அநுர குமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake

நுவரெலியாவின் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக அநுர குமார திசாநாயக்க குறிப்பிடும் புள்ளிவிபரங்களில் தடுமாற்றம் காணப்படுகிறது

"

…நீங்கள் இலங்கை முழுவதையும் கருத்தில் கொண்டால் பிறப்பு நிறைக்குறைவு 12.2% ஆகும். ஆனால் நுவரெலியா மலையகச் சமூகத்தை எடுத்துக்கொண்டால் இது 20% ஆகும். பொதுவாக இலங்கையில் 5 வயதிற்கு உட்பட்ட 7.4 சதவீதமான குழந்தைகள் உடற்தேய்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மலையகச் சமூகங்களைப் பொறுத்தவரை இது 8.2% ஆகும்.

அநுர குமார திஸாநாயக்க | நவம்பர் 8, 2022

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கையின் சராசரி ஊட்டச்சத்து குறைபாட்டை விட மலையகத்தில் குறிப்பாக நுவரெலியாவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிக மட்டத்தில் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் குறிப்பிடுகிறார். இந்தக் கூற்றைச் சரிபார்க்க, குடும்ப சுகாதாரப் பணியகம் மற்றும் 2019ம் ஆண்டுக்கான சுகாதார அமைச்சின் வருடாந்த சுகாதார அறிக்கையிலுள்ள தரவை FactCheck.lk ஆராய்ந்தது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டின் ஒரு பிரிவான மந்த போஷனை 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் அளவிடப்படுகிறது: அ) நிறைக்குறைவு (Underweight) வீதம் (வயதிற்கு ஏற்ற சராசரி எடையை விடக் குறைவாக இருத்தல்) ஆ) குன்றிய வளர்ச்சி (Stunting) வீதம் (வயதிற்கு ஏற்ற சராசரி உயரத்தை விடக் குறைவாக இருத்தல்) இ) உடற்தேய்வு (Wasting) வீதம் (உயரத்திற்கு ஏற்ற சராசரி எடையை விடக் குறைவாக இருத்தல்).

பாராளுமன்ற உறுப்பினர் அவரது கூற்றை ஆதரிக்கும் வகையில் குறிப்பிடும் எண்ணிக்கையில் தவறிழைத்துள்ளார் (இது அட்டவணை 1ல் விளக்கப்பட்டுள்ளது):

  1. இலங்கையில் (12.2%) மற்றும் நுவரெலியாவில் (20%) என்ற குழந்தைகளின் நிறைக்குறைவு சதவீதத்தை பிறப்பு நிறைக்குறைவு சதவீதம் எனப் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார்.
  2. இலங்கையில் உடற்தேய்வு (8.2%) மற்றும் குன்றிய வளர்ச்சி (7.4%) ஆகியவற்றுக்கான உண்மையான எண்களை பாராளுமன்ற உறுப்பினர் மாற்றிக் குறிப்பிடுகிறார்.
  3. நுவரெலியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் உடற்தேய்வு சதவீதம் தரவின் பிரகாரம் 9.7% எனக் காணப்படும்போது, பாராளுமன்ற உறுப்பினர் அதைக் குறைத்து 8.2% எனக் குறிப்பிடுகிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் பல எண்களைச் சரியாகக் குறிப்பிட்டாலும் அவற்றை தனது உரையில் தவறான பிரிவுகளில் குறிப்பிடுகிறார். இருப்பினும் சரியான எண்களை சரியான இடத்தில் கருத்தில் கொண்டாலும், பாராளுமன்ற உறுப்பினர் முன்வைக்கும் முதன்மைக் கருத்தான நுவரெலியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகம் என்ற கூற்று சரியாகவுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நிறைக்குறைவு, உடற்தேய்வு, குன்றிய வளர்ச்சி மற்றும் பிறப்பு நிறைக்குறைவு என்பன தேசிய மட்டத்திலான சராசரியை விட நுவரெலியா மாவட்டத்தில் அதிகம் என்பதை அட்டவணை 1 காட்டுகிறது.

எனவே பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிறப்பு நிறைக்குறைவு

மூலம்: குடும்ப சுகாதாரப் பணியகத்தின் ஊட்டச்சத்து தரவு (2021), சுகாதார அமைச்சின் வருடாந்த சுகாதார அறிக்கை (2019)



மூலம்

ஊட்டச்சத்து தரவு 2021, சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதாரப் பணியகம், பார்வையிட, https://drive.google.com/file/d/1moElBzjwYkYbkZRZxXRth1rcUNoKUq0h/view [இறுதியாக அணுகியது: டிசம்பர் 1, 2022]

வருடாந்த சுகாதார அறிக்கை 2019, சுகாதார அமைச்சு, பார்வையிட, http://www.health.gov.lk/moh_final/english/public/elfinder/files/publications/AHB/2020/AHB%202019.pdf [இறுதியாக அணுகியது: டிசம்பர் 1, 2022]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன