அசோக் அபேசிங்க

வருமான மதிப்பீடு தொடர்பில் பா.உ அபேசிங்ஹ தவறாகக் குறிப்பிடுகிறார்

"

…இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள (2023) வரவு செலவுத்திட்டத்தில் இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய வருமானம் மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டுக்கான வருமானத்தில் 70% அதிகரிப்பு காணப்படுகிறது. இலங்கையில் வருமானம் எப்போதும் 10%, 15% அல்லது 20 சதவீதத்தை விட அதிகரித்ததில்லை…

பாராளுமன்ற ஹன்சாட் | நவம்பர் 21, 2022

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு கூற்றுகளை முன்வைக்கிறார்: 1) 2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023க்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் வருமானத்தில் 70% அதிகரிப்பு காணப்படுகிறது, எனினும் கடந்த காலங்களில் வருமானம் எப்போதும் 20 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கவில்லை. 2) ரூ.3,000 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள வருமானம், இலங்கை வரலாற்றிலேயே அதிகூடிய பெறுமதியாகும். கடந்த காலங்களில் இது ரூ.2,000 பில்லியனுக்கு மேல் இருந்ததில்லை. சதவீத அதிகரிப்பு மற்றும் எதிர்வுகூறப்பட்டுள்ள மொத்த வருமானத்தின் பெறுமதி ஆகியவற்றின் அடிப்படையில் 2023க்கு மதிப்பிட்டுள்ள வருமானம் முன்னெப்போதும் இடம்பெறாத ஒன்று என்பதுடன் நம்பத்தகாதது என பாராளுமன்ற உறுப்பினர் வாதிடுகிறார். இந்தக் கூற்றுகளை மதிப்பிடுவதற்கு இலங்கை மத்திய வங்கியின் 2021 ஆண்டறிக்கையும் 2023க்கான வரவு செலவுத்திட்ட உரையையும் FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: இந்த வருமான அதிகரிப்பு முன்னெப்போதும் இடம்பெறவில்லை என்ற கூற்று தவறானது. 1950ம் ஆண்டு முதல் பெயரளவு வருமானம், பா.உ அதிகபட்சமாகக் குறிப்பிடும் 20 சதவீதத்திற்கு மேல் சுமார் 11 தடவைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக 1978ம் ஆண்டில் அதிகபட்சமாக 75% அதிகரித்திருந்தது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). 2022க்கான திருத்தப்பட்ட வருமான மதிப்பீடுகளில் இருந்து 2023க்கான மதிப்பிடப்பட்ட வருமான அதிகரிப்பு 64% ஆகும். இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 70 சதவீதத்தை விட ஓரளவு குறைவாகும்.

கூற்று 2: பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று 2023க்கான எதிர்பார்க்கப்படும் வருமானம் இதுவரை பதிவான அதிகமான பெயரளவு பெறுமதி ஆகும். இது ரூ3,408 பில்லியன் ஆகும். அவர் குறிப்பிடுவது போன்று, பெயரளவு வருமானம் இதுவரையில் ரூ.2,000 பில்லியனைத் தாண்டியதில்லை. பெறுமதிகள் சரியாக இருந்தாலும் அதன் மூலம் முன்வைக்கப்படும் கருத்து தவறானது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானத்தின் சதவீதத்தில் எந்த மாற்றமும் இல்லாதபோதும், பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி காரணமாக சேகரிக்கப்படும் பெயரளவு வருமானத்தின் பெறுமதியில் அதிகரிப்பு ஏற்படுவதன் காரணமாக அநேகமான வரவு செலவுத்திட்டங்களில் வருமான மதிப்பீடு உயர்வாக இருப்பது சாதாரணமாக ஒன்று. எது நியாயமானது அல்லது சாத்தியமானது என்பதை மதிப்பிடுவதற்கு, ஒப்பீடானது உண்மையான பெறுமதியில் (பணவீக்கத்திற்குச் சரிசெய்யப்பட்ட பெறுமதி) அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில் இருக்க வேண்டும். அந்த அளவீடுகளின் அடிப்படையில் 2023க்கான மதிப்பீடு முன்னெப்போதும் காணப்படாதது அல்ல என்பதுடன் மிக அதிகமான அல்லது நம்பப்பட முடியாத மதிப்பீடும் அல்ல. (உண்மையான பெறுமதி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக வருமானம் உயர்வாகக் காணப்பட்ட அனைத்து ஆண்டுகளுக்கும் அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

வருமானத்தில் ஏற்பட்டுள்ள சதவீத அதிகரிப்பு முன்னெப்போதும் இல்லாது என்பதில் பா.உ தவறிழைப்பதுடன் வருமானத்தின் மொத்தப் பெறுமதி நம்பத்தகாதது என்பதில் அவர் தவறிழைக்கிறார். ஆகவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை தவறானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: பெயரளவு, உண்மையானது மற்றும் ஐ.அ.டொ பெறுமதியிலும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாகவும் அரச வருமானம் (1950 – 2023)



Additional Note

குறிப்பு: மொ.உ.உற்பத்தி பணமதிப்பிறக்கியில் (Deflator) ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் உண்மையான வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது. 2022க்கான மொ.உ.உற்பத்தி பணமதிப்பிறக்கி, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2022ன் முதல் 9 மாதங்களுக்கான சமீபத்திய பெறுமதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 2023க்கு, வரவு செலவுத்திட்ட உரையில் பெயரளவு மொ.உ.உற்பத்திக்கான அரசாங்கத்தின் எதிர்வுகூறல் மற்றும் நிதியமைச்சின் முதலீட்டாளர் விளக்கத்தில் உண்மையான மொ.உ.உற்பத்தியின் -3 சதவீத எதிர்வுகூறல் ஆகியவற்றின் அடிப்படையில் மொ.உ.உ பணமதிப்பிறக்கியில் 30% அதிகரிப்பு அனுமானிக்கப்பட்டுள்ளது.


மூலம்

  1. விசேட புள்ளிவிபரப் பின்னிணைப்பு, இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2021, https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2021
  1. வரவு செலவுத்திட்ட உரை 2023, https://treasury.gov.lk/api/file/192322fd-7967-49d8-ad59-6046470d68c8
  1. தேசியக் கணக்குகள் (2022ன் முதல் 9 மாதங்கள்), தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், statistics.gov.lk/NationalAccounts/StaticalInformation/Reports/SummaryTables/2022m6_en

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன