ஹர்ஷ த சில்வா

வறுமை நிலை தொடர்பில் பா.உ ஹர்ஷ த சில்வா தவறாகக் குறிப்பிடுகிறார்

"

2019 ஆம் ஆண்டில் 13 சதவீதமாகக் காணப்பட்ட வறுமை நிலை இன்று 25 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக வங்கி குறிப்பிடுகிறது. கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை ஒன்றாகக் கவனத்தில் கொள்ளும்போது, நாட்டிலுள்ள 21 மில்லியன் மக்களில் 12.5 மில்லியன் (அதாவது) 56 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்களை ஏழைகள்...((தொடர்ச்சி)

இலங்கைப் பாராளுமன்றம் | நவம்பர் 15, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

(தொடர்ச்சி) என வகைப்படுத்தலாம் என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பல பரிமாண வறுமை பாதிப்பு மற்றும் UNDP ஆகியன சுட்டிக்காட்டுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் அவரது உரையில், உலக வங்கியின் நிலையான வறுமை நிலை அளவீட்டின் பிரகாரம் இலங்கையின் சனத்தொகையில் 25 சதவீதமானவர்கள் வறுமையில் உள்ளனர் எனக் குறிப்பிடுகிறார். அத்துடன் கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற பல பரிமாணக் காரணிகளைக் கருத்தில் கொள்ளும்போது வறுமை நிலை அதிகமாகவுள்ளது என அவர் வாதிடுகிறார். பல பரிமாண வறுமை சனத்தொகையில் 56 சதவீதமாக உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் (DCS) பல பரிமாண வறுமைக் குறியீடு 2019 மற்றும் பல பரிமாண பாதிப்பு குறியீடு (MVI) 2023 ஐ அடிப்படையாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (UNDP) கொள்கை அறிக்கை ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

கருத்தியல் ரீதியாக, பல பரிமாண வறுமை என்பது உத்தியோகபூர்வ பண வறுமை புள்ளிவிபரங்களிலிருந்து வேறுபடுகிறது. இது வருமானம் அல்லது ஒரு குறிப்பிட்ட பொருட்களைக் கொண்ட கூடையை வாங்கும் திறன் ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்துகிறது. இதற்கு மாறாக, பல பரிமாண வறுமையானது மக்கள் அனுபவிக்கும் சுகாதார நிலை, பாடசாலை ஆண்டுகள் போன்ற பல இன்னல்களைக் கருத்தில் கொள்கிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முந்தைய உண்மைச் சரிபார்ப்பு ஒன்று (இங்கு இணைக்கப்பட்டுள்ளது) உலக வங்கியால் அளவிடப்பட்ட மற்றும் பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கோள் காட்டப்பட்ட பண வறுமை நிலை குறித்த கூற்றுகள் சரியானவை என மதிப்பிட்டது.

இலங்கையில் பல பரிமாண வறுமை தொடர்பான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் 2019 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்படவில்லை. DCS இன் பல பரிமாண வறுமை குறியீட்டிலிருந்து (MPI) பெறப்பட்ட முந்தைய புள்ளிவிபரத்தின் பிரகாரம், 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் 16 சதவீதமானவர்கள் பல பரிமாண ஏழைகளாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் 2019 இல் பண வறுமை 14.3% என DCS மதிப்பிட்டுள்ளதுடன் உலக வங்கி வேறுபட்ட அளவுகோலைப் பயன்படுத்தி 13 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் சனத்தொகையின் இன்னல்கள் தொடர்பான விரிவான மற்றும் நுணுக்கமான விபரத்தை வழங்க இலங்கையின் முதல் MVI ஐ UNDP உருவாக்கியது. இதன் பிரகாரம் இலங்கையின் 55.7 சதவீதமான மக்கள் பல பரிமாணப் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். இந்த MVI பெறுமதியில் இருந்து தான் பாராளுமன்ற உறுப்பினர் 56 சதவீதமானவர்களை ஏழைகள் என வகைப்படுத்தலாம் எனக் குறிப்பிடுகிறார்.

புள்ளிவிபரத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் வழங்கும் விளக்கம் தவறானது. ஏனெனில் பல பரிமாண ‘வறுமை’ மற்றும் ‘பாதிப்பிற்கு’ இடையே ஒற்றுமைகள் இருந்தாலும், அவை வெவ்வேறான பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. ‘பாதிப்பு என்பது வறுமையை விட பரந்த ஒன்றாகும். இது ஒரு நபர் எதிர்கொள்ளக்கூடிய சாத்தியமான ஆபத்துகள் மற்றும் அதிர்ச்சிகளைக் கவனத்தில் கொள்கிறது. அவர்கள் தற்போது வறுமையில் இல்லாவிட்டாலும் இவை பாதகமான விளைவுகளுக்கு வழிவகுக்கும்’ என UNDP குறிப்பிடுகிறது. அதாவது MPI இன் பிரகாரம் ஒரு நபர் பல பரிமாண ஏழையாக வகைப்படுத்தப்படாவிட்டாலும், பல்வேறு காரணங்களுக்காக அவருடைய குடும்பம் பல பரிமாண ரீதியாக பாதிக்கப்படக்கூடியதாகக் கருதப்படலாம். உதாரணமாக, முந்தைய ஆண்டில் அவர்கள் இயற்கை பேரிடரை எதிர்கொண்டிருந்தால் அல்லது குடும்ப உறுப்பினர் வீட்டு வேலை செய்பவராக அல்லது ஊதியமில்லாத தொழிலாளியாக இருந்தால் பாதிக்கப்படக்கூடியவர்களாகக் கருதலாம்.

பண ரீதியான வறுமை அளவீடுகளை விட பல பரிமாண காரணிகளைக் கருத்தில்கொள்ளும்போது அதிகமான மக்கள் ஏழைகளாக வகைப்படுத்தப்படுவார்கள் என்பதில் பாராளுமன்ற உறுப்பினர் சரியாக உள்ளார். ஆனால் UNDPயின் MVI புள்ளிவிபரம் தொடர்பான அவரின் விளக்கம் தவறானது – இலங்கையின் சனத்தொகையில் 56 சதவீதமானவர்கள் பல பரிமாண ரீதியில் ‘ஏழைகளாக’ உள்ளனர் எனக் கருத முடியாது.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை நாங்கள் பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு: MPI மற்றும் MVI புள்ளிவிபரங்களுக்கு இடையிலான வேறுபாடு எளிதானவை அல்ல. ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற்றுவதோ அல்லது ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பெறுவதோ இலகுவானது அல்ல. அவற்றின் வேறுபாடுகள் பல பரிமாணங்களைக் கொண்டவை எனக் கூறலாம். உதாரணமாக, அவை வெவ்வேறு குறிகாட்டிகளைப் பயன்படுத்துவதுடன், இந்தக் குறிகாட்டிகளுக்கு வெவ்வேறு வரையறைகள் உள்ளன. மற்றும் இந்தக் குறிகாட்டிகளைப் பயன்படுத்தும்போது வெவ்வேறு வரம்புகள் பயன்படுத்தப்படுகின்றன (படம் 1 ஐப் பார்க்கவும்).

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

படம் 1: MVI மற்றும் தேசிய MPIமூலம்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (2023). பல பரிமாணப் பாதிப்புகளைப் புரிந்துகொள்ளுதல்: இலங்கை மக்கள் மீதான தாக்கம். https://www.undp.org/sites/g/files/zskgke326/files/2023-10/undp_multidimensional_vulnerability_report_sri_lanka.pdf என்னும் இணைப்பின் ஊடாகப் பெறப்பட்டது.

UNICEF (2023). இலங்கையின் பல பரிமாண வறுமைக் குறியீடு 2019 முடிவுகள்: தேசிய மற்றும் குழந்தை பகுப்பாய்வுகள். https://www.unicef.org/srilanka/media/3706/file/Sri%20Lanka%E2%80%99s%20Multidimensional%20Poverty%20Index%202019%20Results:%20National%20and%20Child%20Analysis.pdf என்னும் இணைப்பின் ஊடாகப் பெறப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன