ரணில் விக்கிரமசிங்க

அரசாங்கத்தின் செலவினத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க குறைத்துக் குறிப்பிடுகிறார்

"

முன்னாள் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் வருமானம் ரூ.2.3 ட்ரில்லியன் என எதிர்வுகூறப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டுக்கான உண்மையான வருமானம் ரூ.1.6 ட்ரில்லியன் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் செலவினம் ரூ.3.3 ட்ரில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டெய்லி மிரர் | மே 17, 2022

false

False

உண்மைச் சரிபார்ப்புகளும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது மே 16, 2022ல் முதன் முதலில் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளையும் அதில் செய்ய வேண்டிய திருத்தங்களையும் முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதி குறிப்பிட்ட தொகைகளைச் சரிபார்க்க FactCheck.lk தீர்மானித்தது. செலவின மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதி தவறான பெறுமதியைக் குறிப்பிட்டுள்ளதை அட்டவணை 1 காட்டுகிறது. டிசம்பர் 2021ல் வெளியிடப்பட்ட ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் மொத்த செலவினம் (கடன் மீள்கொடுப்பனவு தவிர்த்து) ரூ.3.9 ட்ரில்லியன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனாதிபதி அதனை ரூ.3.3 ட்ரில்லியன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

வட்டி மற்றும் பிற கூடுதல் செலவினங்கள் காரணமாக அரசாங்கத்தின் செலவினம் ரூ.0.7 ட்ரில்லியனால் மேலும் அதிகரிக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிடுகிறார். எனினும் இந்த அதிகரிப்பால் அரசாங்கத்தின் செலவினம் அவர் உரையில் குறிப்பிட்டது போன்று ரூ.4 ட்ரில்லியனாக அன்றி ரூ.4.6 ட்ரில்லியனாகவே உயரும். இதன் காரணமாக அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை ரூ.3 ட்ரில்லியனாக அதிகரிக்கும் (ஜனாதிபதி குறிப்பிடுவது போன்று ரூ.2.4 ட்ரில்லியன் அல்ல).

டிசம்பர் 2021ல் வெளியான வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட செலவின மதிப்பீடுகளை ஜனாதிபதி குறைத்துக் குறிப்பிடுகிறார். எனவே கூடுதல் செலவினங்களுக்கான முன்மொழிவுகள் மூலம் ஏற்படக்கூடிய வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையையும் அவர் குறைத்து குறிப்பிடுகிறார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிக்கையை நாங்கள் தவறானது என வகைப்படுத்துகிறோம்.

*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.

 

அட்டவணை 1: 2022ம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் மதிப்பிடப்பட்ட நிதி நிலுவைகள்

மூலங்கள்: 2021ம் ஆண்டுக்கான நிதியமைச்சு ஒப்புதல் அளித்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் மற்றும் பிரதமராக இருந்தபோது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மே 2022ல் முதன் முதலில் அளித்த உரை



Additional Note

இந்த உரையைத் தொடர்ந்து ரூ.0.7 ட்ரில்லியன் பெறுமதியான குறைநிரப்பு மதிப்பீட்டுக்கு பாராளுமன்றம் ஜுன் 8, 2022 அன்று ஒப்புதல் அளித்தது (https://www.parliament.lk/ta/news/view/2595/?category=6). ஓகஸ்ட் 2022ல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்திலும் மொத்த செலவினம் ரூ.4.6 ட்ரில்லியன் எனத் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தமானது மேலே குறிப்பிடப்பட்ட FactCheck.lk இன் அரசாங்க செலவினத்தின் மதிப்பீட்டுடன் ஒத்துப்போகிறது.


மூலம்

2021ம் ஆண்டுக்கான நிதியமைச்சு ஒப்புதல் அளித்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள்

ஓகஸ்ட் 2022ல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டு (திருத்தம்) சட்ட மூலம், பார்வையிட http://documents.gov.lk/files/bill/2022/7/220-2022_T.pdf [இறுதியாக அணுகியது: ஆகஸ்ட் 10, 2022]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன