உண்மைச் சரிபார்ப்புகளும்
ஜனாதிபதி அவரது உரையில் இரண்டு கூற்றுக்களை முன்வைக்கிறார் – (1) அரசாங்கம் சுமார் 80 சதவீதமான காணிகளைச் சொந்தமாகக் கொண்டுள்ளது (2) முதலீட்டு நோக்கங்களுக்காக அரசாங்கம் காணிகளை ஒதுக்கீடு செய்யலாம். இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, உலக வங்கி மற்றும் UN-REDD திட்டத்தின் அறிக்கைகளை FactCheck.lk ஆராய்ந்தது.
கூற்று (1): அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகள் 85.8% என 2001 உலக வங்கியின் தரவு குறிப்பிடுகிறது. இலங்கையின் காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் தரவை மேற்கோள் காட்டி அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகள் 82.25% என UN-REDD திட்டத்தின் 2016 அறிக்கை குறிப்பிடுகிறது. கிடைக்கப்பெற்ற அறிக்கைகளில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் அளவு சுமார் 80% எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால் முதலாவது கூற்று சரியானது ஆகும்.
கூற்று (2): அரசுக்குச் சொந்தமான காணிகள் பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே பகிரப்பட்டுள்ளதுடன் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பின்வருபவை அடங்கும் (இவை மட்டுமே அல்ல): (1) முக்கியமாக இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை ஆகியவை மூலம் தனியார் விவசாயிகள் மற்றும் தோட்டக் கம்பனிகள் ஆகியவற்றுக்கு குத்தகைக்கு வழங்கப்படும் காணிகள், (2) காடுகள், பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட காணிகள் (3) நகர்ப்புற அரச காணிகள்.
காணி உபயோகம் தொடர்பில் FactCheck.lk க்கு கிடைத்த சமீபத்திய தரவு உலக வங்கியின் 2001 அறிக்கை ஆகும். 2001ம் ஆண்டிலும் கூட, மொத்த காணிகளில் 21% தனியார் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக அரசாங்கத்தால் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தது. 2010ம் ஆண்டில் மொத்தக் காணிகளில் 30.2% அரசுக்குச் சொந்தமான காடுகள் என UN-REDD அறிக்கை குறிப்பிட்டிருந்தது. குத்தகைக்கு வழங்கப்பட்ட காணிகளோ காடுகளோ முதலீட்டுக்காக எளிதாக ஒதுக்கப்பட முடியாது. ஆகவே பாதுகாக்கப்பட்ட பகுதிகளையும் நிலப்பரப்புகளையும் கணக்கில் கொள்ளாவிட்டாலும் 31 சதவீதத்திற்கு மேற்பட்ட காணிகளுக்கான அணுகலை அரசாங்கத்தால் எளிதாகவும் உடனடியாகவும் வழங்க முடியாது என்பதைத் தரவு சுட்டிக்காட்டுகிறது. எனினும் முதலீட்டுக்காக ஒதுக்கப்படக்கூடிய அரச காணிகளின் சதவீதத்தை ஜனாதிபதி குறிப்பிடவில்லை. 80 சதவீதமான காணிகளையும் முழுமையாக வழங்க முடியாவிட்டாலும் அரசாங்கத்தால் முதலீட்டுக்காக நிலங்களை ஒதுக்க முடியும் என்பதால் இரண்டாவது கூற்றும் சரியானது ஆகும்.
ஆகவே நாங்கள் அவரது கூற்றை சரியானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: காணி உரிமை மற்றும் உபயோகம் (உலக வங்கி, 2021)
மூலம்: உலக வங்கி 2021
மூலம்
முன்மொழியப்பட்ட இலங்கையின் தேசிய REDD+ மூலோபாயத்தில் நில உடமைப் பரிசீலனைகள், UNREDD, https://www.un-redd.org/document-library/land-tenure-considerations-sri-lankas-proposed-national-redd-strategy [இறுதியாக அணுகியது: 27 அக்டோபர் 2022]
இலங்கையில் காணி நிர்வாகத்தின் தரத்தை மேம்படுத்துதல் (ஆங்கிலம்), வாஷிங்டன் டி.சி.: உலக வங்கி குழுமம் http://documents.worldbank.org/curated/en/750021530107195459/Improving-quality-of-land-administration-in-Sri-Lanka [இறுதியாக அணுகியது: 27 அக்டோபர் 2022]