புபுது ஜயகொட

தொழிலாளர்களின் உண்மையான ஊதியங்கள் தொடர்பான ஜயகொடவின் கூற்று தற்போதைய தரவுகளுடன் ஒத்துப்போகவில்லை மற்றும் முழுமையானதுமல்ல

"

மத்திய வங்கியினால் புதிதாக வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டளவில் ஊதியங்களின் உண்மையான பெறுமதி 24 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அருண | ஜூலை 20, 2026

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

2026 ஜூலை, 20 ஆம் திகதி அருண பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில், தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பாகப் பேசிய முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, மத்திய வங்கியினால் புதிதாக வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டளவில் ஊதியங்களின் உண்மையான பெறுமதி 24% வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள பெயரளவிலான மற்றும் உண்மையான (பணவீக்கத்திற்கு ஏற்ப சரி செய்யப்பட்ட) ஊதிய விகிதச் சுட்டெண்களை FactCheck.lk ஆய்வு செய்தது.

இலங்கை மத்திய வங்கி அனைத்து தொழிலாளர்களையும் உள்ளடக்கிய ஒரு ஊதியச் சுட்டெண்ணை வெளியிடுவதில்லை. அதன் வழக்கமான புள்ளிவிபர அட்டவணைகளில், அரச துறை ஊழியர்கள் மற்றும் முறைசாரா தனியார் துறை ஊழியர்கள் ஆகியோருக்கான ஊதிய விகிதச் சுட்டெண்கள் தனித்தனியாக வெளியிடப்படுகின்றன. இந்த இரண்டும் ஒரே விதமாக மாற்றமடைவதில்லை. எனவே, உண்மையான ஊதியங்களின் பெறுமதி 24% வீழ்ச்சியடைந்துள்ளது என்ற பொதுவான கூற்றை முன்வைப்பதற்கு, அண்மையில் (“புதிதாக வெளியிடப்பட்ட“) வெளியிடப்பட்ட தரவுகள் இந்த வீழ்ச்சியை இரு தொடர்களிலும் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், அவ்வாறு எந்தத் தொடரும் இந்தக் கூற்றை ஆதரிக்கவில்லை.

இரு தரவுத் தொடர்களும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உண்மையான ஊதியங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைக் காட்டுகின்றன. எனினும், சமீபத்திய தரவுகளின்படி வீழ்ச்சியின் அளவு ஜயகொட குறிப்பிடுவதைவிட மிகவும் குறைவாகும். 2025 டிசம்பர் மாதத்தில், அரச துறை ஊழியர்களுக்கான உண்மையான ஊதியச் சுட்டெண் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16.1% வீழ்ச்சியடைந்திருந்தது. அதேவேளை, முறைசாரா தனியார் துறை ஊழியர்களுக்கான உண்மையான ஊதியச் சுட்டெண் 11.8% வீழ்ச்சியடைந்திருந்தது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

FactCheck.lk மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், ஜயகொட குறிப்பிட்டுள்ள 24% வீழ்ச்சி என்ற எண்ணிக்கை, 2025 ஆம் ஆண்டின் இறுதிவரை ஏற்பட்ட வீழ்ச்சியுடன் அல்லாமல், 2024 ஆம் ஆண்டின் இறுதிவரை அரச துறை ஊழியர்களுக்கான உண்மையான ஊதியச் சுட்டெண்ணில் பதிவான வீழ்ச்சியுடன் மட்டுமே பொருந்துகின்றது. எனவே, அவர் குறிப்பிடும் எண்ணிக்கை புதிதாக வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களைப் பிரதிபலிப்பதற்குப் பதிலாக, முன்னர் வெளியிடப்பட்ட தரவுகளில் காணப்பட்ட நிலைமையையே பிரதிபலிக்கின்றது.

மேலும், அவரது கூற்றை கடந்த காலத்திற்குப் பொருத்திப் பார்த்தாலும், முறைசாரா தனியார் துறை ஊழியர்களின் ஊதியம் 14.0% மட்டுமே வீழ்ச்சியடைந்துள்ளது. இது அவர் குறிப்பிட்ட 24% என்ற எண்ணிக்கையை விட மிகவும் குறைவானதாகும்.

மேலும், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்தமாக பணியில் இருந்தவர்களில் அரச துறை ஊழியர்கள் 15.2% மட்டுமே ஆவர். ஒட்டுமொத்த தனியார் துறை ஊழியர்கள் மொத்த வேலைவாய்ப்பில் 45.3% ஆக இருந்தனர். எனினும், முறைசாரா தனியார் துறைக்கான ஊதியச் சுட்டெண் தினசரி கூலி பெறும் தொழிலாளர்களை மட்டுமே உள்ளடக்கியதாகத் தோன்றுகின்றது. மேலும், மொத்த வேலைவாய்ப்பில் இத்தகைய தொழிலாளர்கள் வகிக்கும் பங்கை இலங்கை மத்திய வங்கியின் தரவுகளோ தொழிற்படை கணக்கெடுப்புத் தரவுகளோ வழங்கவில்லை.

சுருக்கமாகக் குறிப்பிடுவதானால், ஜயகொட தெரிவித்த 24% வீழ்ச்சி என்ற எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டின் இறுதிவரை அரச துறை ஊழியர்களின் உண்மையான ஊதியச் சுட்டெண்ணுக்கு மட்டுமே பொருந்துகின்றது. அது அவர் கூறியபடி அண்மையில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான தரவுகளுக்குப் பொருந்தாது. மேலும், பொதுவாக அனைத்து தொழிலாளர்களின் ஊதியங்களுக்கும் பொருந்தாது. அத்துடன், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கப்பெறும் உண்மையான ஊதியத் தரவுகளின்படி, பதிவாகியுள்ள வீழ்ச்சி அவர் குறிப்பிட்ட அளவைவிட மிகவும் குறைவாகும் (16.1% மற்றும் 11.8%).

எனவே, இந்தக் கூற்றை “தவறானது” என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: 2019 டிசம்பர் முதல் 2025 டிசம்பர் வரையிலான அரச துறை மற்றும் முறைசாரா தனியார் துறை ஊதிய விகிதச் சுட்டெண்கள்



மூலம்

இலங்கை மத்திய வங்கி, பெயரளவு மற்றும் உண்மையான ஊதிய விகிதச் சுட்டெண்கள், “விலைகள், கூலிகள் மற்றும் தொழில்நிலை” புள்ளிவிபர அட்டவணைகள் (cbsl.gov.lk). சதவீத மாற்றங்கள் FactCheck.lk இன் கணக்கீடுகளாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன