நாலக கொடஹேவா

வரி இலக்குகள் தொடர்பில் பா.உ கொடஹேவா தவறாகக் குறிப்பிடுகிறார்

"

[…] 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் ரூ.3,130 பில்லியன் ஆகும் (2022 ஆம் ஆண்டிலிருந்து 70% அதிகரிப்பு). இது நடைமுறையில் சாத்தியமற்றது. வரி தளம் சரியாகச் செயற்படாததால், 2022 ஆம் ஆண்டில் வரி செலுத்தியவர்களே இந்த வரிச்சுமையைத் தாங்க வேண்டியேற்படும்.

அருண | அக்டோபர் 9, 2023

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

தொடர்ச்சி: “உண்மையில் என்ன நடந்தது என்றால் வரி செலுத்துபர்கள் தங்கள் தேவைகளுக்காகச் செலவிட வேண்டிய வருமானம் 70 சதவீதத்தால் குறைந்துள்ளது.”

அருண பத்திரிகையுடனான நேர்காணலில் பா.உ கொடஹேவா இரண்டு கூற்றுகளை முன்வைக்கிறார்: (1) 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்படும் 70% வரி வருமான அதிகரிப்பு நடைமுறையில் சாத்தியமற்றது (2) வரி அதிகரிப்பினால் வரி செலுத்துபவர்கள் தங்கள் தேவைகளுக்காகச் செலவிடக்கூடிய வருமானத்தில் 70% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆண்டறிக்கையை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: வரி வருமானத்தில் 70% அதிகரிப்பு என்பது நடைமுறை சாத்தியமற்றது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று மூன்று முக்கிய காரணங்களால் தவறானது.

முதலாவது, வரி வருமானம் பின்வரும் இரண்டு காரணங்களால் அதிகரிக்கிறது. (அ) பணவீக்கம் மற்றும் வளர்ச்சி, பெயரளவு ஊதியங்கள் மற்றும் விலைகள் அதிகரிக்கும்போது வரி சேகரிப்பு அதிகரிக்கும் (ஆ) கொள்கை மாற்றங்கள், வரி வீதம் மற்றும் வரி அதிகரிப்பிற்கு ஆளாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வரி சேகரிப்பும் அதிகரிக்கும். சராசரி (அறிக்கையிடப்பட்ட 12 மாத பணவீக்கம் அல்ல) பணவீக்கம் 29.9% என்பதன் அடிப்படையிலும் பணவீக்கம் இல்லாமலேயே வருமானம் மற்றும் நுகர்வு வரிகளை 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடிய கொள்கை மாற்றங்கள் காரணமாகவும் 2023 ஆம் ஆண்டில் வரிகள் 70% அதிகரிக்கும் என்ற கணிப்பீடு சாத்தியமானதாகும். எதிர்பார்க்கப்படும் வரி அதிகரிப்பு நடைமுறையில் சாத்தியமானது என்பதை இது காட்டுகிறது.

இரண்டாவதாக, வரி தளம் அதிகரிக்காது, எனவே அதன் காரணமாக ஏற்கனவே வரி செலுத்துபவர்களே வரியில் ஏற்படும் அதிகரிப்பின் சுமையைத் தாங்க வேண்டும் என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றும் தவறாகும். இரண்டு மாற்றங்கள் வரி தளத்தை அதிகரித்தன: (1) 2020 ஆம் ஆண்டில் வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டொன்றுக்கு ரூ. 3 மில்லியனில் இருந்து 2023 ஆம் ஆண்டில் ரூ.1.2 மில்லியனாகக் குறைக்கப்பட்டது (ஆ) பல்வேறு வருமான வகைகளில் நிறுத்திவைத்தல் வரி (WHT) போன்ற புதிய வரிகளை அறிமுகப்படுத்துதல், இல்லாவிட்டால் இவை வரி தளத்தில் உள்ளடக்கப்படாது.

மூன்றாவதாக, வருமான வரிகளில் மட்டும் பாராளுமன்ற உறுப்பினர் கவனம் செலுத்துவதும் தவறாகும். வரி வருமானமானது நுகர்வு வரி வகைககளின் கீழ் வரும் பெறுமதிசேர் வரி (VAT), கலால் வரி உள்ளிட்ட பல்வேறு பிற வரிகளில் இருந்தும் பெறப்படுகிறது.

கூற்று 2: வரி அதிகரிப்பானது வரி செலுத்துபவர்கள் தங்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் செலவிடும் வருமானத்தில் 70% வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று இரண்டு காரணங்களால் தவறாகும்.

முதலாவதாக, ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, வரிகளில் ஏற்படும் முழுமையான அதிகரிப்பு வருமான வரி மூலமாகவோ ஏற்கனவே வரி செலுத்துவர்களிடம் இருந்தோ கிடைக்கப்பெறுவதில்லை.

இரண்டாவதாக, வரிகளில் ஏற்படும் 70% அதிகரிப்பு செலவிடக்கூடிய வருமானத்தில் 70% குறைவை ஏற்படுத்தும் என்பதும் தவறாகும். உதாரணமாக, தனிநபர் ஒருவர் நாளொன்றுக்கு ரூ. 1,000 சம்பாதித்து ரூ.100 ஐ வரியாகச் செலுத்தினால், வரியில் ஏற்படும் 70% அதிகரிப்பால் அவர் செலுத்தும் வரியானது ரூ.170 ஆக அதிகரிக்கும். இது வரிக்குப் பின்னரான வருமானத்தை 7 சதவீதத்தால் குறைக்கும். பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது போன்று 70 சதவீதத்தால் அல்ல. மாதாந்தம் ரூ.800,000 சம்பாதிக்கும் நபர்களே வருமான வரியில் அதிகளவு சதவீத மாற்றத்தை எதிர்கொள்ளுவார்கள். அவர்களின் செலவிடக்கூடிய வருமானமானது ரூ746,000 இலிருந்து ரூ.585,500 ஆக அதாவது 22 சதவீதமாகக் குறையும், 70 சதவீதமாக அல்ல.

ஒட்டுமொத்தமாக, பாராளுமன்ற உறுப்பினரின் இரண்டு கூற்றுகளும் தவறாகும். ஆகவே நாங்கள் அவரது அறிக்கையை தவறானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

அட்டவணை 1: 2022 முதல் 2023 வரையிலான வரி வருமான அதிகரிப்பு

அட்டவணை 1: 2022 முதல் 2023 வரையிலான வரி வருமான அதிகரிப்பு



மூலம்

ஆண்டறிக்கை 2022, இலங்கை மத்திய வங்கி. https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports/annual-report-2022

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன