உண்மைச் சரிபார்ப்புகளும்
டெய்லி மிரருக்கு வழங்கிய நேர்காணலில், இலங்கையின் தற்போதைய பொருளாதார “இயல்பு நிலை” ”சௌகரியமற்ற சமநிலையில்” உள்ளது என்பதற்கு உதாரணமாக மாதாந்த எரிபொருள் கட்டணக் குறைப்பை பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார். ஒரு மாதத்திற்கு ஐ.அ.டொ 550 மில்லியனிலிருந்து ஐ.அ.டொ 200 மில்லியன் வரை எரிபொருள் கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் மாதாந்தம் ஐ.அ.டொ 350 மில்லியனை நாடு சேமிப்பதாக அவர் தனது உதாரணத்தில் குறிப்பிடுகிறார். அவர் குறிப்பிடும் சமநிலையானது வெளிநாட்டு நாணயங்களின் உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சலின் சமநிலை ஆகும்.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, இலங்கை மத்திய வங்கி வெளியிடும் வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள், மாதாந்த இறக்குமதிச் செலவினம் மற்றும் பெற்றோலியப் பொருட்களின் விற்பனை ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
ஐ.அ.டொ 550 மில்லியனை விட அதிகமாக ஒரு முறை மட்டுமே எரிபொருளுக்காகச் செலவிடப்பட்டுள்ளது என்பதை இலங்கையின் மாதாந்த இறக்குமதித் தரவு அறிக்கை காட்டுகிறது. இது 2012 நவம்பரில் இடம்பெற்றுள்ளது. அந்த மாதத்தில் எரிபொருளுக்காக ஐ.அ.டொ 581 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் ஒரு முறை மட்டுமே அறிக்கையிடப்பட்ட மாதாந்த எரிபொருள் கட்டணமானது ஐ.அ.டொ 200 மில்லியனுடன் ஓரளவு நெருங்கி வந்துள்ளது. கடந்த 6 மாத கால சராசரியானது ஐ.அ.டொ 355 மில்லியன் என்பதுடன் கடந்த 3 மாத கால சராசரியானது ஐ.அ.டொ 398 மில்லியன் ஆகும் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).
”சாதாரண எரிபொருள் கட்டணத்தில்” முன்னெடுக்கப்பட்ட சேமிப்பு தொடர்பான பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரிபார்க்க, மாதாந்த சராசரி எரிபொருள் இறக்குமதி செலவினமானது 2019ம் ஆண்டு (கோவிட் 19 மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முன்னரான காலப்பகுதி) மற்றும் 2022ம் ஆண்டிற்கு (நவம்பர் வரையில்) இடையே ஒப்பிடப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் மாதாந்த சராசரி எரிபொருள் இறக்குமதிகள் ஐ.அ.டொ 86 மில்லியனால் அதிகரித்துள்ளதை தரவு காட்டுகிறது. எனவே எரிபொருளுக்கான வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சலில் முன்னெடுக்கப்பட்ட சேமிப்பு தொடர்பான உதாரணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகள் உத்தியோகப்பூர்வ தரவுடன் முரணாக உள்ளன.
எரிபொருள் இறக்குமதிகளுடன் தொடர்புடைய நிகர நாணய உட்பாய்ச்சல்கள்/வெளிப்பாய்ச்சல்களின் ”சௌகரியமற்ற சமநிலை” தொடர்பான பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரிபாரக்க, இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் அளவு குறித்த இலங்கை மத்திய வங்கியின் தரவை FactCheck.lk ஆராய்ந்தது. 2019 மற்றும் 2022ம் ஆண்டுகளுக்கான இறக்குமதி மற்றும் விற்பனைகளை ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டில் பெற்றோலியப் பொருட்களான மண்ணெண்ணெய், பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விற்பனை முறையே 31%, 13% மற்றும் 10 சதவீதத்தால் குறைந்துள்ளன. அத்துடன் மசகு எண்ணெயில் 44% வீழ்ச்சி காணப்படுகிறது (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவதைப் போன்று இறக்குமதிப் பெறுமதிகள் குறையவில்லை என்பதுடன் நாணய உட்பாய்ச்சல்/வெளிப்பாய்ச்சல் சமநிலை பெற்றோலியத் துறையில் ஏற்பட்ட அசாதாரண மற்றும் வலுக்கட்டாயமாகக் குறைக்கப்பட்ட தேவையில் (எரிபொருளுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் மின் வெட்டுகள்) தங்கியிருப்பதைக் காட்டுகிறது.
ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகள் மற்றும் உதாரணம் என்பன தவறாகும். ஆனால் வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்கள்/வெளிப்பாய்ச்சல்களின் சௌகரியமற்ற சமநிலைக்கு ஆதரவாக அவர் இறக்குமதிகள்/விற்பனைகளின் பெறுமதியைக் குறிப்பிடாமல் அவற்றின் அளவைக் குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும். ஆகவே அவரது அறிக்கையை பகுதியளவு சரியானது என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 2: பெற்றோலியப் பொருட்களின் மாதாந்த சராசரி விற்பனை மற்றும் மசகு எண்ணெய் இறக்குமதிகள்
அட்டவணை 3: சராசரி மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவினம்
Additional Note
ஒவ்வொரு ஆண்டும் சராசரி மாதாந்த எரிபொருள் கட்டணம் ஐ.அ.டொ 550 மில்லியனுக்கும் குறைவாக உள்ளதை கிடைக்கும் சமீபத்திய தரவு (2007ம் ஆண்டு முதல் நவம்பர் 2022 வரை) காட்டுகிறது. 2009ம் ஆண்டில் மட்டுமே சராசரி மாதாந்த எரிபொருள் கட்டணம் ஐ.அ.டொ 200 மில்லியனை விடக் குறைவாக உள்ளது (அட்டவணை 3 ஐப் பார்க்கவும்).
மூலம்
இலங்கை மத்திய வங்கியால் அறிக்கையிடப்பட்ட மாதாந்த இறக்குமதிச் செலவினம், பார்வையிட –https://www.cbsl.gov.lk/en/statistics/statistical-tables/external-sector (இறுதியாக அணுகியது: ஜனவரி 1, 2023)
இலங்கை மத்திய வங்கியின் தரவு நூலகம், பார்வையிட – https://www.cbsl.gov.lk/en/statistics/data/economic-data-library (இறுதியாக அணுகியது: ஜனவரி 1, 2023)
இலங்கை மத்திய வங்கி அறிக்கையிட்ட மாதாந்த இறக்குமதிச் செலவினம் மற்றும் வாராந்தப் பொருளாதாரக் குறிகாட்டிகள், பார்வையிட, https://www.cbsl.gov.lk/en/statistics/economic-indicators (இறுதியாக அணுகியது: ஜனவரி 1, 2023)