ஹரினி அமரசூரிய

பா.உ அமரசூரிய: பெண்கள் அதிகம் பங்களிக்கும்போதிலும் தொழிற்படையில் குறைவாகக் கணக்கிடப்படுகிறார்கள்

"

…தொழிற்படையில் பங்கேற்பை அளவிடும்போது சில காரணிகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை… பெண்களால் செய்யப்படும் ஊதியம் பெறப்படாத பெரும்பாலான வேலைகள் இந்தப் புள்ளிவிபரங்களில் உள்ளடக்கப்படுவதில்லை. ஆராய்ச்சியின் மூலம் முன்வைக்கப்படும் புள்ளிவிபரங்களின் பிரகாரம், 60 சதவீதமான பராமரிப்பு வேலைகள்,...

NPP உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் NPP ஊடக சந்திப்பு | ஜூலை 16, 2023

true

True

உண்மைச் சரிபார்ப்புகளும்

(தொடர்ச்சி: …அதாவது ஊதியம் வழங்கப்படாத வேலைகள், பெண்களால் செய்யப்படுகின்றன. இந்தப் பணிகளைச் செய்வதுடன் அவர்கள் மேலதிகமாக பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள்… ஆராய்ச்சி அதனைக் காட்டுகிறது… பெண்கள் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 14 மணித்தியாலங்கள் வேலை செய்கிறார்கள். ஆண்கள் 9 மணித்தியாலங்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள். இந்த யதார்த்தத்தின் பின்னணியில் பெண்கள் வேலை செய்யும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என நாங்கள் முன்மொழிகிறோம்.)

இலங்கையின் தொழிற்படையில் பெண்களின் குறைந்தளவான பங்கேற்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மூன்று கூற்றுகளை முன்வைக்கிறார்: 1) ஊதியம் வழங்கப்படாத பணிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பெண்களின் பங்கேற்பை தொழிற்படை பங்கேற்பு தொடர்பான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் குறைத்து மதிப்பிடுகின்றன. 2) ஊதியம் இல்லாத பராமரிப்பு பணிகளில் 60% பெண்களால் செய்யப்படுகிறது. 3) ஆண்களை விட (9 மணித்தியாலங்கள்) பெண்கள் (14 மணித்தியாலங்கள்) நாளொன்றுக்கு அதிக நேரம் வேலை செய்கிறார்கள்.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, சமீபத்திய தரவான தொழிற்படை கணக்கெடுப்பு (LFS) 2021, இலங்கை தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் இலங்கை நேரப் பயன்பாடுகள் தொடர்பான கணக்கெடுப்பு (SLTUS) 2017 மற்றும் WMC இன் பணி நேரங்கள்: இலங்கையில் ஊதியம் வழங்கப்படாத பராமரிப்பு பணிகளின் பாலின பரிமாணங்களை ஆராய்தல் எனும் புத்தகத்தையும் FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: இலங்கையின் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடக்கூடிய சனத்தொகை (தொழிற்படை) வேலையில் இருப்பவர்கள் மற்றும் வேலையில் இல்லாதவர்கள் (வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் ஆனால் இன்னும் வேலை கிடைக்கவில்லை) என இரண்டு முக்கிய வகைகளாக பட்டியலிடப்படுகிறது. வேலையில் உள்ளவர்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறார்கள்: தொழிலாளர்கள், தொழில்தருனர்கள், சொந்தமாக வேலை பார்ப்பவர்கள் மற்றும் ஊதியம் செலுத்தப்படாத குடும்பப் பணியாளர்கள் (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்). இந்த தொழிற்படையில் உள்ளவர்கள் சந்தையில் விற்கவோ பரிமாற்றத்திற்கோ பொருட்கள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதில் பங்கேற்கிறார்கள் (அல்லது பங்கேற்க முயற்சிக்கிறார்கள்). இவ்வாறான பணிகள் தேசிய கணக்குகள் அமைப்பு கட்டமைப்பில் (SNA) உள்வாங்கப்படுவதுடன் இவை SNA செயல்பாடுகள் என அறியப்படுகிறது. எனவே தொழிற்படைக்கான பங்கேற்பை மதிப்பிடும்போது SNA அல்லாத செயல்பாடுகளில் (ஊதியம் செலுத்தப்படாத வீட்டுவேலை, பராமரிப்பு வேலை மற்றும் தன்னார்வப் பணிகள் உட்பட) செலவிடப்படும் நேரம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. உத்தியோகபூர்வ தொழிற்படை புள்ளிவிபரங்களில் SNA அல்லாத செயல்பாடுகள் தவிர்க்கப்படுவதால் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று சரியாக உள்ளது.

கூற்று 2: தேசிய கணக்கெடுப்பான 2017 SLTUS ஊதியம் செலுத்தப்படாத பணிகளில் பெண்கள் 5.7 மணித்தியாலங்களும் ஆண்கள் 1.6 மணித்தியாலங்களும் செலவிடுவதாகக் குறிப்பிடுகிறது (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). எனினும் இலங்கையின் ஆறு மாவட்டங்களில் (40 சதவீதமான சனத்தொகை) WMC முன்னெடுத்த மற்றொரு கணக்கெடுப்பில் பெண்கள் 9.14 மணித்தியாலங்களும் ஆண்கள் 5.96 மணித்தியாலங்களும் சராசரியாக ஒரு நாளில் ஊதியம் செலுத்தப்படாத வீட்டுவேலை, பராமரிப்பு மற்றும் தன்னார்வ பணிகளுக்காகச் செலவிடுவதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பெறுமதிகளைப் பயன்படுத்திக் கணக்கிட்டால் 60 சதவீதமான ஊதியம் செலுத்தப்படாத பராமரிப்பு பணிகளுக்குப் பெண்கள் பங்களிக்கின்றனர் (9.14/15.1). 60% என்பதைக் கணக்கிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் WMC கணக்கெடுப்பின் புள்ளிவிபரங்களைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. SLTUS புள்ளிவிபரங்களின் பிரகாரம், ஊதியம் செலுத்தப்படாத பராமரிப்பு பணிகளில் பெண்களின் பங்களிப்பு 81% என்பது பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றுக்கு மேலும் வலுச்சேர்க்கிறது (மேலதிகக் குறிப்பு 2 ஐப் பார்க்கவும்).

கூற்று 3: பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று ஆண்கள் மற்றும் பெண்களின் மொத்த வேலை நேரங்களைக் குறிப்பிடுகிறது. SLTUS தரவின் பிரகாரம், ஊதியம் பெறப்படும் மற்றும் பெறாத வேலைகளில் பெண்கள் 7.9 மணித்தியாலங்களும் ஆண்கள் 7.3 மணித்தியாலங்களும் செலவிடுகின்றனர். நாளொன்றில் ஆண்களை விட பெண்கள் அதிக நேரம் வேலை செய்வதாகக் குறிப்பிடும் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை இந்தத் தரவு ஆதரிக்கிறது. எனினும் WMC கணக்கெடுப்பில் இருந்து பெறப்பட்ட தரவை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார். இது ஊதியம் பெறாத பராமரிப்பு பணிகளை (பெண்களுக்கு 13.77 மணித்தியாலங்கள் மற்றும் ஆண்களுக்கு 8.98 மணித்தியாலங்கள்) மட்டுமே குறிப்பிடுகிறது. இது திருத்தப்படாத புள்ளிவிபரம் ஆகும். இறுதிசெய்யப்பட்ட புள்ளிவிபரம் கூற்று இரண்டை ஆராய்வதில் குறிப்பிடப்பட்டுள்ளது (பெண்கள் 9.14 மணித்தியாலங்கள் மற்றும் ஆண்கள் 5.96 மணித்தியாலங்கள்).

மொத்த வேலை நேரம் (நாளொன்றுக்கு 14 மற்றும் 9 மணித்தியாலங்கள்) தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் ஒரு எண்ணிக்கையானது தவறான புரிதலை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அவர் முன்வைக்கும் மூன்று கூற்றுகளும் ஒட்டுமொத்த வாதமும் சரியானது என்பதை கிடைக்கக்கூடிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதாவது ஆண்களை விட பெண்கள் நாளொன்றுக்கு அதிக நேரம் வேலை செய்கிறார்கள் என்பதுடன் ஊதியம் செலுத்தப்படாத பராமரிப்பு வேலைகளில் பெரும்பங்கை பெண்களே செய்கிறார்கள். எனினும் தொழிற்படை பங்கேற்பை அளவிடுதில் காணப்படும் கட்டுப்பாடுகள் காரணமாக பெண்கள் தொழிற்படையில் குறைவாகப் பங்களிப்பதாக மதிப்பிடப்படுகிறது.

எனவே அவரது அறிக்கையை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

மேலதிகக் குறிப்பு 1:  LFS இலிருந்து பெறப்பட்ட வேலை வாய்ப்புகளின் வகைகளுக்கான விளக்கங்கள் பின்வருமாறு:

  1. a) ஊதியம் பெறும் தொழிலாளர்கள் – வேதனங்கள்/சம்பளங்களுக்காக வேலை செய்பவர்கள்.
  2. b) தொழில்தருனர்கள் – குறைந்தது ஊதியம் பெறும் ஒரு தொழிலாளரை தனக்குக் கீழே வைத்திருப்பவர்கள்.
  3. c) சொந்தமாகத் தொழில்செய்பவர்கள் – ஊதியம் செலுத்தும் ஊழியர்கள் யாருமின்றி பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள்.
  4. d) ஊதியம் செலுத்தப்படாத குடும்பப் பணியாளர்கள் – வேதனங்கள்/சம்பளங்கள் இன்றி தங்கள் சொந்த குடும்பத்தால் மேற்கொள்ளப்படும் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பங்களிப்பவர்கள். 

மேலதிகக் குறிப்பு 2: பெண்களால் முன்னெடுக்கப்படும் ஊதியம் பெறாத பணிகளின் சதவீதம், அதாவது 81% (SLTUS தரவை அடிப்படையாகக் கொண்டது) என்பது, ஊதியம் பெறாத பணிகளில் பெண்கள் செலவிடும் மொத்த நேரத்தை (மணித்தியாலங்கள்) ஊதியம் பெறாத பராமரிப்பு செயல்பாடுகளில் ஆண்களும் பெண்களும் செலவிடும் மொத்த நேரத்தால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.

அட்டவணை 1: SNA மற்றும் SNA அல்லாத செயல்பாடுகளில் ஆண்களும் பெண்களும் செலவிட்ட மொத்த சனத்தொகை நேரச் சராசரி (மணித்தியாலங்களில்)

 மூலம்

செபாலி கொட்டேகொட மற்றும் பிரதீப் பிரீஸ், பணி நேரங்கள்: இலங்கையில் ஊதியம் வழங்கப்படாத பராமரிப்பு பணிகளின் பாலின பரிமாணங்களை ஆராய்தல், WMC (2023), பக்கங்கள் 55-73, பார்வையிட: https://womenandmedia.org/wp-content/uploads/2023/06/Recognise-Reduce-and-Redistribute-Unpaid-Care-Option.pdf.

தொழிற்படை கணக்கெடுப்பு 2021, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்: http://www.statistics.gov.lk/LabourForce/StaticalInformation/AnnualReports/2021.

இலங்கை நேரப் பயன்பாடுகள் தொடர்பான கணக்கெடுப்பு இறுதி அறிக்கை 2017, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்: http://www.statistics.gov.lk/PressReleases/TUS_FinalReport_2017.

இலங்கை நேரப் பயன்பாடுகள் தொடர்பான கணக்கெடுப்பு அறிக்கை 2017, தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்: http://www.statistics.gov.lk/Resource/en/LabourForce/Bulletins/TUSBulletin2017.pdf.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன