மைத்திரிபால சிறிசேன

ஜனநாயகத்தை அரசியலமைப்பிற்கு எதிரானது என முன்னாள் ஜனாதிபதி தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்

"

யார் (பதவிகளில்) இருந்தாலும் அரசியலமைப்பிற்கு எதிரான ஒரு சம்பவம் நாட்டில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது… மற்றைய விடயம் என்னவென்றால் 225 பாராளுமன்ற உறுப்பினர்களோ தற்போதைய ஜனாதிபதி அல்லது பிரதமரோ நாடு தொடர்பில் தேவைப்படும் தீர்மானத்தை எடுக்க முடியாதுள்ளது. அவர்களின் அதிகாரத்தை மக்கள் இல்லாது செய்துள்ளனர்…

சிரச தொலைக்காட்சியில் பத்திகட நிகழ்ச்சி | ஜூலை 11, 2022

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஜுலை 9, 2022 அன்று இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடி தொடர்பில் அவர் மூன்று வேறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கிறார்: (1) போராட்டத்தின் தீவிரம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியது அரசியலமைப்பிற்கு எதிரான சம்பவம் (2) மக்களின் தலையீடு இன்றி நாடு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு இல்லை (3) தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலாக மக்கள் தங்கள் “இறைமையை” வலியுறுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது.

இந்தக் கூற்றுக்களை ஆராய்வதற்காக இலங்கை அரசியலமைப்பின் விதிகளை FactCheck.lk ஆராய்ந்தது.

முதலாவது கூற்றைப் பொறுத்தவரையில், இறைமை மக்களிடத்தில் உள்ளதாகவும், அதைப் பாரதீனப்படுத்த முடியாது எனவும் அடிப்படை உரிமைகளை இது கொண்டுள்ளதாகவும் அரசியலமைப்பின் உறுப்புரை 3 குறிப்பிடுகிறது (பேச்சு சுதந்திரம், கருத்துத் தெரிவிப்பதற்கான சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் போன்றவை (உறுப்புரை 14(1)(அ) மற்றும் (ஆ)). ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதையும் அரசியலமைப்பு அனுமதிக்கிறது (உறுப்புரை 38(1)(ஆ)). இதன் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களின் போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து அவர் பதவி விலகியது அரசியலமைப்பிற்கு உட்பட்டதாகும். ஆகவே முன்னாள் ஜனாதிபதி சிறிசேன குறிப்பிடுவது போன்று இது அரசியலமைப்பிற்கு எதிரானது அல்ல.

இரண்டாவது கூற்றைப் பொறுத்தவரையில், நாட்டைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திடம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஏனெனில் இந்த முடிவுகளை பொதுமக்கள் தீவிரமாகக் கவனிப்பதுடன் அவற்றை சவாலுக்கு உட்படுத்தப்படலாம் என அவர் கருதுகிறார். எனினும் அவர் பிரச்சினையாகக் குறிப்பிடுவது உண்மையில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய பண்பு ஆகும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இந்த நிலை முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடுவது போன்று பாராளுமன்றத்தின் அதிகாரத்தை இல்லாமல் செய்வதல்ல, அத்துடன் இது அரசியலமைப்பிற்கு எதிரானதும் அல்ல.

மூன்றாவது கூற்றைப் பொறுத்தவரையில், இறைமையானது மக்களிடத்திலேயே உள்ளது என அரசியலமைப்பு தெளிவாகக் குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இறைமையின் (உதாரணம், சட்டப்பூர்வ அதிகாரம்) குறிப்பிட்ட அம்சங்களை வழங்க மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளுக்கு (பாராளுமன்றம் உட்பட) அதிகாரம் வழங்கப்படுகிறது. ஆகவே மக்கள் தங்கள் இறைமையை வலியுறுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானதாக அமையாது. இதற்கு நேர்மாறானது என்னவென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்களின் இறைமைக்கு மேலாக தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவது ஆகும். இது உச்ச நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக, 2018ம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்த சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

மேலேயுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் அறிக்கையை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

சட்ட விதிகள்

இலங்கை அரசியலமைப்பு

 

உறுப்புரை 3

இலங்கைக் குடியரசில் இறைமை மக்களுக்குரியதாகவும் பாரதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும். இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கும்.

 

உறுப்புரை 4

மக்களின் இறைமை பின்வரும் விதமாகப் பிரயோகிக்கப்படவும் அனுபவிக்கப்படவும் வேண்டும்:

(ஈ) அரசியலமைப்பினால் வெளிப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அடிப்படை உரிமைகள், அரசாங்கத்தின் எல்லா உறுப்புக்களாலும் போற்றப்படவும் பேணப்படவும் ஏற்றமளிக்கப்படவும் வேண்டும் என்பதோடு, அவை இதனகத்துப்பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அத்தகைய முறையிற்றவிரவும் அத்தகைய அளவுக்குத் தவிரவும் சுருக்கப்படுதலோ, மட்டுப்படுத்தப்படுதலோ, மறுக்கப்படுதலோ ஆகாது.

 

உறுப்புரை 38

  1. (1) ஜனாதிபதியின் பதவி பின்வரும் சூழ்நிலைகளில் வறிதாதல் வேண்டும் –

(ஆ) அவர் சபாநாயகருக்கு முகவரியிட்டனுப்பும் தம்கைப்பட்ட கடிதத்தின் மூலம் தமது பதவியைத் துறந்தால்.

 

 

 மூலம்

சிரச தொலைக்காட்சியில் பத்திகட நிகழ்ச்சி, ஜுலை 11: https://www.youtube.com/watch?v=bfi0bHpTFb8  

இலங்கை அரசியலமைப்புச் சட்டம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது