உண்மைச் சரிபார்ப்புகளும்
உணவுப் பணவீக்கம் குறைந்துள்ளதாக வயம்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா சன்டே லங்காதீப உடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார். “கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது” உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளது எனக் குறிப்பிட்டு அவர் இதனை விளக்கியுள்ளார்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (CCPI) FactCheck.lk ஆராய்ந்தது.
பேராசிரியர் பணவீக்கம் என்பதற்கான சரியான வரையறையை வழங்கியுள்ள போதும், தரவில் அதனைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளார். ஜுன் மாதத்திற்கான ஆண்டிற்கு ஆண்டு (YoY) பணவீக்க விகிதத்தை மே மாதத்திற்கான ஆண்டிற்கு ஆண்டு பணவீக்க விகிதத்துடன் ஒப்பிட்டு அதில் ஏற்பட்ட குறைப்பை மே மாதத்திலிருந்து ஜுன் மாதத்தில் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடுவது அவருடைய தவறு ஆகும். இது கடுமையான தவறு.
ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் என்பது நடப்பு மாதத்தின் (ஜுன் 2025) விலை மட்டங்களை முந்தைய ஆண்டின் அதே மாதத்துடன் (ஜூன் 2024) ஒப்பிடுவதாகும். மே 2025 இல் YoY உணவுப் பணவீக்கம் 5.2 சதவீதமாக இருந்ததுடன் ஜுன் மாதத்தில் அது 4.3 சதவீதமாக இருந்தது. YoY பணவீக்க விகிதம் குறைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் YoY விலைகள் அதிகரித்து வந்த வேகம் மே மாதத்தை விட ஜுன் மாதத்தில் குறைவாக இருந்தது என்பதே இதன் அர்த்தமாகும். எனினும் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன – அதாவது குறைவான விகிதத்தில் அதிகரித்துள்ளன, ஆனால் குறையவில்லை. உண்மையில் ஜுன் 2025 இல் உணவுப் பொருட்களின் விலைகள் மே 2025 ஐ விட 1.8% அதிகமாக இருந்தன.
மொத்தத்தில், 2025 ஆம் ஆண்டின் மே மற்றும் ஜுன் மாதங்களுக்கு இடையே உண்மையில் உணவுப் பொருட்களின் விலைகளில் என்ன நடந்ததோ அதற்கு எதிர்மாறாக பேராசிரியர் குறிப்பிடுகின்றார். உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார், ஆனால் உண்மையில் அவை அதிகரித்துள்ளன.
எனவே நாங்கள் பேராசிரியரின் அறிக்கையைத் தவறானது என வகைப்படுத்துகின்றோம்.
அட்டவணை 1: கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் தரவு, மே – ஜுன் 2024, 2025

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
FactCheck.lk என்பது வெரிட்டே ரிசேர்ச்சினால் முன்னெடுக்கப்படும் ஒரு தளமாகும்.
மூலம்
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI), தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS).