உண்மைச் சரிபார்ப்புகளும்
பாராளுமன்ற உறுப்பினர் பின்வரும் மூன்று விடயங்களைக் குறிப்பிடுவதாக FactCheck.lk விளங்கிக் கொள்கிறது. 2021ம் ஆண்டில் (1) 507,000 பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துநர்கள் காணப்பட்டனர் (2) அவர்களில் 68,000 நிறுவனங்கள் (3) 292,000 தனிநபர்கள்.
இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளை FactCheck.lk ஆராய்ந்தது.
முதலாவது கூற்றைப் பொறுத்தவரையில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 2021 செயலாற்றுகை அறிக்கையின் அட்டவணை 2.13ல் “பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துநர்களின் மொத்த எண்ணிக்கை” 507,905 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுடன் பொருந்துகிறது (அட்டவணை 1). எனினும் அறிக்கையிடப்பட்ட எண்ணிக்கை தவறாகத் தலைப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையிடப்பட்ட எண்ணிக்கை வரி செலுத்துநர் பதிவுகளின் எண்ணிக்கை. மாறாக பதிவுசெய்யபட்ட வரி செலுத்துநர்களின் எண்ணிக்கை அல்ல. இவற்றுக்கிடையே வித்தியாசம் உள்ளது.
பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துநர்களின் எண்ணிக்கை என்பது வரியைச் செலுத்துவதற்காகப் பதிவுசெய்துள்ள அமைப்புகளின் (தனிநபர் அல்லது நிறுவனம்) எண்ணிக்கையைக் குறிக்கிறது. வரி செலுத்துநர் பதிவுகளின் எண்ணிக்கை என்பது பல்வேறு வகையான வரிகளைச் செலுத்துவதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் செய்யப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. ஒரு வரிசெலுத்தும் அமைப்பு பல்வேறு வரிகளைச் செலுத்துவதற்காகப் பதிவுசெய்ய வேண்டிய தேவை உள்ளது. இதன் காரணமாக பதிவுகளின் எண்ணிக்கை வரிசெலுத்துபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். உதாரணமாக, ஒரு நிறுவனமானது நிறுவன வருமான வரி மற்றும் பெறுமதி சேர் வரி ஆகிய இரண்டுக்கும் பதிவுசெய்திருக்கலாம். இது இரண்டு தனித்தனி பதிவுகளாகக் கருதப்படும். எனினும் வரி செலுத்துபவர் ஒருவர் தான்.
செயலாற்றுகை அறிக்கை வரிசெலுத்துநர் பதிவுகளின் எண்ணிக்கையை குறிப்பிடுகிறது. ஆனால் வரிசெலுத்துபவர்களின் எண்ணிக்கை எனத் தவறாகத் தலைப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையின் மும்மொழிப் பதிப்புகளிலும் (ஆங்கிலம், சிங்களம், தமிழ்) இவ்வாறே காணப்படுகிறது. ஆகவே பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துநர்களின் எண்ணிக்கை 507,000 என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று செயலாற்றுகை அறிக்கையுடன் பொருந்தினாலும் அது தவறானது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது கூற்றைப் பொறுத்தவரையில், அமைச்சர் குறிப்பிடும் 68,000 நிறுவனங்கள் மற்றும் 292,000 தனிநபர் வரிசெலுத்துநர்கள் என்ற எண்ணிக்கை செயலாற்றுகை அறிக்கையுடன் பொருந்துகின்றன (அட்டவணை 1). செயலாற்றுகை அறிக்கையிலுள்ள எண்ணிக்கையைப் பாராளுமன்ற உறுப்பினர் சரியாகக் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் குறிப்பிடும் ஒரு எண்ணிக்கை செயலாற்றுகை அறிக்கையில் தவறாகத் தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே அவரது அறிக்கையை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1 – 2021ம் ஆண்டுக்கான வரிப் பதிவுகளின் மொத்த எண்ணிக்கை
மூலம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை, அணுகுவதற்கு :
http://www.ird.gov.lk/en/publications/Annual%20Performance%20Report_Documents/IR_PR_2021_E.pdf [இறுதியாக அணுகியது: 13 அக்டோபர் 2022]