வேகமாக வயதாகும் நாடு என வைத்தியர் ஜாசிங்க தவறாகக் குறிப்பிடுகின்றார்

"

[இலங்கை உட்பட] சில நாடுகள் உள்ளன, […] இப்போது முதல் 2053 ஆம் ஆண்டுக்குள் அவற்றின் சனத்தொகை உச்சத்தை எட்டும்… ஆசியாவில் வேகமாக வயதாகும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே. […] 2041 ஆம் ஆண்டளவில் இந்த சனத்தொகையில் 1/4 பங்கு முதியவர்களாக இருப்பார்கள்.

நியூஸ்பெர்ஸ்ட் | ஜூலை 24, 2025

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தனது அறிக்கையில் மூன்று கூற்றுக்களை முன்வைக்கின்றார்: (1) 2041 ஆம் ஆண்டளவில் நாட்டின் 25% சனத்தொகை முதியவர்களாக இருப்பார்கள் (2) 2053 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சனத்தொகை உச்சத்தை எட்டும் (3) ஆசியாவில் வேகமாக வயதாகும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக உள்ளது.

செயலாளர் “வயதானவர்கள்” எனக் குறிப்பிடுவதை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் என FactCheck.lk விளங்கிக் கொள்கின்றது, இது அவர் மேற்கோள் காட்டும் எண்களுடன் பொருந்திப் போகின்றது. ஆசியாவிலுள்ள நாடுகளின் எண்ணிக்கை வகைப்படுத்தல்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. இந்த ஆய்வுக்காக FactCheck.lk ஐக்கிய நாடுகளின் M49 தரநிலையைப் பயன்படுத்துகின்றது, இது 50 ஆசிய நாடுகளை அங்கீகரிக்கின்றது.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் இலங்கையின் மதிப்பாய்வு புள்ளிவிபரங்கள் (தொகுதி 2, இதழ் 1, 2022) மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை பிரிவின் உலக சனத்தொகை போக்குகள் 2022 தரவுத்தொகுப்பு ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: 2041 ஆம் ஆண்டளவில் சனத்தொகையின் 25% முதியவர்களாக இருப்பார்கள்

2042 ஆம் ஆண்டளவில் வயதானவர்களின் சனத்தொகை (60+) மொத்த சனத்தொகையின் 24.7 சதவீதத்தை எட்டும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள ஆய்வின் அட்டவணை 8 கணித்துள்ளது. அதேபோன்று, வயதானவர்களின் பங்கு 2023 இல் 16.8 சதவீதத்தில் இருந்து 2041 இல் 23.2% ஆக உயர்ந்து 2045 ஆம் ஆண்டளவில் 25 சதவீதத்தை எட்டும் என ஐ.நா. நடுத்தர கருவுறுதல் கணிப்பு காட்டுகின்றது. 2040களின் நடுப்பகுதியில் இலங்கையில் 25 சதவீதமானவர்கள் வயதானவர்களாக இருப்பார்கள் என்ற செயலாளரின் கூற்றை இந்தப் புள்ளிவிபரங்கள் ஆதரிக்கின்றன.

கூற்று 2: இப்போது முதல் 2053 ஆம் ஆண்டுக்குள் சனத்தொகை உச்சத்தை எட்டும்

ஐ.நா. நடுத்தர கருவுறுதல் கணிப்பின் பிரகாரம், இலங்கையின் சனத்தொகை 2051 ஆம் ஆண்டளவில் 24.8 மில்லியனாக உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது செயலாளரின் கூற்றுடன் பொருந்துகின்றது.

கூற்று 3: ஆசியாவில் வேகமாக வயதாகும் நாடுகளில் இலங்கையும் ஒன்று

இந்தக் கூற்று இலங்கையில் வயதாகும் வேகத்தைக் குறிக்கின்றது. இந்தக் கூற்றை FactCheck.lk இரண்டு வழிகளில் சோதனை செய்கின்றது:

  • வயதானவர்களின் பங்கில் ஏற்படும் அதிகரிப்பின் வீதம்: முதியோர் சனத்தொகையில் ஏற்படும் அதிகரிப்பு அதிகமாகும்போது வயதாகும் செயற்பாடு வேகமாகின்றது. 2023 மற்றும் 2053 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் வயதானவர்களின் சனத்தொகை 1.6 மடங்கால் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மாறாக, மாலைதீவில் வயதானவர்களின் சனத்தொகை அதேகாலப்பகுதியில் 5.2 மடங்கால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆசியாவில் இந்தச் சோதனையில் இலங்கை 50 நாடுகளில் 41 ஆவதாக நிரல்படுத்தப்பட்டுள்ளது. வேகமாக வயதாகும் நாடுகளில் ஒன்றாக இல்லாமல், கீழுள்ள 20 சதவீதத்தில் இலங்கை உள்ளது.

  • 2053 ஆம் ஆண்டளவில் வயதானவர்களின் பங்கு: இந்தச் சோதனை அதிகரிப்பின் வீதத்தை மதிப்பிடாமல், 2053 ஆம் ஆண்டளவில் முதியோர் சனத்தொகையின் மொத்த எதிர்காலப் பங்கை ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகின்றது. இதில் இலங்கை 12 ஆவதாக உள்ளது. 2053 ஆம் ஆண்டளவில் 50 நாடுகளில் இது 18 ஆவதாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த நிரல்படுத்தலும் வேகமாக வயதாகும் நாடுகளில் இலங்கையைச் சேர்க்கவில்லை.

எதிர்காலத்திற்கான கணிப்புகள் செயலாளரின் கூற்றை ஆதரிக்காத போதும், நாங்கள் அவருடைய கூற்றை கடந்த காலத்தில்வயதாகும் வேகத்தின் அடிப்படையில் கருத்தில் கொண்டோம். முதலாவது சோதனையைப் பயன்படுத்தி கடந்த 30 ஆண்டுகளில் வயதாகும் வேகத்தைக் கணித்தபோது, இலங்கை 50 நாடுகளில் 18 ஆவதாக உள்ளது. அவர் குறிப்பிடுவது போன்று “வேகமாக வயதாகும் சனத்தொகையில்” ஒன்றாக இதிலும் இலங்கை இல்லை.

மொத்தத்தில், முதியோர் சனத்தொகையின் பங்கு மற்றும் சனத்தொகை உச்சத்தை எட்டும் காலப்பகுதி ஆகிய முதல் இரண்டு கூற்றுகளும் சரியாக உள்ளபோதும், மூன்றாவது கூற்றான ஆசியாவில் வேகமாக வயதாகும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது தவறாக உள்ளது.

எனவே செயலாளரின் அறிக்கையை பகுதியளவு சரியானது என நாங்கள் வகைப்படுத்துகின்றோம்.

அட்டவணை 1: 50 ஆசிய நாடுகளுக்கிடையே முதியோர் சனத்தொகையில் இலங்கையின் நிலை

குறிப்பு: 2053க்கான புள்ளிவிபரங்கள் ஐ.நா. சனத்தொகை பிரிவுகளின் அடிப்படையிலான கணிப்புகள் ஆகும்

உதாரணம்: 50 ஆவது (1.9 மடங்கு) என்பது 2023 ஆம் ஆண்டில் 50 ஆசிய நாடுகளில் இலங்கை 50 ஆவது இடத்தில் உள்ளது என்பதாகும். அத்துடன் 1.9 மடங்கு என்பது கடந்த 30 ஆண்டுகளில் (1993 முதல் 2023 வரை) 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் பங்கில் ஏற்பட்ட அதிகரிப்பைக் குறிக்கின்றது



மூலம்

மதிப்பாய்வு புள்ளிவிபரங்கள் (தொகுதி 2, இதழ் 1, 2022), தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம். https://www.statistics.gov.lk/Publication/SSR/SSR_Introduction#gsc.tab=0

உலக சனத்தொகை போக்குகள் 2022 தரவுத்தொகுப்பு, ஐ.நா. மக்கள்தொகை பிரிவு. https://www.un.org/development/desa/pd/sites/www.un.org.development.desa.pd/files/wpp2022_summary_of_results.pdf

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன