உண்மைச் சரிபார்ப்புகளும்
இலங்கையின் தேசியக் கடன் சுமையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 105 சதவீதத்திலிருந்து 95 சதவீதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
மத்திய வங்கி ஆளுநரின் அசல் கூற்றை FactCheck.lk ஆல் நேரடியாகக் கண்டறிய முடியவில்லை. எனினும், ஜூன் 5, 2026 அன்று டெய்லி நியூஸ் உட்பட பல ஊடகங்கள் இந்தக் குறிப்பிட்ட செய்தியை வெளியிட்டிருந்தன. இது ஒற்றை உத்தியோகபூர்வ மூலத்தைக் குறிக்கின்றது. 2022 – 2023 பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனின் விகிதத்தில் ஏற்பட்ட குறைப்பையே அவர் குறிப்பிடுவதாக எண்களும் அறிக்கைகளும் சுட்டிக்காட்டுகின்றன.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட மத்திய அரசாங்க மற்றும் பொதுப்படு கடன் தரவுகள், சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வு அறிக்கைகள் மற்றும் நிதி அமைச்சின் காலாண்டு கடன் திரட்டு (Debt Bulletin) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
ஆளுநர் குறிப்பிடும் பெறுமதிகள் “மத்திய அரசாங்கக் கடனுடன்” மிகவும் நெருக்கமாக உள்ளன. இது 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 104.2% ஆகவும், 2024 இல் 95.5% ஆகவும் பதிவாகியிருந்தது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). எனினும், மத்திய அரசாங்கக் கடன் என்பது கடனின் ஒரு பகுதி அளவீடு மட்டுமே ஆகும். கடன் நிலைத்தன்மை பகுப்பாய்விலும், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலும் பயன்படுத்தப்படும் அளவீடு “பொதுப் படுகடன்” ஆகும். பொதுப் படுகடன் என்பது ஒரு விரிவான அளவீடாகும். இது மத்திய அரசாங்கக் கடன்களை மட்டுமன்றி, மாகாண மற்றும் உள்ளூராட்சி கடன்கள், அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் உத்தரவாதக் கடன்கள் மற்றும் நிலுவையிலுள்ள சர்வதேச நாணய நிதியக் கடன்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. அரசாங்கம் பயன்படுத்தும் இந்தப் பொதுப் படுகடன் அளவீட்டுக்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியின் சர்வதேச பரஸ்பர நாணயப் பரிமாற்றல் உடன்படிக்கைகளையும் IMF திட்டம் பொதுப் படுகடனாகவே பதிவுசெய்கின்றது.
ஆளுநர் குறிப்பிட்ட மத்திய அரசாங்கக் கடனுக்கான பெறுமதிகளுடன் ஒப்பிடுகையில், அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பொதுப் படுகடன் பெறுமதிகள் அதிகமாகும் (IMF திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது இன்னும் அதிகம்). நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட மொத்தப் பொதுப் படுகடன், 2023 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 111.7% ஆகவும், 2024 இல் 103.2% ஆகவும் இருந்தது. எனவே இது தொடர்ந்தும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% இற்கு மேலேயே காணப்பட்டது.
வீழ்ச்சியைப் பொறுத்தமட்டில், 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனின் விகிதம் 10 சதவீதப் புள்ளிகளால் குறைந்துள்ளதாக ஆளுநர் குறிப்பிடுகின்றார். ஆனால், பொதுப் படுகடன் 8.5 சதவீதப் புள்ளிகளாலும், மத்திய அரசாங்கக் கடன் 8.7 சதவீதப் புள்ளிகளாலுமே குறைவடைந்துள்ளன. இவை இரண்டும் அவர் குறிப்பிட்ட பெறுமதியை விட ஒரு சதவீதப் புள்ளிக்கும் மேல் குறைவானவை என்றாலும், ஓரளவு நெருங்கிய மதிப்பீடுகளாக உள்ளன.
மொத்தத்தில், ஆளுநர் மத்திய அரசாங்கக் கடன் தொடர்பில் ஓரளவு சரியான பெறுமதிகளைக் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிகின்றது. எனினும், இது இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்காகக் கண்காணிக்கப்படும் மொத்தப் பொதுப் படுகடன் அல்ல. மேலும், அவர் குறிப்பிடும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடன் விகிதத்தின் வீழ்ச்சியானது, மத்திய அரசாங்கக் கடன் அல்லது பொதுப் படுகடன் ஆகியவற்றின் உண்மையான வீழ்ச்சியை விடவும் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும். எனினும், தேசியக் கடன் சுமையில் ஏற்பட்ட 8.5 சதவீத வீழ்ச்சியானது குறிப்பிடத்தக்க குறைப்பாகும். பெறுமதிகளில் சில முரண்பாடுகள் காணப்படும் போதிலும், இது அவரது கூற்றின் அடிப்படைக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
ஆகவே, மத்திய வங்கி ஆளுநரின் இக்கூற்றை நாங்கள் பகுதியளவு உண்மையானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.


மூலம்
- இலங்கை மத்திய வங்கியின் வருடாந்தப் பொருளாதார மீளாய்வு
- நிதி அமைச்சின் காலாண்டு கடன் திரட்டுக்கள்
- சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள்