கபீர் ஹசீம்

இலங்கையில் வறுமை அதிகரித்துள்ளதை பா.உ கபீர் ஹஷீம் சரியாகக் குறிப்பிடுகிறார்

"

“…2019ல் இந்த நாட்டின் வறுமைக் கோடு 11 சதவீதமாக இருந்தது… 2023ல் இது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை விட அதிகமாக இருக்கும் என நான் நம்புகின்றேன். ஆனால் உலக வங்கி இதை 25 சதவீதமாகக் கணக்கிட்டுள்ளது. அதாவது இந்த நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களில் 5.5 மில்லியன் மக்கள் ஏழைகளாக உள்ளனர்.”

இலங்கை பாராளுமன்றத்தின் யூடியூப் பக்கம் | மே 12, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2019 ஆம் ஆண்டு முதல் வறுமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என பா.உ ஹஷீம் தனது உரையில் குறிப்பிடுகிறார். இந்தக் கூற்றைச் சரிபார்க்க, உலக வங்கியின் வறுமை மற்றும் சமத்துவமின்மை தளம், உலக வங்கியின் இலங்கைக்கான வறுமை மற்றும் சமத்துவ விபரம் (ஏப்ரல் 2023), தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் (DCS) 2019 வீட்டு வருமானம் மற்றும் செலவினக் கணக்கெடுப்பு இறுதி அறிக்கை (HIES) ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது. 

குறைந்த நடுத்தர வருமானத்தைக் கொண்ட நாடுகளாக வகைப்படுத்தபட்ட (இலங்கை போன்ற நாடுகள்) நாடுகளுக்கு 2017ம் ஆண்டில் வாங்கும் திறன் 3.65 ஐ.அ.டொலரை உலக வங்கிவறுமைக் கோடாகவரையறுத்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு ரூ.214.20 (மாதம் ஒன்றுக்கு ரூ.6,515) என்பதை உலக வங்கி இலங்கைக்கு கணக்கிட்டுள்ளது. 

ஒரு குடும்பத்தில் தனிநபர் வருமானம் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்தால் அந்தக் குடும்பத்திலுள்ள அனைவரும் ஏழைகளாகக் கருதப்படுவார்கள். பயன்படுத்தப்படும் வறுமைக் கோட்டின் அடிப்படையில், 2019ம் ஆண்டில் இலங்கையின் சனத்தொகையில் 11.3% வறுமையில் வாழ்வதாக உலக வங்கி கணக்கிட்டுள்ளது. 2022ம் ஆண்டில் இது 25 சதவீதமாக உயர்ந்துள்ளது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). எனினும், 2020 ஆம் ஆண்டு முதல் மதிப்பீடுகள் உருவகப்படுத்துதல்களை அடிப்படையாகக் கொண்டவை, புதுப்பிக்கப்பட்ட கணக்கெடுப்புத் தரவை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 

இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக்கோடு குறிப்பிட்ட பொருட்களைக் கொண்ட கூடையை வாங்குவதற்கான திறனைக் கொண்டு வரையறுக்கப்படுகிறது. 2019 HIES அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக்கோடு உலக வங்கியை விடவும் சற்றுக் கூடுதலாக உள்ளது என DCS கணக்கிட்டுள்ளது. அதாவது மாதாந்தம் ஒரு நபருக்கு ரூ.6,966 ஆகக் காணப்படுகிறது. இதன் பிரகாரம் 2019ம் ஆண்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே 14.3% வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாதாந்தம் DCS வறுமைக்கோட்டைக் கணக்கிடுகிறது. டிசம்பர் 2022ல், மாதாந்தம் ஒரு நபருக்கு ரூ.13,777 ஆகக் காணப்பட்டது. எனினும் வறுமையில் வாழும் மொத்த சனத்தொகையின் புதுப்பிக்கப்பட்ட உத்தியோகபூர்வ கணக்கீடு எதுவும் இல்லை. 

2022 ஆம் ஆண்டிற்கான வறுமை குறித்த உலக வங்கியின் மதிப்பீட்டிற்கான மாற்றுக்களில் ஒன்று, 2023ம் ஆண்டில் LIRNEasia வால் 10,000 மாதிரியில் முன்னெடுக்கப்பட்ட தேசிய கணக்கெடுப்பு ஆகும். இந்தக் கணக்கெடுப்பில் ரூ.13,777 எனும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இலங்கையின் சனத்தொகையில் 31% வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு முதல் வறுமை இருமடங்காகி உள்ளது என்ற உலக வங்கியின் கணிப்பை இந்த ஆய்வு ஆதரிக்கிறது. அத்துடன் உலக வங்கியின் மதிப்பீடுகளை விட வறுமை இன்னும் உயர்வாக உள்ளது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுக்கும் வலுச்சேர்க்கிறது. 

இலங்கையின் வறுமை தொடர்பான உலக வங்கியின் மதிப்பீடுகள் மற்றும் தற்போதைய நிலை தொடர்பான உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடுகள் ஆகியவற்றுடன் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று பொருந்துகிறது. எனவே அவரது கூற்றை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம். 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.


மேலதிகக் குறிப்பு 

வறுமையைப் புரிந்துகொள்வதற்கும் அதை வரையறுப்பதற்கும் வெவ்வேறு வழிகள் இருப்பதால் ஏழைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது மிகவும் சிக்கலான பணியாகும். வறுமையைக் கணக்கிடுவதற்கான பொதுவான முறையானது, வறுமைக்கோடு என வரையறுக்கப்படும் குறைந்தபட்ச நுகர்வு அளவை எட்டுவதற்குக் குடும்பங்களுக்கு வழி இருக்கிறதா என்பதை அடிப்படையாகக் கொண்டது. எனினும் பல பரிமாண வறுமைக் குறியீடு (MPI) போன்ற மாற்று முறைகள் உள்ளதுடன் இது நுகர்வை மட்டுமன்றி குடும்பங்கள் அனுபவிக்கும் பல்வேறு குறைபாடுகளையும் கருத்தில் கொள்கின்றன. உதாரணமாக, பிள்ளைகளுக்கு பாடசாலைக் கல்வி கிடைக்காமை, உடல் ரீதியான குறைபாடுகள், சுத்தமான குடிநீர் கிடைக்காமை போன்றவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.

அட்டவணை 1: உலக வங்கியின் நாளாந்தம் ஐ.அ.டொ 3.65 எனும் வறுமைக்கோட்டில் இலங்கையின் வறுமை விகிதம் (2017 PPP)

மூலம்: உலக வங்கியின் வறுமை மற்றும் சமத்துவமின்மை தளம், உலக வங்கியின் இலங்கைக்கான வறுமை மற்றும் சமத்துவ விபரம் ஏப்ரல் 2023. 



மூலம்

உலக வங்கியின் வறுமை மற்றும் சமத்துவமின்மை தளம். https://pip.worldbank.org/country-profiles/LKA எனும் இணைப்பின் மூலம் ஜுன் 20, 2023ல் பெறப்பட்டது. 

உலக வங்கியின் இலங்கைக்கான வறுமை மற்றும் சமத்துவ விபரம், ஏப்ரல் 2023. https://databankfiles.worldbank.org/public/ddpext_download/poverty/987B9C90-CB9F-4D93-AE8C-750588BF00QA/current/Global_POVEQ_LKA.pdf  எனும் இணைப்பின் மூலம் பெறப்பட்டது. 

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம், 2019 வீட்டு வருமானம் மற்றும் செலவினக் கணக்கெடுப்பு இறுதி அறிக்கை http://www.statistics.gov.lk/IncomeAndExpenditure/StaticalInformation/HouseholdIncomeandExpenditureSurvey2019FinalReport எனும் இணைப்பின் மூலம் பெறப்பட்டது. 

 LIRNEasia, 2023. சமூகப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் வறுமை நிலை. https://lirneasia.net/wp-content/uploads/2023/06/LIRNEasia-Social-Safety-Nets-and-the-State-of-Poverty-in-Sri-Lanka-3.pdf எனும் இணைப்பின் மூலம் பெறப்பட்டது. 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன