கலாநிதி நந்தலால் வீரசிங்க

ஏற்றுமதி குறைந்துள்ளது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகிறார்

"

2001ல் மொத்தத் தேசிய உற்பத்தியில் ஏற்றுமதி மூலமான வருமானம் 33 சதவீதமாகக் காணப்பட்டது. தற்போது இது 15 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.

அணுகுவதற்கு | செப்டம்பர் 13, 2022

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பின்வரும் கூற்றுகளை முன்வைக்கிறார். (1) 2001ல் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் மொத்தத் தேசிய உற்பத்தியில் (GNP – Gross National Product) சுமார் 33 சதவீதமாகக் காணப்பட்டது. (2) 2001ம் ஆண்டு முதல் இது 15 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் மற்றும் மத்திய வங்கியின் ஏற்றுமதிப் புள்ளிவிபரங்களை FactCheck.lk ஆராய்ந்தது.

ஆளுநர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) சதவீதமாக (மொத்த தேசியத் தயாரிப்பு அல்ல) ஏற்றுமதி வருமானங்களைக் குறிப்பிடுவதாக FactCheck.lk அனுமானிக்கிறது. ஏனெனில் பொருளாதார உற்பத்தியை அளவிடுவதற்கான முக்கிய நிலையான அளவீடாக மொத்த உள்நாட்டு உற்பத்தியே உள்ளது. ஆண்டிறுதி அடிப்படையில் புள்ளிவிபரங்கள் வெளியிடப்படுவதால், ‘2001ல்’ என அவர் குறிப்பிடுவது ‘2000ம் ஆண்டின் இறுதியில்’ எனக் கருதப்படுகிறது.

‘ஏற்றுமதிகள்’ என்ற பதம் ‘மொத்த ஏற்றுமதிகள் (பொருட்களும் சேவைகளும்)’ அல்லது வெறுமனே ‘பொருட்களின் (வணிகப் பொருட்கள்) ஏற்றுமதிகள்’ ஆகிய இரண்டையும் குறிப்பிடப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. FactCheck.lk இதைக் கருத்தில் கொண்டு இரண்டு வழிகளிலும் அறிக்கையை மதிப்பிடுகிறது.

2000ம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதி வருமானம் சுமார் 33 சதவீதமாகக் காணப்பட்டது என்ற ஆளுநரின் முதலாவது கூற்று சரியாகும். இந்தப் பெறுமதி மொத்த ஏற்றுமதி, பொருட்களின் ஏற்றுமதி ஆகிய இரண்டுக்கும் சரியாக உள்ளது.

பொருட்களின் ஏற்றுமதி மூலமான வருமானம் 2021ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதை மத்திய வங்கியின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இது ஆளுநரின் கூற்றுடன் பொருந்திப் போகிறது. எனினும் மொத்த ஏற்றுமதி வருமானத்துடன் இது பொருந்திப் போகவில்லை. 2021ல் மொத்த ஏற்றுமதி வருமானம் 15 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எனவே ஆளுநர் பொருட்களின் ஏற்றுமதியைக் குறிப்பிடுகிறார் எனத் தீர்மானிக்கலாம்.

பொருட்களின் ஏற்றுமதி மூலமான வருமானம் தொடர்பில் ஆளுநரின் இரண்டு கூற்றுக்களும் சரியாக உள்ளன. எனவே அவரது அறிக்கையை சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.

விளக்கப்படம் 1: மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக ஏற்றுமதி வருமானங்கள் (2000 – 2021)

மூலம்: 2009 – 2021 இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள்மூலம்

 

இலங்கை மத்திய வங்கி, பொருளாதார மற்றும் சமூக புள்ளிவிபரங்கள் (2021), அணுகுவதற்கு: https://www.cbsl.gov.lk/en/publications/other-publications/statistical-publications/economic-and-social-statistics [இறுதியாக அணுகியது செப்டம்பர் 30, 2022]

இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (2021), அணுகுவதற்கு:
https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports [இறுதியாக அணுகியது செப்டம்பர் 30, 2022]

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ இணையத்தளம், புள்ளிவிபரங்கள், புள்ளிவிபர அட்டவணைகள், அணுகுவதற்கு: https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector [இறுதியாக அணுகியது செப்டம்பர் 30, 2022]

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன