கலாநிதி நந்தலால் வீரசிங்க

பணம் அச்சிடுவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகிறார்

"

2021ம் ஆண்டில் அச்சிடப்பட்ட மொத்த தளப் பணம் ரூ.344 பில்லியன் ஆகும். அதேவேளை 2022ல் விநியோகிக்கப்பட்ட தேறிய அடிப்படை ஒதுக்கு பணம் ரூ.40 பில்லியனுக்கும் குறைவாகும்.

டெய்லி FT | பிப்ரவரி 11, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

பணம் அச்சிடுவது அதிகரிக்கப்பட்டதன் காரணமாக இலங்கையில் உருவாகியுள்ள பணவீக்கம் தொடர்பான கேள்விக்குப் பதில் அளிக்கும்போது, 2021ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டில் பணம் அச்சிடுவது குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒதுக்கு பணத்தில்” ஏற்பட்டுள்ள மாற்றத்தை “அச்சிடப்பட்ட நாணயம்” என ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். இலங்கை மத்திய வங்கியால் அரசாங்கத்தின் கடனுக்கான நேரடி நிதியளிப்பும் “நாணய அச்சிடல்” என பொதுவாக அழைக்கப்படுகிறது. இது புழக்கத்தில் உள்ள தளப் பணத்தை விரிவாக்கிறது. எனினும் இது மட்டுமே தளப் பணத்தை அதிகரிப்பதற்கான பொறிமுறை அல்ல. திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் (இரண்டாந்தரச் சந்தையில் பிணையங்களை வாங்குவதும் விற்பதும்), வெளிநாட்டு சொத்துக்கள் கொள்வனவு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தேறிய சொத்து நிலையில் மாற்றம் என்பனவும் தளப் பணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து மாற்றங்களும் “ஒதுக்கு பணத்தில்” ஏற்படும் மாற்றம் என அறியப்படுகிறது. இது தளப் பணத்தின் அதிகரிப்புக்கான சரியான ஒட்டுமொத்த குறிகாட்டியாக அமைகிறது (இது “பணம் அச்சிடுதல்” என்றும் குறிப்பிடப்படுகிறது).

இலங்கை மத்திய வங்கி தரவின் பிரகாரம், 2021ல் ஒதுக்கு பணத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு ரூ.341 பில்லியனாகக் காணப்பட்டதுடன் 2022ல் இந்த அதிகரிப்பு ரூ.44 பில்லியன் மட்டுமே ஆகும். “அச்சிடப்பட்ட பணம்” என ஆளுநர் குறிப்பிடும் தொகை இந்த ரூ.44 பில்லியனுடன் நெருங்கிவருகிறது.

இலங்கை மத்திய வங்கியால் அரசாங்கத்திற்கு நேரடியாக நிதியளிக்கப்பட்ட கடன் தொகை 2022ல் ரூ.1,181 பில்லியனால் அதிகரித்தது. அதேவேளை 2021ம் ஆண்டில் ரூ.692 பில்லியனால் மட்டுமே அதிகரித்தது. ஆகவே 2022ல் தளப் பணத்தை அதிகரிக்கும் இந்த முறை அதிகரித்த போதிலும், தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் திறந்த சந்தைத் தொழிற்பாடுகள் தொடர்பான பிற நடவடிக்கைகள் 2022ல் ஒட்டுமொத்த தளப் பணத்தைக் குறைத்தன.

மொத்தத்தில், தளப் பணத்தில் ஏற்பட்ட தேறிய அதிகரிப்பை 2022ல் “அச்சிடப்பட்ட பணமாக” ஆளுநர் சரியாகக் குறிப்பிடுகிறார். ஆகவே அவரது அறிக்கையை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: மத்திய வங்கி ஐந்தொகை கூட்டுக்களின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் (ரூ. பில்லியன்கள்)

மேலதிகக் குறிப்பு:

பணவீக்கத்திற்கும் பண நிரம்பலுக்கும் இடையே நேர்மறையான உறவு உள்ளதென பணத்தின் அளவு கோட்பாடு குறிப்பிடுகிறது. ஆகவே தளப் பணம் அதிகரிக்கும்போது (மத்திய வங்கியால் “பணம் அச்சிடப்படும்போது”) பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற பொதுவான நம்பிக்கை காணப்படுகிறது.

பண நிரம்பலைப் பல்வேறு கூட்டுக்களின் மூலம் அளவிடலாம் (கூடுதல் தகவல்களுக்குப் பார்வையிடவும் – Monetary Policy – FAQs | Central Bank of Sri Lanka (cbsl.gov.lk)). இலங்கையில் பண நிரம்பலை அளவிடும் வழக்கமான குறிகாட்டி விரிந்த பண நிரம்பல் (M2b – Broad Money Supply) ஆகும் – இது பொதுமக்களிடம் உள்ள நாணயத் தாள்கள் மற்றும் குத்திகள், வர்த்தக மற்றும் மத்திய வங்கிகளிடம் உள்ள வைப்புக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. சந்தையில் கூடுதலாக நாணயத் தாள்களை விநியோகிப்பதன் மூலம் பண நிரம்பலை மத்திய வங்கியால் கட்டுப்படுத்த முடியும் – இது ஒதுக்கு/தளப் பணத்தில் மாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் அளவிடப்படுகிறது – அல்லது மத்திய வங்கி நியதி ஒதுக்கு விகிதத்தை (SRR – Statutory Reserve Ratio) மாற்ற முடியும். SRR என்பது கடன் கொடுப்பது அல்லது முதலீடு செய்வதை விட வர்த்தக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய பொறுப்புக்களின் ஒரு பகுதியாகும்.

ஆகவே ஒதுக்குப் பணத்தின் அதிகரிப்பு குறைந்தாலும், 2021ல் பண நிரம்பலில் மாற்றம் (M2b)  ரூ.1,241 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2022ல் ரூ.1,649 பில்லியனாக அதிகரித்துள்ளது. அரசாங்கம் விநியோகிக்கப்படும் பணத்தைக் குறைத்த போதிலும், அது 2022ல் பணவீக்கத்தைக் குறைக்க வழிவகுக்கவில்லை.

எனினும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரேயொரு கருவி பண நிரம்பல் மட்டும் அல்ல. தற்போதுள்ள மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை விருப்பத்திற்குரிய கருவியாகப் பயன்படுத்துகின்றன.மூலம்

இலங்கை மத்திய வங்கி, தரவு நூலகம், https://www.cbsl.lk/eresearch/  [இறுதியாக அணுகியது 26 ஏப்ரில் 2023]

Monetary Policy – FAQs | Central Bank of Sri Lanka (cbsl.gov.lk) [இறுதியாக அணுகியது 26 ஏப்ரில் 2023]

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது