இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் அவற்றின் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகளால் நிரம்பியுள்ளன

"

தற்போது சிறைச்சாலைகளில் 11,000 கைதிகளுக்கான வசதிகள் மட்டுமே உள்ளன. சுமார் 10,000 கைதிகள் தண்டனை அனுபவித்து வரும் அதேவேளை, ஏனைய 30,000 பேர் தடுப்புக் காவலில் உள்ளனர்.

லங்காதீப | ஜூன் 16, 2026

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

சிறைச்சாலைகளில் நிலவும் இட நெருக்கடி குறித்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (செயற்பாடுகள்/ புலனாய்வு மற்றும் பாதுகாப்பு/ ஊடகப் பேச்சாளர்) (மேலதிகப் பொறுப்பு) அநுருத்த கஜநாயக்க கூறியதாக வெளியான அறிக்கையொன்றில், இலங்கையின் சிறைச்சாலைகள் அவற்றின் கொள்ளளவை விட சுமார் நான்கு மடங்கு அதிகமானவர்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 11,000 பேருக்கான தங்குமிட வசதி மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது சுமார் 40,000 கைதிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் சுமார் 10,000 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்றும், மீதமுள்ள 30,000 பேர் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள சிறைச்சாலை மக்கள் தொகை மற்றும் கொள்ளளவு தரவுகளை, அதன் உத்தியோகபூர்வ புள்ளிவிபர இணையத்தளம் மற்றும் சிறைச்சாலை புள்ளிவிபரங்கள் அறிக்கை 2025 ஆகியவற்றின் மூலம் FactCheck.lk ஆராய்ந்தது.

இந்த அறிக்கையில் இரண்டு விடயங்கள் உள்ளன: (1) சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வகைப்பாடு குறித்த விபரம் (2) சிறைச்சாலைகளின் தங்குமிடக் கொள்ளளவு குறித்த விபரம். இவை ஒவ்வொன்றையும் சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்து, FactCheck.lk அட்டவணை 1 இல் சுருக்கமாகத் தந்துள்ளது.

சிறைச்சாலையில் உள்ளவர்கள்: ஜுலை 5, 2026 நிலவரப்படி, கைதிகளின் மொத்த எண்ணிக்கை 41,257 ஆகக் காணப்பட்டது (கூற்றில் இது 40,000 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது). இந்தக் கைதிகளில் 10,812 பேர் தண்டனை பெற்றவர்கள் (கூற்றில் 10,000 எனக் குறிப்பிடப்பட்டது) மற்றும் 30,445 பேர் தண்டனை பெறாதவர்கள் (30,000 எனக் குறிப்பிடப்பட்டது). இது ஊடகப் பேச்சாளரின் தரவுகள் உத்தியோகபூர்வ எண்களைப் பிரதிபலிக்கின்றன என்பதைக் காட்டுகின்றது.

தங்குமிடக் கொள்ளளவு: கொள்ளளவு தொடர்பில் FactCheck.lk கண்டறிந்த மிகச் சமீபத்திய தரவு 2024 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குரியதாகும். அப்போது 10,395 பேருக்கு தங்குமிட வசதிகள் இருந்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் பதிவு செய்திருந்தது (ஊடகப் பேச்சாளர் 11,000 எனக் குறிப்பிட்டிருந்தார்).

ஜுலை 5, 2026 அன்று பதிவு செய்யப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையையும், 2024 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குரிய கொள்ளளவுத் தரவையும் பயன்படுத்திக் கணக்கிடும்போது, சிறைச்சாலைகளின் நிரம்பல் வீதம் 397% ஆகக் காணப்படுகின்றது. இது தங்குமிடக் கொள்ளளவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்காகும்.

எனவே, சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரின் கூற்றை நாங்கள் ‘உண்மையானது’ என வகைப்படுத்துகிறோம்.

அட்டவணை 1: சமீபத்திய உத்தியோகபூர்வத் தரவுகள் மற்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடும் விபரங்களின் ஒப்பீடு (ஜுலை 5, 2026 நிலவரப்படி கைதிகளின் எண்ணிக்கை; 2024 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குரிய தங்குமிடக் கொள்ளளவு)

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

மேலதிகக் குறிப்பு: சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை ஜுலை 5, 2026க்கு உரியதாகும். அதேவேளை தங்குமிடக் கொள்ளளவு தொடர்பான மிகச் சமீபத்திய தரவு 2024 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குரியதாகும். எனவே, இங்கு கணக்கிடப்பட்ட இடநெருக்கடி விகிதமானது, 2026 ஆம் ஆண்டின் கைதிகளின் எண்ணிக்கையை 2024 ஆம் ஆண்டின் கொள்ளளவோடு ஒப்பிடுகின்றது. சிறைச்சாலையின் கொள்ளளவானது மெதுவாகவே மாற்றமடையும் என்பதால், இந்த முரண்பாடானது இறுதி முடிவை குறிப்பிடத்தக்க வகையில் பாதிப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், சமீபத்திய கொள்ளளவுத் தரவுகள் வெளியிடப்படும் வரையில், தற்போதைய சரியான நிரம்பல் வீதத்தை உறுதிப்படுத்த முடியாது.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன