ரன்ஜித் சியம்பலாபிடிய

இறக்குமதி தட்டுப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிடிய தவறாகக் குறிப்பிடுகிறார்

"

”...இந்த நடவடிக்கையை எடுத்ததால் தான் (குறிப்பிட்ட பொருட்கள் மீதான இறக்குமதி தடை) அத்தியாவசியப் பொருட்களான எரிபொருள், மருந்து, உரம் ஆகியவற்றை எந்தவித தட்டுப்பாடும் இன்றி இறக்குமதி செய்துகொள்ள முடிகிறது….”

நியூஸ்வயர் | ஜனவரி 26, 2023

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

எரிபொருள், மருந்து, உரம் ஆகியவை எந்தவிதத் தட்டுப்பாடும் இன்றி இறக்குமதி செய்யப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது.

2022ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட அளவு பற்றாக்குறையானதா இல்லையா என்பதை மதிப்பிட 2019ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட அளவை அடிப்படை ஆண்டாக FactCheck.lk  பயன்படுத்தியது. அளவுகள் முழு ஆண்டிற்கும் கடந்த ஆறு மாதங்களுக்கும் ஒப்பிடப்பட்டன. பொருளாதார நெருக்கடி மற்றும் கோவிட் – 19 பெருந்தொற்றுக்கு முன்னதான முதல் ஆண்டு என்பதால் 2019ம் ஆண்டு அடிப்படை (சாதாரண) ஆண்டாகத் தெரிவுசெய்யப்பட்டது. அடிப்படை ஆண்டின் அளவில் குறைந்தபட்சம் 90% இறக்குமதி அளவு எட்டப்பட்டிருந்தால் தட்டுப்பாடு எதுவுமின்றி இறக்குமதி செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டது (2019ம் ஆண்டில் இருந்து 2022ம் ஆண்டில் 8.9 சதவீதத்தால் குறைந்த உண்மையான மொ.உ.உற்பத்தியில் ஏற்பட்ட குறைவைப் போன்று தேவையில் ஏற்படும் குறைவுக்கும் இடமளிக்கப்பட்டது).

முழு ஆண்டுக்கான எரிபொருள் மற்றும் உரத்தின் அளவு 2022ம் ஆண்டில் முறையே 30% மற்றும் 43 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்ததை அட்டவணை 1 காட்டுகிறது. ஆண்டின் இரண்டாவது காலாண்டில், அவை முறையே 34% மற்றும் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளன. முழு ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மருந்துப் பொருட்களின் எடையில் கணக்கிடப்படும் பொருட்கள் 27 சதவீதத்தாலும் எண்ணிக்கையில் கணக்கிடப்படும் பொருட்கள் 46 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளன (அரையாண்டு தரவு கிடைக்கவில்லை).

2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டில் மூன்று பொருட்களினதும் இறக்குமதி அளவு மிகவும் குறைந்துள்ளது. 27% முதல் 46% வரை இறக்குமதி குறைந்துள்ளது. உண்மையான மொ.உ.உற்பத்தியில் ஏற்படும் குறைவுக்கு ஏற்ப எதிர்பார்க்கப்படும் தேவையைச் சரிசெய்த பின்னரும் கூட, எதிர்பார்க்கப்படும் தேவையை விட பொருட்களின் விநியோகத்தில் பாரிய தட்டுப்பாடு உள்ளதை இது சுட்டிக்காட்டுகிறது.

ஆகவே நாங்கள் இராஜாங்க அமைச்சரின் அறிக்கையை தவறானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: அளவுகளில் ஏற்பட்ட மாற்றம் (2019 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கு இடையே முழு ஆண்டு மற்றும் அரையாண்டு ஒப்பீடு)

*மருத்துவம் மற்றும் மருந்துகளுக்கான பொருட்களுக்கு, அளவானது அலகுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

**எச்.எஸ் குறியீடுகள் 900130, 900140, 901831, 901839, 902140, 902150 ஆகியவற்றின் அளவுகள் எடையில் (கி.கி) இன்றி அலகுகளின் எண்ணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

 

அட்டவணை 2: மதிப்பில் மாற்றம் (முழு ஆண்டு ஒப்பீடு)

 



Additional Note

அளவுகளில் பாரிய வீழ்ச்சி காணப்படும் போதும் இந்தப் பொருட்களுக்கு ஐ.அ.டொலர் பெறுமதி அடிப்படையில் செலவு குறையவில்லை அல்லது செலவு இன்னும் அதிகரித்துள்ளதை அட்டவணை 2 காட்டுகிறது. 2022ம் ஆண்டில் அதிக ஐ.அ.டொ பெறுமதியில் இறக்குமதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை இது காட்டுகிறது. இறக்குமதிகளின் பெறுமதியை மாத்திரம் கணக்கில் கொண்டு மதிப்பிடுவது குறைந்தளவான பற்றாக்குறை அல்லது எந்தவித பற்றாக்குறையும் இல்லை என்ற தவறான கருத்தைத் தரும். இந்த உண்மைச் சரிபார்ப்பில் கவனத்தில் கொள்ளப்பட்ட அளவானது பாரியளவான பற்றாக்குறை உள்ளதை வெளிப்படுத்துகிறது.


மூலம்

இலங்கை மத்திய வங்கி, வெளிநாட்டுத்துறை புள்ளிவிபரங்கள், https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector மூலம் பெறப்பட்டது

ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, வர்த்தகப் புள்ளிவிபரங்கள், https://stat.edb.gov.lk/ மூலம் பெறப்பட்டது

சர்வதேச நாணய நிதியம், “சர்வதேச நாணய நிதியப் பணியாளர்கள் இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட நிதியுதவி ஏற்பாட்டிற்கான அலுவலர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர்”. செப்டெம்பர் 1 2022,  Ihttps://www.imf.org/en/News/Articles/2022/09/01/pr22295-imf-reaches-staff-level-agreement-on-an-extended-fund-facility-arrangement-with-sri-lanka மூலம் அணுகப்பட்டது

நிதியமைச்சு, இலங்கை முதலீட்டாளர்கள் விளக்க ஆவணம், https://www.treasury.gov.lk/api/file/20adcaf7-874b-48da-9bc2-69240015cd7c மூலம் அணுகப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன