உண்மைச் சரிபார்ப்புகளும்
திறைசேரி செயலாளரால் ஜனவரி 18ம் திகதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தின் விபரங்களை விவரிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சர் இந்தக் கூற்றை வெளியிட்டுள்ளார். அந்த உறுதிப்பத்திரத்தில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி நிலைமை காணப்படும் நிலையில் தேர்தலை நடத்துவதற்கான நிதியை ஒதுக்குவது தொடர்பில் திறைசேரி சவால்களைச் சந்திப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தலுக்காக நிதி ஒதுக்குவதில் சவால்கள் காணப்படுவதாகக் குறிப்பிடும் திறைசேரியின் அறிக்கைக்கு ஆதரவாக, இராஜாங்க அமைச்சர் முன்வைக்கும் கருத்தில் அவர் குறிப்பிடும் பெறுமதிகள் நிதி நிலையில் மிகப்பெரும் சரிவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளன.
இந்தக் கூற்றை ஆராய்வதற்காக, நிதியமைச்சினால் வெளியிடப்பட்ட 2023ம் ஆண்டுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளை FactCheck.lk ஆராய்ந்தது.
2023ம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ.3,450 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் பெறுமதியுடன் பொருந்துகிறது. எனினும் 2023ம் ஆண்டுக்கு மதிப்பிடப்பட்டுள்ள அரச செலவினம் ரூ.5,854 பில்லியன் மட்டுமே. இராஜாங்க அமைச்சர் குறிப்பிடுவதைப் போன்று ரூ.10,000 பில்லியன் அல்ல.
2022ம் ஆண்டில் ரூ.3,058 பில்லியனாகக் காணப்பட்ட பற்றாக்குறை (வருமானத்திற்கும் செலவினத்திற்கும் இடையிலான வித்தியாசம்) 2023ம் ஆண்டில் ரூ. 6,662 பில்லியன் என இருமடங்காகி உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார். எனினும் 2022ம் ஆண்டுக்கு (டிசம்பர் 2022ல் திருத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில்) எதிர்வுகூறப்பட்ட பற்றாக்குறை ரூ.2,347 பில்லியன் என்பதுடன் 2023ம் ஆண்டுக்கு ரூ.2,405 பில்லியன் எதிர்வுகூறப்பட்டுள்ளது. அவர் இருமடங்காகியுள்ளது எனக் குறிப்பிடும்போதும் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் எதுவுமில்லை.
இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் பெறுமதிகள் ஏற்கனவேயுள்ள நிதி நெருக்கடியை மேலும் மிகைப்படுத்துகின்றன. அவர் அரச செலவினத்தை இருமடங்காகக் குறிப்பிடுவதுடன், 2023ம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் பற்றாக்குறையை சுமார் மும்மடங்காகக் குறிப்பிடுகிறார். ஆகவே இராஜாங்க அமைச்சரின் கூற்றை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: 2021 – 2023 வரை அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவினம் ரூ. பில்லியன்களில்
*செலவினத்தின் நிதி வரைவிலக்கணம்
மூலம்: ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் 2023, நிதியமைச்சு
மூலம்
ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் 2023, நிதியமைச்சு https://treasury.gov.lk/api/file/e286b9e4-59b1-406f-b324-12f2b46969f2
ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் 2022, நிதியமைச்சு
https://treasury.gov.lk/api/file/1d617e1d-482c-4adb-b652-1c58b4007895
அரச நிதி புள்ளிவிபரக் கையேடு, 2014
https://www.imf.org/external/Pubs/FT/GFS/Manual/2014/gfsfinal.pdf
பிரமாணப் பத்திரத்தின் உள்ளடக்கம் பற்றிய செய்தி அறிக்கைகள்
https://www.dailynews.lk/2023/01/19/law-order/295513/lg-polls-petition-sc-allows-treasury-secretary-file-affidavit , http://www.adaderana.lk/news/87750/securing-additional-funds-for-election-extremely-challenging-treasury-secretary-tells-sc