமாற்றல் தொகையைத் தவிர்த்து, மொத்த ஒதுக்குகள் ஐ.அ.டொ 5.8 பில்லியனாக இருந்தன. ARA அளவுகோலுடன் ஒப்பிடுகையில், இந்த ஐ.அ.டொ 5.8 பில்லியனானது சுமார் 51% ஆகும்.
இலங்கையின் ஒதுக்குகள் போதுமானது எனக் கருதப்படும் மட்டத்தில் பாதியளவு மட்டுமே உள்ளது என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றை இக்கணக்கீடு உறுதிப்படுத்துகின்றது. ஒதுக்குகள் போதுமான மட்டத்தில் சுமார் பாதியளவே உள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் சரியான முடிவை எட்டியிருந்தாலும், அவர் வேறுபட்ட கணக்கீட்டைப் பயன்படுத்தியே அதைச் செய்கின்றார். மேலும் அவர் முன்வைக்கும் பெறுமதிகளும் (ஐ.அ.டொ 14.2 பில்லியன் இலக்கு மற்றும் ஐ.அ.டொ 7 பில்லியன் கையிருப்புகள்) சற்றே மிகைப்படுத்தப்பட்டவை ஆகும்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவரின் இக்கூற்றை பகுதியளவு உண்மையானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
விளக்கப்படம் 1: ஒவ்வொரு மதிப்பாய்வின் போதும் மொத்த அலுவல்சார் ஒதுக்கு கணிப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் (பெறுமதிகள் ஐ.அ.டொ மில்லியனில்)

மேலதிகக் குறிப்பு: கையிருப்புகளின் போதிய தன்மையை மதிப்பிடுதல் (ARA) அளவீடு என்பது, ஒரு நாடு பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு வைத்திருக்க வேண்டிய கையிருப்பின் அளவு குறித்து சர்வதேச நாணய நிதியத்தால் கணிப்பிடப்படும் தொகையாகும். இது ஒரு ஒப்பீட்டு அளவுகோல் தொகை. சர்வதேச நாணய நிதியத்தின் ‘ஒதுக்கின் போதிய தன்மையை மதிப்பிடுதல் பற்றிய வழிகாட்டல் குறிப்பில் (2016)’ விபரிக்கப்பட்டுள்ளவாறு, ஒரு நாடு நெருக்கடிக்கு உள்ளாகும்போது ஒதுக்கைக் குறைக்கக்கூடிய நான்கு காரணிகளைக் கூட்டுவதன் மூலம் இது கணக்கிடப்படுகின்றது: (1) குறுகிய கால வெளிநாட்டுக்கடன், (2) ஏனைய வெளிநாட்டுப் பொறுப்புகள், (3) பணப்புழக்கம் (4) ஏற்றுமதி வருமானங்கள்.
நாட்டின் நாணய மாற்று விகித முறைமை மற்றும் அது மூலதனக் கட்டுப்பாடுகளைப் பேணுகின்றதா என்பதைப் பொறுத்து ஒவ்வொரு காரணிக்குமான முக்கியத்துவம் மாறுபடும். இலங்கையைப் போன்று, சில மூலதனக் கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரமான மிதக்கும் நாணய மாற்று விகிதம் நிலவுவதாகக் கருதினால், இந்த அளவுகோல் பின்வருமாறு கணக்கிடப்படும்:
ARA அளவீடு = (30% × குறுகிய காலக் கடன்) + (15% × ஏனைய பொறுப்புகள்) + (2.5% × பணப்புழக்கம்) + (5% × ஏற்றுமதி)
இந்த அளவீட்டின் கீழ், ARA கணக்கிடப்பட்டு பெறப்படும் தொகையானது இந்த அளவுகோலின் 100% முதல் 150% வரையிலான வரம்பிற்குள் இருந்தால், முன்னெச்சரிக்கை நோக்கங்களுக்காக ஒதுக்குகள் போதுமானதாகக் கருதப்படுகின்றது.
Additional Note
மூலம்
- Weekly Economic Indicators | Central Bank of Sri Lanka
- https://www.imf.org/en/publications/cr/issues/2025/12/19/sri-lanka-request-for-purchase-under-the-rapid-financing-instrument-press-release-staff-572679