உண்மைச் சரிபார்ப்புகளும்
இராஜாங்க அமைச்சர் அவரது அறிக்கையில் (1) (செப்டெம்பர் இறுதியில்) உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் சேகரிக்கப்பட்ட வரி வருமானம் (2022 வரவு செலவுத்திட்டத்தின்) இலக்கான ரூ.915 பில்லியனில் 68.4% (ரூ.625.9 பில்லியன்) மற்றும் (2) (2022ல் இந்த இலக்கு தீர்மானிக்கப்பட்டபோது மொ.உ.உ குறையும் என எதிர்பார்க்கப்படவில்லை) மொ.உ.உற்பத்தியின் வளர்ச்சி 8.2% எதிர்மறையாக இருக்கும்போதும் வரி வருமானம் சிறப்பாக உள்ளது எனக் குறிப்பிடுகிறார்.
இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, 2023ம் ஆண்டுக்கான அரசிறை முகாமைத்துவ அறிக்கை, 2022ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
முதலாவது கூற்றைப் பொறுத்தவரையில், ஆரம்பத்தில் ரூ.908 பில்லியன் இலக்காகத் தீர்மானிக்கப்பட்டதை 2022ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டு அறிக்கை காட்டுகிறது. இந்தப் பெறுமதி 2021ம் ஆண்டில் மதிப்பிடப்பட்டது. இராஜாங்க அமைச்சர் அதை விட சற்று அதிகமாக ரூ.915 பில்லியன் எனக் குறிப்பிடுகிறார். இது 2022க்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கான திருத்தப்பட்ட அண்மைய மதிப்பீடு ஆகும். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் சேகரிக்கப்பட்ட தொகையை மதிப்பிடுவதில் இராஜாங்க அமைச்சர் பெறுமதி சேர் வரி மற்றும் வருமானம்/இலாபம் மீதான வரிகளை மட்டுமே கணக்கில் கொள்கிறார். பிற வரிகளை அவர் கருத்தில் கொள்ளவில்லை (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). சேகரிக்கப்பட்ட மொத்த வரி வருமானம் ரூ.633.2 பில்லியன் ஆகும். இது அமைச்சர் குறிப்பிடும் (ரூ.625.9 பில்லியன்) தொகையை விட சற்று அதிகமாகும். எனினும் ஒட்டுமொத்தமாக அவரது கூற்று சரியாகும்.
இரண்டாவது கூற்றைப் பொறுத்தவரையில், குறைவான வரி வருமானத்தை எதிர்பார்ப்பதற்கு உண்மையான மொ.உ.உ வளர்ச்சியில் (பெயரளவு மொ.உ.உற்பத்தியில் பணவீக்கத்தைக் கழித்தால்) எதிர்பாராமல் ஏற்பட்ட 8.2% வீழ்ச்சியை இராஜாங்க அமைச்சர் காரணமாகக் குறிப்பிடுவது தவறாகும். பெயரளவு மொ.உ.உற்பத்தியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட அதிகரிப்பு (அதிக பணவீக்கம் காரணமாக) உண்மையில் அதிக வரி வருமானத்தை எதிர்பார்ப்பதற்கான காரணமாக உள்ளது (ஏனெனில் வரி சேகரிப்பானது விற்பனை மற்றும் வருமானங்களின் பெயரளவு மதிப்பை அடிப்படையாகக் கொண்டது).
எனவே மூன்றாம் காலாண்டின் இறுதியில் (Q3) சேகரிக்கப்பட்ட வரி வருமானம் சிறப்பாக உள்ளது எனக் குறிப்பிடுவது தவறாகும். ஏனெனில் இது ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்ட இலக்கை விட 75% குறைவு என்பதுடன், பெயரளவு மொ.உ.உற்பத்தியில் ஏற்பட்ட எதிர்பாராத அதிகரிப்பைச் சரிசெய்தால் ஆரம்ப மதிப்பீட்டின் வெறும் 56.3% ஆகும்.
கூற்று ஒன்று நிதிக் கண்ணோட்டத்தில் சரியென்ற போதும், இரண்டாவது கூற்று தவறாகும். ஆகவே நாங்கள் இராஜாங்க அமைச்சரின் அறிக்கையை பகுதியளவில் சரி என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1:
Additional Note
வரவு செலவுத்திட்டம் உருவாக்கப்பட்டபோது 2022ம் ஆண்டுக்கான எதிர்வுகூறப்பட்ட பெயரளவு மொ.உ.உ வளர்ச்சி 10.8% ஆகும் (அரசிறை முகாமைத்துவ அறிக்கை 2022ன் பிரகாரம்). எனினும் 2022க்கான பெயரளவு மொ.உ.உ வளர்ச்சிக்கான தற்போதைய திருத்தப்பட்ட எதிர்வுகூறல் 34.6% ஆகும் (2023 வரவு செலவுத்திட்ட ஆவணங்களின் மூலம் கணக்கிடப்பட்டது). அதாவது பெயரளவு மொ.உ.உற்பத்தியில் 23.8% எதிர்பாராத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப சரிசெய்தால் எதிர்பார்க்கப்படும் வரி சேகரிப்பு ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ரூ. 908 பில்லியனில் இருந்து ரூ.1,124 பில்லியனாக உயரும்.
மூலம்
அரசிறை முகாமைத்துவ அறிக்கை 2023: https://www.treasury.gov.lk/api/file/321d137c-231e-4f7f-85f6-e073fcde5259 [இறுதியாக அணுகியது 8 டிசம்பர் 2022]
அரசிறை முகாமைத்துவ அறிக்கை 2022; https://www.treasury.gov.lk/api/file/16e9c6ec-7a13-4220-a8a7-1427c5d14785 [இறுதியாக அணுகியது 8 டிசம்பர் 2022]
திருத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் 2022 – தொகுதி 1; https://www.treasury.gov.lk/web/2022-detailed-revised-budget-estimates [இறுதியாக அணுகியது 8 டிசம்பர் 2022]