ரணில் விக்கிரமசிங்க

பணம் அச்சிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்

"

அதில் நாங்கள் தலையிடாமல் மத்திய வங்கியை (பொறுப்பு) வைத்தோம். சட்டத்தின் பிரகாரம் இனி எங்களால் பணத்தை அச்சடிக்க முடியாது. இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து (கடன்களைப் பெற) கடன் வாங்கும் திறனை நாங்கள் இழந்துவிட்டோம். (தொடர்ச்சி)

ரூபவாஹினி செய்திகள் | அக்டோபர் 21, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

தொடர்ச்சி: “…இது கடினமானதாக இருந்தாலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்”

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இல. இலங்கை மத்திய வங்கி சட்டத்தை (CBA23) அமுல்படுத்தியதன் மூலம் “பணம் அச்சிடப்படுவது” தடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார். இந்தக் கூற்றைச் சரிபார்க்க, CBA23 மற்றும் ரத்துச் செய்யப்பட்ட நாணயவிதிச் சட்டம் (அத்தியாயம் 422) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

கடந்த உண்மைச் சரிபார்ப்பு ஒன்றில், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நாட்டில் “பணம் அச்சிடப்படும்” தொகை “ஒதுக்குப் பணத்தில்” ஏற்படும் மாற்றத்திற்குச் சமமானது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை சரியானது என FactCheck.lk ஆல் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஊடகம் மற்றும் நாளாந்தப் பயன்பாட்டில் “பணம் அச்சிடுதல்” என்ற பதம் பெரும்பாலும் வரவு செலவுத்திட்டத்திற்கு “நிதியளிக்கும்” வரையறுக்கப்பட்ட செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. நிதியளித்தல் என்பது மேலே குறிப்பிடப்பட்ட “பணம் அச்சடித்தல்” என்பதன் ஒரு பகுதியாகும். தனியார் துறைக்கு கடன் வழங்குதல், வெளிநாட்டு சொத்துக்களைக் கொள்வனவு செய்தல் போன்ற ஒதுக்குப் பணத்தை அதிகரிக்கும் பிற வழிகளை இது உள்ளடக்கவில்லை.

ஜனாதிபதியின் கூற்றை மதிப்பிடுவதற்கு, “பணம் அச்சிடுதல்” என்ற பதத்தை “நிதியளித்தல்” என அவர் குறிப்பிடுவதாக FactCheck.lk கருதுகிறது.

சமீபத்திய CBA23 சட்டத்தின் பிரிவுகள் 86 மற்றும் 127 இலங்கை மத்திய வங்கி நிதியளிப்பதற்கு மூன்று வழிகளில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது:

  • அரசாங்கத்திற்கோ அல்லது அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கோ (அவசர சூழ்நிலைகளில் விதிவிலக்குகளுடன்) கடன் வழங்குவதைத் தடுக்கிறது
  • முதன்மை சந்தையில் அரசாங்கம் அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் பத்திரங்களை வாங்குவதைத் தடை செய்கிறது (இந்தத் தடையை மீறக்கூடாது என்பதற்காக இரண்டாம் நிலை சந்தைக் கொள்வனவுகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன)
  • நிதியாண்டின் முதல் மாதத்தில் அரசாங்கத்திற்கு தற்காலிக முற்பணங்களை வழங்குவதைக் கட்டுப்படுத்துகிறது (முந்தைய ஆண்டின் வருமானத்தின் 10% சதவீதம் வரை)

எனினும், CBA23 சட்டத்தில் உள்ள இடைநிலை விதி (s.128) அரச பத்திரங்களை முதன்மை சந்தையில் CBA23 செயல்பாட்டு திகதியிலிருந்து 18 மாதங்களுக்கு இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும் பன்னாட்டு நாணய நிதியத்தின் தற்போதைய நிகழ்ச்சித் திட்டத்தில் இதற்கு எதிரான கடமைப்பாடு உள்ளது. இது டிசம்பர் 2023 இல் அரசாங்கத்திற்கு ரூ.2,740 பில்லியனுக்கும் அதிகமான கடனை இலங்கை மத்திய வங்கி வழங்குவதைக் கட்டுப்படுத்துகிறது.

(அ) CBA23 இன் தடைகள் 1 மற்றும் 2 (ஆ) CBA23 இன் மூலம் அனுமதிக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட முற்பணங்களை ஜனவரியில் மட்டுமே பெற முடியும் (இ) ஏற்கனவே பன்னாட்டு நாணய நிதியத் திட்டத்தில் ரூ.2.74 ட்ரில்லியன் எனக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இடைக்கால விதியானது ரத்துச் செய்யப்பட்டுள்ளது ஆகிய மூன்று காரணங்களால் நிதியளித்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே (ஜனவரி 2024 வரை) மேலதிக நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் இல்லை என ஜனாதிபதி குறிப்பிடுவது சரியாகும்.

ஆகவே மேலயுள்ள அறிக்கையை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இல. இலங்கை மத்திய வங்கிச் சட்டம், (2023). https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/laws/acts/en/central_bank_of_sri_lanka_act_2023_e.pdf

எனும் இணைப்பிலிருந்து நவம்பர் 3, 2023 பெறப்பட்டது.

நாணயவிதிச் சட்டம் (அத்தியாயம் 422). (2014). https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/laws/acts/en/monetary_law_act.pdf

எனும் இணைப்பிலிருந்து நவம்பர் 3, 2023 பெறப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம் (2023). இலங்கை: நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் நீட்டிக்கப்பட்ட ஏற்பாட்டு கோரிக்கை – ஊடக அறிக்கை; அலுவலர் அறிக்கை; மற்றும் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளரின் அறிக்கை; IMF நாட்டுக்கான அறிக்கை இல. 23/116; மார்ச் 6, 2023. IMF அலுவலர் அறிக்கை, 2023(116). https://www.imf.org/en/Publications/CR/Issues/2023/03/20/Sri-Lanka-Request-for-an-Extended-Arrangement-Under-the-Extended-Fund-Facility-Press-531191

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன