இரான் விக்கிரமரத்ன

வருமானம் குறைவடைந்தது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தவறாகக் குறிப்பிடுகிறார்

"

வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்திரப்படுத்தல் பாதையை அரசாங்கம் எடுத்திருந்தாலும், அதன் இலக்குகளில் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சி காணப்படுகிறது. உதாரணமாக, கலால் வருமானத்தில் சுமார் 43% பற்றாக்குறை காணப்படுகிறது. (தொடர்ச்சி)

சன்டே ஒப்சேவர் | நவம்பர் 5, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

(தொடர்ச்சி)இது ரூ.214 பில்லியன் என மதிப்பிடப்பட்ட போதும், செப்டெம்பர் (2023) வரையில் ரூ.125 பில்லியன் மட்டுமே சேகரிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வருமான இலக்குகளை எட்டத் தவறிவிட்டதாக நேர்காணல் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் விக்ரமரத்ன குறிப்பிடுகிறார். இந்தக் கூற்றை விளக்குவதற்கு அவர் செப்டெம்பர் 2023 வரை கிடைக்கப்பெற்ற கலால் வருமானத்தில் 43% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறார். ரூ.214 பில்லியன் சேகரிக்கப்படும் என மதிப்பிடப்பட்ட போதும் உண்மையில் ரூ.125 பில்லியன் மாத்திரமே சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க 2024 ஆம் ஆண்டுக்கான அரசிறை முகாமைத்துவ அறிக்கை, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான வரவு செலவுத்திட்ட உரைகள் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

நவம்பர் 2023 இல் வெளியிடப்பட்ட 2024க்கான வரவு செலவுத்திட்ட உரையில், 2023 ஆம் ஆண்டுக்கு எதிர்பார்க்கப்படும் வருமானம் குறைத்து திருத்தப்பட்டது. அந்த ஆண்டுக்கு ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட ரூ.3,415 பில்லியன் எனும் வருமானத்திலிருந்து 16% குறைக்கப்பட்டது. ஆகவே “இலக்கை விட கிடைக்கப்பெற்ற வருமானத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுகிறது” என்ற பாராளுமன்ற உறுப்பினரின் ஒட்டுமொத்த வாதம் சரியாக உள்ளது.

எனினும் அவர் குறிப்பிடும் உதாரணம் இரண்டு காரணங்களால் தவறாகும். பாராளுமன்ற உறுப்பினர் தனது கூற்றை கலால் வரி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கொண்டு விளக்குகிறார். முதலாவதாக, அவர் குறிப்பிடும் பெறுமதி மதுபானத்திற்கான கலால் வரியுடன் மட்டுமே பொருந்துகிறது. மாறாக மொத்த கலால் வரியுடன் பொருந்தவில்லை (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). இரண்டாவதாக, மதுபானத்திற்கான கலால் வரி சேகரிப்பில் வருமானம் குறைந்திருந்தால் கூட 43% வீழ்ச்சி என்பது, 2023 இன் முதல் 9 மாதங்களில் சேகரிக்கப்பட்ட வருமானத்தை (ரூ.124 பில்லியன்) வருடாந்த மதிப்பீட்டுடன் (ரூ.214 பில்லியன்) ஒப்பிட்டு கணக்கிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 9 மாதங்களுக்கான வீழ்ச்சியை 23 சதவீதமாக மதிப்பிட முடியும் (மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்).

சுருக்கமாகக் குறிப்பிடுவதானால், அரச வருமானம் அதன் இலக்கை விடக் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் ஒட்டுமொத்த வாதம் சரியானது. எனினும் (அ) அவர் மதுபானத்திற்கான கலால் வரியில் ஏற்பட்ட வீழ்ச்சியை மட்டும் மதிப்பிடுகிறார், ஒட்டுமொத்த கலால் வரி சேகரிப்பைக் கணக்கில் கொள்ளவில்லை (ஆ) வருடாந்த மதிப்பீட்டுடன் ஒன்பது மாதங்களை மட்டும் ஒப்பிட்டுக் கணக்கிடுகிறார் ஆகிய காரணங்களால் அவர் குறிப்பிடும் உதாரணம் தவறாக உள்ளது.

எனவே, பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை பகுதியளவு சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

மேலதிகக் குறிப்பு: முதல் ஒன்பது மாதங்களில் மதுபானத்திற்கு சேகரிக்கப்பட்ட கலால் வரியின் மாதாந்த சராசரி, வருடத்தின் மீதமுள்ள மாதங்களிற்கும் தொடர்ந்தால் கிடைக்கப்பெறும் மொத்த வருமானம் சுமார் ரூ.165 பில்லியனாக இருக்கும். இதன் மூலம் பற்றாக்குறையானது 43 சதவீதமாக அல்லாமல் 23 சதவீதமாக இருக்கும்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: கலால் வரிகளின் கணக்கீடு (ரூ. பில்லியன்)



மூலம்

அரசிறை முகாமைத்துவ அறிக்கை 2024, நிதி அமைச்சு, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் இலங்கை. https://www.treasury.gov.lk/api/file/0dd9229c-80f6-4248-9ac6-4e935ae9bf6f

வரவு செலவுத்திட்ட உரை 2023. https://www.treasury.gov.lk/news/article/177

வரவு செலவுத்திட்ட உரை 2024. https://www.treasury.gov.lk/web/budget-speeches/section/2024

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன