உண்மைச் சரிபார்ப்புகளும்
2022ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டில் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களால் அனுப்பப்பட்ட பணவனுப்பல்கள் அதிகரித்துள்ளன என அமைச்சர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் தொடர்பான தரவை FactCheck.lk ஆராய்ந்தது.
பொது நிதி அறிக்கையிடலில் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பது ‘வேறொரு பொருளாதாரத்தில் வசிப்பவர்களுக்கு தொழிலாளர்கள் அனுப்பும் பணப் பரிமாற்றல்கள்’ எனக் குறிப்பிடப்படுகிறது. (சென்மதி நிலுவை மற்றும் சர்வதேச முதலீட்டு நிலை கையேடு, ஆறாவது பதிப்பு, பன்னாட்டு நாணய நிதியம்).
தொழிலாளர் பணவனுப்பல்கள் மார்ச் 2022ல் ஐ.அ.டொ 318.4 மில்லியன் மற்றும் மார்ச் 2023ல் ஐ.அ.டொ 568.3 மில்லியன் என்பதை இலங்கை மத்திய வங்கியின் தரவு சுட்டிக்காட்டுகிறது. கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 78.5% (ஐ.அ.டொ 249.9 மில்லியன்) அதிகரிப்பாகும். இந்தப் பெறுமதிகளே அமைச்சரால் குறிப்பிடப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்து தொழிலாளர் பணவனுப்பல்களில் ஒவ்வொரு காலாண்டும் தொடர்ச்சியான அதிகரிப்பு காணப்படுவதை அட்டவணை 1 காட்டுகிறது. 2022ம் ஆண்டின் இறுதி காலாண்டில் இருந்து 2023ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் தொழிலாளர் பணவனுப்பல்களில் 16.3% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில், தொழிலாளர் பணவனுப்பல்களுக்கான சரியான பெறுமதிகளை அமைச்சர் குறிப்பிடுவதுடன் 2023ல் பணவனுப்பல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதையும் அவர் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே அவரது அறிக்கையை சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: 2021 – 2023ல் தொழிலாளர் பணவனுப்பல்களில் காலாண்டு சதவீத மாற்றம்
மூலம்: தொழிலாளர் பணவனுப்பல்கள் புள்ளிவிபரங்கள், இலங்கை மத்திய வங்கி
Additional Note
2021ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்து ஒவ்வொரு காலாண்டிலும் தொழிலாளர் பணவனுப்பல்களில் சரிவு ஏற்பட்டது. 2022ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து தொழிலாளர் பணவனுப்பல்கள் ஒவ்வொரு காலாண்டிலும் அதிகரிக்கத் தொடங்கின. அதிகபட்ச சதவீத அதிகரிப்பானது 2022ம் ஆண்டின் இறுதி காலாண்டில் காணப்பட்டது.
மூலம்
சென்மதி நிலுவை மற்றும் சர்வதேச முதலீட்டு நிலை கையேடு, ஆறாவது பதிப்பு, பன்னாட்டு நாணய நிதியம், பார்வையிட: https://www.imf.org/external/pubs/ft/bop/2007/pdf/bpm6.pdf (இறுதியாக அணுகியது: ஏப்ரல் 27,2022)
தொழிலாளர் பணவனுப்பல்கள் புள்ளிவிபரங்கள், இலங்கை மத்திய வங்கி, பார்வையிட https://www.cbsl.gov.lk/en/workers-remittances/statistics (இறுதியாக அணுகியது: ஏப்ரல் 27, 2022)