பந்துல குணவர்த்தன

அமைச்சர் குணவர்த்தன: சதொச நட்டம் தொடர்பில் ஓரளவு சரியாகக் கூறுகின்றார்.

"

(சதொச) நிறுவனம் 2015ம் ஆண்டுக்கு முன்னர் எப்பொழுதும் நட்டத்தைச் சந்தித்ததில்லை. கடந்த ஐந்து வருடத்தில் (2015 – 2019) சதொச 20 பில்லியன் ரூபாவை இழந்துள்ளது.

டெய்லி நியூஸ் | மார்ச் 10, 2021

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு நிதியமைச்சின் ஆண்டறிக்கைகள் மற்றும் லங்கா சதொசவின் ஆண்டறிக்கைகளை FactCheck ஆராய்ந்தது. குறிப்பாக லங்கா சதொச மற்றும் நிதியமைச்சின் அறிக்கைகள் 2016க்கு முன்னர் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளன. 2017க்குப் பின்னர் லங்கா சதொசவிடம் தரவுகள் எதுவும் இல்லை, அத்துடன் 2014ம் ஆண்டுக்குரிய தரவுகள் 2014 மற்றும் 2015 ஆண்டறிக்கைகளில் இரு வேறு தொகைகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டு மூலங்களின் அடிப்படையிலும் அமைச்சரின் கூற்றினை FactCheck ஆராய்ந்தது.

லங்கா சதொசவின் தரவுகளின் பிரகாரம் 2015க்கு முன்னர், 2014 ஆம் ஆண்டில் சுமார் ரூ.1.7 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது. 2014ல் ஏற்பட்ட இந்த நட்டம் காரணமாக 2015க்கு முன்னரான ஐந்தாண்டு காலப்பகுதியில் நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, லங்கா சதொசவின் தரவுகளின் பிரகாரம் அமைச்சரின் முதலாவது கூற்றுத் தவறாகும். லங்கா சதொசவின் தரவுகள் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளுக்கு இல்லாத காரணத்தினால் லங்கா சதொசவின் அறிக்கைகளைப் பயன்படுத்தி அமைச்சரின் இரண்டாவது கூற்றினை உறுதிப்படுத்த முடியாது. 2015 – 2017 காலப்பகுதிக்கு லங்கா சதொச ரூ.9.8 பில்லியன் நட்டத்தினைப் பதிவு செய்துள்ளது.

எனினும் நிதியமைச்சின் தரவுகளின் பிரகாரம் அமைச்சர் குறிப்பிட்டது போன்று 2015க்கு முன்னரான ஐந்தாண்டுகளில் லங்கா சதொச எந்த நட்டத்தையும் சந்திக்கவில்லை. எனினும் 2015 – 2019 காலப்பகுதியில் சதொசவின் நிகர நட்டம் ரூ.11.9 பில்லியன் என நிதியமைச்சு அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இது அமைச்சர் குறிப்பிடும் பெறுமதியை விட மிகவும் குறைவாகும்.

லங்கா சதொசவின் தரவுகளுடன் முரணாக இருந்தாலும் நிதியமைச்சின் தரவுகளைப் பயன்படுத்தி அமைச்சரின் முதலாவது கூற்றினை உறுதி செய்ய முடியும். இரண்டாவது கூற்றைப் பொறுத்தவரையில், நிதியமைச்சு மாத்திரமே பொருத்தமான தகவல்களைக் கொண்டுள்ளது. இது அமைச்சரின் கூற்றுடன் முரண்படுகின்றது. அமைச்சரின் கூற்றுக்கு மிகவும் சாதகமான மதிப்பீட்டினைப் பயன்படுத்தி அவரது முதலாவது கூற்றினை நிதியமைச்சின் தரவினால் ஆதரிக்க முடியும். ஆனால் அதே தரவினைப் பயன்படுத்தினால் அவரது இரண்டாவது கூற்று தவறாகும்.

ஆகவே நாங்கள் அவரது அறிக்கையை ‘பகுதியளவில் சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.



மூலம்

நிதி அமைச்சு, ஆண்டு அறிக்கைகள் 2010 – 2019, பார்வையிட: http://oldportal.treasury.gov.lk/web/guest/publications/annual-report [கடைசியாக அணுகப்பட்டது: 8 ஏப்ரல் 2021]

லங்கா சதொச, ஆண்டு அறிக்கைகள் (2010 – 2017), பார்வையிட: http://lankasathosa.org/?page_id=8944 [கடைசியாக அணுகப்பட்டது: 8 ஏப்ரல் 2021

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன