அனில் ஜயந்த பெர்னாண்டோ

கடன் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் செய்த அதே தவறை அமைச்சர் அனில் ஜயந்தவும் செய்கின்றார்

"

நாட்டின் மொத்தக் கடனை நாம் டொலர்களில் கணக்கிட்டால், தற்போது, அதாவது டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, அது ஐ.அ.டொ 100.3 பில்லியனாக உள்ளது. [...] 2025 டிசம்பர் நிலவரப்படி, எமது மொத்தக் கடனானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95% ஆகும். 2032 ஆம் ஆண்டிற்குரிய இலக்கை நாம் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அடைந்துவிட

ITN News ஃபேஸ்புக் பக்கம் | செப்டம்பர் 2, 2026

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

2025 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் “மொத்தக் கடன்” ஐ.அ.டொ 100.3 பில்லியனாகக் காணப்பட்டது எனவும், இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 95 சதவீதத்திற்குச் சமமானது எனவும் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ ITN News இல் பேசும்போது குறிப்பிட்டார். இதன் அடிப்படையில், இலங்கை தனது 2032 ஆம் ஆண்டுக்குரிய கடன் இலக்கை ஏற்கனவே அடைந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரது கூற்றை ஆராய்வதற்காக, நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட கடன் தரவுகளையும், சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) இலங்கையின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் அறிக்கையிடப்பட்ட கடன் புள்ளிவிபரங்களையும் FactCheck.lk மீளாய்வு செய்தது.

கடன் புள்ளிவிபரங்களை அடையாளப்படுத்துவதிலும் அவற்றை ஒப்பிடுவதிலும் அமைச்சரின் கூற்றில் மூன்று தவறுகள் காணப்படுகின்றன. இதில் சில தவறுகள் ஏற்கனவே மத்திய வங்கி ஆளுநரின் கூற்றிலும் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆகஸ்ட் 12, 2026 அன்று வெளியிடப்பட்ட ‘இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கடன் குறைப்பு குறித்து ஓரளவு சரியாகக் குறிப்பிடுகின்றார்’ என்ற தலைப்பிலான உண்மைச் சரிபார்ப்பைப் பார்க்கவும்.

முதலாவதாக, நாட்டின் “மொத்தக் கடன்” என அவர் குறிப்பிடும் தொகையானது மத்திய அரசாங்கத்தின் கடனாகும். இது கடனின் ஒரு பகுதி அளவீடு மட்டுமே ஆகும். அமைச்சர் குறிப்பிட்ட ஐ.அ.டொ 100.3 பில்லியன் என்ற தொகையானது, நிதி அமைச்சின் மத்திய அரசாங்கக் கடன் அளவீட்டுடன் ஒத்துப்போகின்றது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில், மத்திய அரசாங்கக் கடன் ரூ.31,109 பில்லியனாகக் காணப்பட்டது. இது சுமார்  ஐ.அ.டொ 100.4 பில்லியனுக்கும் , மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95% இற்கும் சமனானதாகும் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). எனினும், மத்திய அரசாங்கக் கடனானது மேலதிகப் பொறுப்புக்களை உள்ளடக்கிய விரிவான அளவீடான பொதுப் படுகடனைப் பிரதிபலிக்கவில்லை (மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்).

இரண்டாவதாக, பொதுப் படுகடனுக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு அமைச்சர் மத்திய அரசாங்கக் கடன் தொகையைப் பயன்படுத்துகின்றார். சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ், பொதுப் படுகடன் “2032 ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 சதவீதத்திற்குக் கீழ் குறைய வேண்டும்” என்பதே பொருத்தமான கடன் கையிருப்பு இலக்காக உள்ளது  (IMF, இலங்கை: நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டிற்கான கோரிக்கை, மார்ச் 2023, இணைப்பு I, பந்தி 7).

மூன்றாவதாக, 2025 ஆம் ஆண்டின் இறுதியில், தொடர்புடைய அளவீடானது (பொதுப் படுகடன்) 95% என்ற வரம்பிற்குக் கீழ் குறையவில்லை. 2025 இன் இறுதியில் பொதுப் படுகடன் அந்த வரம்பிற்கு மேலேயே காணப்பட்டது: நிதி அமைச்சின் அளவீட்டின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 98.30% ஆகவும், சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட அளவீட்டின் கீழ் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101.1% ஆகவும் பதிவாகியிருந்தது (அட்டவணை 1 மற்றும் மேலதிகக் குறிப்பைப் பார்க்கவும்).

சுருக்கமாகக் குறிப்பிட்டால், அமைச்சர் மூன்று தவறுகளை இழைத்துள்ளார்: (1) மத்திய அரசாங்கக் கடனை நாட்டின் “மொத்தக் கடன்” எனக் குறிப்பிட்டுள்ளார்; (2) மத்திய அரசாங்கக் கடன் தொகையை, பொதுப் படுகடன் என்ற பரந்த அளவீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஓர் இலக்கோடு தொடர்புபடுத்தியுள்ளார்; (3) நிதி அமைச்சு மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய இரண்டினதும் அளவீடுகளின்படி பொதுப் படுகடனானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95 சதவீதத்திற்கு மேல் காணப்பட்ட போதிலும் அந்த இலக்கு அடையப்பட்டுவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ கடன் புள்ளிவிபரங்களில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை 2032 ஆம் ஆண்டுக்குரிய பொதுப் படுகடன் இலக்கை 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஏற்கனவே அடைந்துவிட்டது என்ற கூற்று பொருந்தவில்லை.

எனவே, இந்தக் கூற்றை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

அட்டவணை 1: 2025 இறுதியில் இலங்கையின் கடன் கையிருப்பு

மேலதிகக் குறிப்பு: நிதி அமைச்சின் காலாண்டு கடன் திரட்டு, பொதுப் படுகடனானது பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக வரையறுக்கின்றது: (1) மத்திய அரசாங்கக் கடன் (2) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் கடன் (3) அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன். அட்டவணை 1 இல் காட்டப்பட்டுள்ளவாறு, இந்தக் கூறுகள் அனைத்தும் சேர்ந்து 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.32,195 பில்லியனாக அமைந்தன. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 98.30% இற்குச் சமனானதாகும்.

தற்போதைய சர்வதேச நாணய நிதியத் திட்டமானது பொதுப் படுகடனுக்கு பரந்ததொரு வரைவிலக்கணத்தைப் பயன்படுத்துகின்றது. மத்திய அரசாங்கக் கடன் மற்றும் அரச உத்தரவாதமளிக்கப்பட்ட கடன் என்பவற்றுடன் மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியின் குறிப்பிட்ட சில வெளிநாட்டுப் பொறுப்புகளையும் அது உள்ளடக்குகின்றது. இந்த அளவீட்டின் கீழ், 2025 ஆம் ஆண்டில் பொதுப் படுகடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101.1% ஆகக் காணப்பட்டது.

இந்த இரண்டு அளவீடுகளும் வேறுபடும் போதிலும், இரண்டுமே 2025 ஆம் ஆண்டின் இறுதியில் பொதுப் படுகடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 95% இற்கு மேலேயே காட்டுகின்றன (மேலே உள்ள அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் கூற்றை மதிப்பீடு செய்தபோதும் FactCheck.lk இந்த வேறுபாட்டை சுட்டிக்காட்டியிருந்தது. இலங்கையின் கடன் நிலைபேற்றுத்தன்மையை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொதுப் படுகடன் அளவீட்டின் ஒரு பகுதியை மட்டுமே மத்திய அரசாங்கக் கடன் குறிக்கின்றது என்பதை அந்த உண்மைச் சரிபார்ப்பும் இதேபோன்று வெளிப்படுத்தியிருந்தது. பார்க்க: https://factcheck.lk/ta/factcheck/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%a8/

 



மூலம்

சர்வதேச நாணய நிதியம், இலங்கை: நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டிற்கான கோரிக்கை, IMF நாட்டு அறிக்கை இல. 23/116 (IMF 2023) https://www.imf.org/en/publications/cr/issues/2023/03/20/sri-lanka-request-for-an-extended-arrangement-under-the-extended-fund-facility-press-531191

இலங்கை மத்திய வங்கி, வருடாந்தப் பொருளாதார மீளாய்வு 2025 (CBSL 2026) https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-economic-review/annual-economic-review-2025

பொது கடன் முகாமைத்துவ அலுவலகம், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, ‘காலாண்டு புள்ளிவிபரக் கடன் திரட்டு’ (இலங்கை அரசாங்கம்) https://www.treasury.gov.lk/web/public-debt-management-office/section/news

சர்வதேச நாணய நிதியம், இலங்கை: நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள், IMF நாட்டு அறிக்கை இல. 26/111 (IMF 2026) https://www.imf.org/en/publications/cr/issues/2026/05/27/sri-lanka-fifth-and-sixth-reviews-under-the-extended-arrangement-under-the-extended-fund-576370

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன