Anura Kumara Dissanayake

மொத்தப் பொருளாதார நடவடிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தனிநபர் பங்களிப்பிலுள்ள ஏற்றத்தாழ்வாக அநுர குமார திசாநாயக்க தவறாகக் குறிப்பிடுகிறார்

"

இன்று எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 36% மேல் மாகாணத்தில் இருந்து கிடைக்கிறது. நாட்டின் தேசிய செல்வத்தில் வட மத்திய மாகாணத்தின் பங்களிப்பு 5% ஆகும். வட மேல் மாகாணத்தின் பங்களிப்பு 9% ஆகும். பொருளாதாரத்தில் மக்களின் பங்களிப்பைப் பொறுத்து அதன் நன்மைகள் மக்களுக்குக் கிடைக்கும்..

அருண | ஜனவரி 26, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் தனது அறிக்கையில் இரண்டு கூற்றுகளை முன்வைக்கிறார்.

  1. வட மத்திய மாகாணம் போன்ற கிராமப்புற மாகாணங்களை விட மேல் மற்றும் வட மேல் மாகாணங்களின் பொருளாதார நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன
  2. குறைவான பொருளாதார நடவடிக்கை உள்ள மாகாணங்களில் வாழும் மக்கள் பொருளாதாரத்தில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பு குறைவு (அத்துடன் அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளும் குறைவு)

இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கி, இலங்கை தொழிற்படைக் கணக்கெடுப்பு ஆகியவற்றின் 2021ம் ஆண்டுக்கான தரவை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: 2021ம் ஆண்டில் தேசிய மொ.உ.உற்பத்தியில் மேல் மாகாணம் 42.6 சதவீதத்தையும் வட மேல் மாகாணம் 11.1 சதவீதத்தையும் பங்களித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவு காட்டுகிறது. இந்த இரண்டு பெறுமதிகளும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகளை விட அதிகம் ஆகும். அத்துடன் ஏற்றத்தாழ்வும் அதிகம் ஆகும். ஏனெனில் வட மத்திய மாகாணம் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று 4.9 சதவீதத்தை உருவாக்கியுள்ளது. அதாவது மேல் மாகாணமும் வட மேல் மாகாணமும் வட மத்திய மாகாணத்தை விட முறையே 8.7 மடங்கும் 2.3 மடங்கும் அதிகமாக பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பங்களித்துள்ளன.

இந்தப் பெறுமதிகள் ஒவ்வொரு மாகாணங்களுக்கும் இடையிலான பொருளாதார நடவடிக்கையின் ஏற்றத்தாழ்வையே பிரதிபலிக்கின்றன. மாறாக அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் பொருளாதார பங்கேற்பிலுள்ள ஏற்றத்தாழ்வைப் பிரதிபலிக்கவில்லை. ஏனெனில் ஒவ்வொரு மாகாணத்திலும் சனத்தொகை வேறுபடலாம் என்பதுடன் அவர்கள் சொந்த மாகாணங்களைத் தாண்டி வெளியிடங்களிலும்  பணி புரியலாம்.

கூற்று 2:  பொருளாதாரப் பங்கேற்பை மதிப்பிட, மாகாணங்களுக்கு இடையே வேலையில் இருக்கும் நபரின் பொருளாதார உற்பத்தியை FactCheck.lk கவனத்தில் கொண்டது. வட மத்திய மாகாணத்தில் பணியிலுள்ள நபரால் உருவாக்கப்படும் உற்பத்தியை விட மேல் மாகாணத்திலுள்ள ஒருவர் 1.9 மடங்கு அதிகமாகவும் வட மேல் மாகாணத்தில் உள்ள ஒருவர் 1.1 மடங்கு அதிகமாகவும் பங்களிப்பதை அட்டவணை 1 காட்டுகிறது. எனவே பொருளாதார உற்பத்தியில் மாகாணங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு காணப்பட்டாலும் பணியிலுள்ள ஒரு நபரின் பொருளாதார உற்பத்தியில் மாகாணங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவாகவே உள்ளது.

வேலையின்மை வீதம் மற்றும் பணியில் உள்ள பணிபுரியும் வயதிலுள்ளவர்களின் சதவீதம் ஆகியவற்றையும் FactCheck.lk கவனத்தில் கொண்டது. வட மத்திய மாகாணத்தையும் வட மேல் மாகாணத்தையும் விட மேல் மாகாணத்தில் வேலையின்மை மோசமாக உள்ளதை அட்டவணை 1 காட்டுகிறது. மேலும் பணிபுரியும் வயதிலுள்ளவர்களில் பணியில் உள்ளவர்களின் சதவீதமும் வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களை விட மேல் மாகாணத்தில் குறைவாகும். ஆகவே இவை இரண்டாவது கூற்றுடன் முரண்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் சில தவறான தரவைக் குறிப்பிட்டாலும் மேல், வட மேல் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு இடையேயான பொருளாதார உற்பத்தியில் உள்ள புவிவியல் ஏற்றத்தாழ்வைச் சரியாகக் குறிப்பிடுகிறார். எனினும் சனத்தொகை மற்றும் வேலைவாய்ப்பு நிலை ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ளாததால் புவிவியல் ஏற்றத்தாழ்வை அவர் தவறாக பொருளாதார பங்கேற்பில் நபர்களின் ஏற்றத்தாழ்வாக விளக்கியுள்ளார்.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

அட்டவணை 1:  மாகாண ரீதியாக மொ.உ.உ மற்றும் வேலைவாய்ப்பு குறிகாட்டிகள்



Additional Note

வேலையின்மை என்பது வேலையில் இல்லாத ஆனால் வேலை செய்வதற்குத் தயாராகவும் வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் நபர்களினதும் சதவீதத்தை அளவிடுகிறது.


மூலம்

இலங்கை மத்திய வங்கியின் மாகாண ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி (மா.மொ.உ.உ) – 2021, பார்வையிட; https://www.cbsl.gov.lk/en/node/13764 [இறுதியாக அணுகியது 02 மார்ச் 2023]

LFS ஆண்டறிக்கை – 2021, பார்வையிட; http://www.statistics.gov.lk/LabourForce/StaticalInformation/AnnualReports [இறுதியாக அணுகியது 02 மார்ச் 2023]

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன