அலி சப்ரி

வங்குரோத்து நிலை குறித்த சப்ரியின் அறிக்கை தவறானது

"

சிலர் இலங்கை வங்குரோத்து நிலையை (Bankruptcy) அடைந்துவிட்டதாகக் கூறுகின்றனர். நாட்டின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் பெறுமதியின் அடிப்படையில் மாத்திரம் வங்குரோத்து நிலை தீர்மானிக்கப்படுவதில்லை.

டெய்லி நியூஸ் | ஏப்ரல் 9, 2022

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கையின் சொத்துக்கள் ஐ.அ.டொ 400 பில்லியன், அதன் பொறுப்புகள் ஐ.அ.டொ 47 பில்லியன். எனவே இலங்கை வங்குரோத்து நிலையை அடையவில்லை எனவும் ஆனால் நாளாந்தச் செலவினங்களுக்குத் தேவையான டொலர்கள் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

தேசியக் கணக்கியலின் பிரகாரம், வங்குரோத்து என்னும் பதம் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது. கணக்கியலில் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமை (insolvency) என்ற பதம் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கூற்றைச் சரிபார்க்க 1) கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமை 2) கையிருப்பில் பணமின்மை (Illiquidity) ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசம் குறித்து FactCheck.lk ஆராய்கிறது.

சர்வதேச வரைவிலக்கணங்களின் அடிப்படையில், ஒரு நாடு கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய நிலையில் இருக்குமானால், அதன் திட்டமிடப்பட்ட எதிர்கால செலவினங்களின் (வட்டிக் கொடுப்பனவுகள் உட்பட) தற்போதைய மதிப்பானது திட்டமிடப்பட்ட அனைத்து எதிர்கால வருமானங்களின் தற்போதைய மதிப்பை விட அதிகமாக இருக்கக்கூடாது. பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியான சாத்தியமான கொள்கைகளுக்குள் இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்ய முடியாது என எதிர்பார்க்கப்படும்போது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என மதிப்பிடப்படுகிறது. கையிருப்பில் பணமின்மை என்பது கடன் பெறுநரின் சொத்துக்கள் (உடனடியாகப் பணமாக மாற்றக்கூடியவை) மற்றும் கிடைக்கக்கூடிய நிதியுதவிகள் மூலம் கடனுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளைக் குறிப்பிட்ட காலப்பகுதிக்குகள் செலுத்தப் போதுமானதாக இல்லாதபோது ஏற்படும் நிலையைக் குறிக்கிறது. ஆகவே ஒரு நாடு கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய நிலையில் இருந்தாலும் கையிருப்பில் பணமின்மை எனும் நிலை ஏற்படலாம்.

அந்த வகையில், இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையை அடையவில்லை, ஆனால் அதன் கையிருப்பில் பணமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதாக FactCheck.lk விளங்கிக் கொள்கிறது.

இலங்கையின் ஆலோசனையுடனான சர்வதேச நாணய நிதியத்தின் 2021க்கான அறிக்கையின் உறுப்புரை IVன் பிரகாரம், (இதை இலங்கையும் ஏற்றுக்கொண்டுள்ளது) நாட்டின் “பொதுப்படுகடனைத் தீர்க்க முடியாத நிலையில் இருப்பதுடன் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல் இருக்கிறது“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய நிலையில் இருக்கிறது (அவர் “வங்குரோத்து“ நிலையை அடையவில்லை எனக் குறிப்பிடுகிறார்) என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் கருத்துடன் இந்த மதிப்பீடு முரண்படுகிறது.

இலங்கையிடம் பொறுப்புகளை விட சொத்துக்கள் அதிகம் இருப்பதாக குறிப்பிடும் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரிபார்க்க நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றின் ஆண்டறிக்கைளை FactCheck.lk ஆராய்ந்தது. நிதியமைச்சின் 2020 ஆண்டறிக்கையின் பிரகாரம், 2020ம் ஆண்டின் இறுதியில் மத்திய வங்கி மற்றும் அரசுக்குச் சொந்தமான முக்கிய நிறுவனங்களின் மொத்தச் சொத்துக்களின் பெறுமதி ரூ.12,439 பில்லியன் மட்டுமே, அதாவது ஐ.அ.டொ 66.7 பில்லியன் (2020 இறுதி செலாவணி வீதத்தில்). அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் பங்குகளை இருமுறை கணக்கில் கொண்டதன் காரணமாக அறிக்கையிடப்பட்ட பெறுமதி ஓரளவு அதிகமாகும் (ரூ.13,109 பில்லியன்). மார்ச் 2022 முதல் ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக டொலரில் இந்தச் சொத்துக்களின் பெறுமதி மேலும் குறைந்திருக்கக்கூடும். அதேவேளை, 2020ம் ஆண்டின் இறுதியில் மொத்தப் பொதுப்படு கடன் (மத்திய அரசாங்கத்தின் கடன் மற்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன்) ரூ.16,427 பில்லியன், அதாவது ஐ.அ.டொ 88 பில்லியன். எதிர்கால ஓய்வூதியக் கொடுப்பனவுகளுக்காக ஏற்கனவே திரட்டப்பட்ட பொதுத்துறை பொறுப்புகள் போன்ற குறிப்பிடப்படாத பொறுப்புகளும் கணக்கில் கொள்ளப்பட்டால் இது மேலும் அதிகமாகும். ஆகவே அரசாங்கத்தின் தேறிய சொத்துக்கள் (சொத்துக்களில் இருந்து பொறுப்புகளைக் கழித்தால்) எதிர்மறையில் உள்ளன. ஏனெனில் அரசாங்கத்தின் பொறுப்புகள் அதன் சொத்துக்களை விட அதிகமாக உள்ளன. இது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த அரசாங்கத்தின் தேறிய சொத்துக்கள் குறித்த கருத்துடன் முரண்படுகிறது.

நாடு வங்குரோத்து நிலையில் இல்லை மற்றும் நாட்டின் தேறிய சொத்து நிலை குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டு கூற்றுகளுமே கிடைக்கும் தகவல்களுடன் முரண்படுகின்றன. ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை தவறானது என வகைப்படுத்துகிறோம்.

(குறிப்பு: அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பாதிக்கும் குறைவான கடன்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிடுகிறது. அந்த வகையில் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் அனைத்துக் கடன்களும் சேர்க்கப்பட்டால் பொதுத்துறையின் மொத்தப் பொறுப்புகள் ஐ.அ.டொ 94 பில்லியனாக அதிகரிக்கும்.)

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

UNTAD, கடன் நிலைத்தன்மை குறித்த பகுப்பாய்வு: மின்னணு முறையில் கற்றல் பயிற்சி வகுப்பு, https://vi.unctad.org/debt/debt/m1/definition.html

சர்வதேச நாணய நிதியம், IMF அறிக்கை இல. 22/91, மார்ச் 2022, https://www.imf.org/-/media/Files/Publications/CR/2022/English/1LKAEA2022001.ashx

நிதியமைச்சு ஆண்டறிக்கை 2020

இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2021

  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன