உதய கம்மன்பில

மின்சாரக் கட்டணங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில பகுதியளவு சரியாகக் குறிப்பிடுகிறார்

"

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடையிலான குறுகிய காலப்பகுதியில்… (மின்) கட்டணம்… ஏழை மக்களுக்கு (30 அலகுகளைப் பயன்படுத்தும் நுகர்வோர்) 1,138 சதவீதமும் செல்வந்தர்களுக்கு (180 அலகுகளைப் பயன்படுத்தும் நபர்) 160 சதவீதமும் அதிகரித்துள்ளது…

உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் | மே 27, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

2023 பெப்ரவரி மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட மின்சாரக் கட்டணங்களின் அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு கூற்றுகளை முன்வைக்கிறார். முதலாவது, ‘ஏழைகளுக்கான’ மின்சாரப் பட்டியல் ‘செல்வந்தர்களுடன்’ ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வகையில் அதிக சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இரண்டாவது, ‘ஏழைகளின்’ செலவில் ‘செல்வந்தர்களுக்கு’ சலுகை கிடைத்துள்ளது. இந்தக் கூற்றுக்களுக்கு வலுச்சேர்ப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கணக்கீடுகளையும் வழங்குகிறார்: ஏழைகள் (மாதாந்தம் 30 KwH பயன்படுத்துபவர்கள்) என பா.உ. வகைப்படுத்தும் நபர்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் 1,138% அதிகரிப்பு காணப்படுவதுடன் ‘செல்வந்தர்கள்’ என வகைப்படுத்தப்பட்ட நபர்களின் (மாதாந்தம் 180 KwH பயன்படுத்துபவர்கள்) மின் கட்டணத்தில் 160% அதிகரிப்பு காணப்படுகிறது.

இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, வெரிட்டே ரிசர்ச்சால் எரிசக்தி துறை சந்திப்பில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையிலுள்ள வீடுகளுக்கான மின்சாரத்தின் மாறுபட்ட விலை நிர்ணயத்திற்கான செலவை அடிப்படையாகக் கொண்ட மாதிரி ஆவணத்தின் வரைவு, இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) வலைதளத்தில் வெளியிடப்பட்ட மின் கட்டணத் திருத்தங்கள் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

மின்சாரக் கட்டணங்கள் நவம்பர் 2014, ஆகஸ்ட் 2022 மற்றும் பெப்ரவரி 2023 ஆகிய மாதங்களில் திருத்தப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் ஆகஸ்ட் முதல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன எனக் குறிப்பிடுவது, 2014 நவம்பரில் முன்னெடுக்கப்பட்ட விலைத் திருத்தங்களைக் குறிப்பிடுகிறார் எனக் கருதப்படுகிறது. இந்தக் கட்டணமே ஆகஸ்ட் 2022 வரை பயன்பாட்டில் இருந்தது.

 

முதலாவது கூற்று: 2014 ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில், பெப்ரவரி 2023 கட்டணத் திருத்தத்திற்குப் பிறகு, 30 அலகுகளைப் பயன்படுத்துபவர்கள் (ஏழைகள்) அவர்களின் மின் பட்டியலில் குறிப்பிட்ட சதவீத அதிகரிப்பை (1,138 சதவீதத்தால்) எதிர்கொண்டுள்ளார்கள் என பா. உ. குறிப்பிடுவது சரியானது. இதற்கு மாறாக, 180 அலகுகளைப் பயன்படுத்துபவர்கள் (செல்வந்தர்கள்) 144% கட்டண அதிகரிப்பை மட்டுமே எதிர்கொண்டுள்ளார்கள். இது பா. உ. குறிப்பிடும் 160 சதவீதத்தை விடவும் குறைவாகும் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).

இரண்டாவது கூற்று: ஏழைகளின் செலவில் செல்வந்தர்கள் மானியத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக பா. உ. குறிப்பிடுகிறார். எனினும், இந்தக் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் எந்தத் தரவும் இல்லை. செல்வந்தர்கள் மற்றும் ஏழைகள் செலுத்தும் கட்டணத்திற்கும் ஒரு அலகை உற்பத்தி செய்வதற்கான சராசரி செலவிற்கும் இடையிலான வித்தியாசத்தை ஆராயும்போது, ஏழைகளுக்கான ஒரு அலகிற்கான சலுகை (சராசரி செலவிற்குக் கீழான சராசரி விலை) ரூ.12.46 ஆல் குறைகிறது. செல்வந்தர்களால் செலுத்தப்படும் ஒரு அலகிற்கான கட்டுப்பணம் (சராசரி செலவிற்கு மேலான சராசரி விலை) ரூ.4.71 ஆல் அதிகரிக்கிறது (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). எனவே ஏழைகளுக்கான சலுகை 75 சதவீதத்தால் குறையும்போது செல்வந்தர்களுக்கான கட்டுப்பணம் பா. உ. குறிப்பிடுவது போன்று (ஏழைகளின் செலவில் செல்வந்தர்கள் மானியம் பெறுகிறார்கள் எனக் குறிப்பிடுவதன் மூலம்) குறையவில்லை. மாறாக, செல்வந்தர்களின் கட்டுப்பணம் 210 சதவீதத்தால் அதிகரிக்கிறது.

சுருக்கமாகக் குறிப்பிடுவதென்றால், 180 அலகுகளைப் பயன்படுத்துபவர்களை (செல்வந்தர்கள்) விட 30 அலகுகளைப் பயன்படுத்துபவர்களின் (ஏழைகள்) மின் கட்டணப் பட்டியல் குறிப்பிடத்தக்க சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பா. உ. குறிப்பிடுவது சரியாகும். எனினும் ‘ஏழைகளிடம்’ வசூலிக்கப்படும் அதிகரிக்கப்பட்ட கட்டணம் மூலம் ‘செல்வந்தர்களுக்கு’ மானியம் வழங்கப்படுகிறது என்பது முற்றிலும் தவறாகும்.

எனவே நாங்கள் அவரது அறிக்கையை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.

 

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.



மூலம்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) உத்தியோகபூர்வ இணையத்தளம் https://www.pucsl.gov.lk/news-room/.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன