உண்மைச் சரிபார்ப்புகளும்
2018 – 2021 காலப்பகுதியில் காற்றின் தரத்தில் இலங்கை ஆசியாவிலும் உலகளவிலும் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளதாக காற்றின் தரம் தொடர்பான நிரல்படுத்தலை அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, உலகளவில் காற்றின் தரம் தொடர்பான (WAQR – World Air Quality Report) 2018 மற்றும் 2021 (இறுதியாகக் கிடைப்பது) அறிக்கைகளை FactCheck.lk ஆராய்ந்தது. காற்றின் தரம் தொடர்பான உலகளாவிய புள்ளிவிபரங்களையும் ஒப்பீடுகளையும் வழங்கும் முதன்மையான மூலமாக இந்த அறிக்கைகளையே FactCheck.lk குழுவினால் பெற முடிந்தது. இந்த அறிக்கையானது ஆண்டுதோறும் IQAir எனும் அமைப்பினால் வெளியிடப்படுகிறது. உலகளவில் 117 நாடுகள் மற்றும் 6,475 நகரங்களின் PM2.5 (துகள்கள்) காற்றின் தரம் குறித்த நிகழ்நேர மற்றும் கடந்த காலத் தரவை வழங்குவதற்காக IQAir ஒரு தளத்தை முன்னெடுத்து வருகிறது. PM2.5 என்பது 2.5 மேக்ரோன்கள் அல்லது அதை விடக் குறைந்த விட்டத்தைக் கொண்ட நுண்துகள்களைக் கொண்ட காற்று மாசுபடுத்தி ஆகும். மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தூசுப்படலமாக இது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் இது இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படும் அளவிற்கு மிகச் சிறியதாக உள்ளதுடன் நுரையீரல்களில் படிந்தும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆசியாவைப் பொறுத்தவரையில் அமைச்சர் பிராந்திய நிரல்படுத்தல்களைக் குறிப்பிடுகிறார். அவ்வாறான நிரல்படுத்தல்களை FactCheck.lk இனால் கண்டறிய முடியவில்லை. எனினும் WAQR அறிக்கைகள் தெற்காசியா, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிராந்திய நிரல்படுத்தல்களை வழங்குகிறது.
WAQR அறிக்கையின் பிரகாரம், 2018ம் ஆண்டு காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை தெற்காசியாவில் 6வது இடத்திலும் உலகளவில் 18வது இடத்திலும் நிரல்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது சராசரியாக 32.0µg/m³ PM2.5 செறிவைக் கொண்டிருந்தது. அதேவேளை 2021 WAQR அறிக்கையின் பிரகாரம், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் இலங்கை 12வது இடத்திலும் உலகளவில் 58வது இடத்திலும் நிரல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன்போது சராசரி PM2.5 செறிவு 17.4µg/m³ ஆகக் காணப்பட்டது.
இலங்கையில் காற்றின் தரம் பிராந்தியத்திலும் உலகளாவிய நிரல்படுத்தலிலும் முன்னேறியுள்ளது என்ற இராஜாங்க அமைச்சரின் கூற்று சரியானது என தரவு உறுதிப்படுத்துகிறது. 2018 – 2021 காலப்பகுதியில் இலங்கையில் காற்றின் தரம் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது. WAQR அறிக்கையின் படி PM2.5ன் சராசரி செறிவு இந்தக் காலப்பகுதியில் பாதியளவு குறைந்துள்ளது.
ஆகவே நாங்கள் அவரது அறிக்கையை சரியானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மேலதிகக் குறிப்பு: அண்மைக் காலங்களில் இலங்கையில் காற்றின் தரம் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியிருந்தபோதும், அமைச்சர் இந்தக் கூற்றை வெளியிட்ட காலப்பகுதியில் இலங்கை மோசமான காற்று மாசினால் பாதிக்கப்பட்டிருந்தது. நாட்டின் முக்கியமான பல நகரங்களில் “ஆரோக்கியமற்றது” என வகைப்படுத்தப்படும் 55.5-150.4µg/m³ செறிவைக் கொண்ட PM2.5 காற்று மாசு கண்டறியப்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மேம்பட்ட துல்லியத்திற்காகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப சரிசெய்யும் காரணிகளுடன் இலங்கையின் காற்றின் தரம் தொடர்பான நிகழ்நேர தரவை www.airquality.lk தளம் மட்டுமே வழங்குகிறது. அரசாங்கத்துடன் இணைந்து இலங்கையின் பல நகரங்களுக்கான காற்றின் தரம் தொடர்பான தரவையும் காற்றின் தரத்தின் அடிப்படையில் முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதலையும் இது வழங்குகிறது.
அட்டவணை 1: கடந்த ஆண்டுகளில் இலங்கையின் காற்றின் தரம் தொடர்பான நிரல்படுத்தல்கள்
மூலம்: உலக காற்று தர அறிக்கை 2018, உலக காற்று தர அறிக்கை 2021
* தெற்காசியாவில்
** தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில்
அட்டவணை 2: காற்றில் PM2.5 செறிவின் அடிப்படையில் பாதுகாப்பு வகைப்படுத்தல்
மூலம்: Airquality.lk
மூலம்
IQAir, உலக காற்று தர அறிக்கை 2021; https://www.iqair.com/world-air-quality-report.[இறுதியாக அணுகியது 15 டிசம்பர் 2022]
IQAir, உலக காற்று தர அறிக்கை 2018; https://www.iqair.com/world-most-polluted-countries.[இறுதியாக அணுகியது 15 டிசம்பர் 2022]