உண்மைச் சரிபார்ப்புகளும்
அமைச்சர் தனது அறிக்கையில் இரண்டு விடயங்களைக் குறிப்பிடுகிறார். (1) சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய நிகழ்ச்சித் திட்டத்தில் உதவியைப் பெறுவதற்கு முன்னதாக இலங்கை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அதேவேளை இதற்கு முந்தைய நிகழ்ச்சித் திட்டங்களின்போது நிதியுதவி கிடைத்ததன் பின்னரே நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டன. (2) சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை (ஊழியர் மட்ட ஒப்பந்தத்திற்குப் பின்னர்) நிறைவுசெய்வதில் இலங்கை மிக வேகமாகச் செயல்பட்டுள்ளது. அவற்றை 7 மாதங்களுக்குள் நிறைவுசெய்துள்ளது.
முதலாவது கூற்று: இந்தக் கூற்றைச் சரிபார்க்க 2016 மற்றும் 2009ம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்ட IMF நிகழ்ச்சித் திட்டங்களின் நோக்கத்திற்கான கடிதங்களை FactCheck.lk ஆராய்ந்தது. இந்தக் கடிதங்களில் IMF மற்றும் இலங்கைக்கு இடையில் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட கடமைப்பாடுகள் (நிபந்தனைகள்/நடவடிக்கைகள்) உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான 2016 IMF நிகழ்ச்சித் திட்டத்தில் 4 முன்னைய நடவடிக்கைகள் (திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள்) மற்றும் 19 அமைப்பியல் அளவிடல்கள் (நிதியுதவி வழங்குவது தொடங்கப்பட்ட பின்னர் நிறைவேற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள்) உள்ளன. அதேபோன்று 2009 நிகழ்ச்சித் திட்டத்தில் 6 முன்னைய நடவடிக்கைகளும் 8 அமைப்பியல் அளவிடல்களும் உள்ளன. நோக்கத்திற்கான கடிதங்களின் பிரகாரம் IMF சபை மட்ட ஒப்புதலுக்கு முன்னதாக இரண்டு திட்டங்களுக்குமான முன்னைய நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்பட்டன. ஆகவே தற்போதைய திட்டமானது முந்தைய திட்டங்களை விட வித்தியாசமானது என்ற அமைச்சரின் முதலாவது கூற்று தவறாகும்.
இரண்டாவது கூற்று: அட்டவணை 1ல் விளக்கப்பட்டுள்ளதைப் போன்று கடன் மறுசீரமைப்பு நிகழ்ச்சியில் இணைந்த நாடுகளில் சுமார் அரைவாசியானவை ஊழியர் மட்ட ஒப்புதலை அடைந்த 46 நாட்களுக்குள் சபை மட்ட ஒப்புதலைப் பெற்றிருக்கின்றன. மற்றைய அனேகமான நாடுகள் 100 நாட்களுக்குள் பெற்றிருக்கின்றன. ஆனால் இலங்கைக்கு 200 நாட்கள் (சுமார் 7 மாதங்கள்) தேவைப்பட்டுள்ளது. ஆகவே அமைச்சரின் இரண்டாவது கூற்றும் தவறாகும்.
IMF இன் தற்போதைய நிகழ்ச்சியில் இணையும் செயற்பாட்டில் இலங்கை மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிடுகிறார். அந்தக் கருத்துக்காக அவர் முன்வைக்கும் இரண்டு கூற்றுகளும் தவறாகும். அத்துடன் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் IMF திட்டத்தை முன்னெடுப்பதற்கு எடுத்துக் கொண்ட காலத்தைக் கருத்தில் கொள்ளும்போது இலங்கை சிறப்பான நாடுகளில் இல்லை (அமைச்சர் குறிப்பிடுவதைப் போன்று), ஆனால் மோசமான நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆகவே நாங்கள் அவரது அறிக்கையை முற்றிலும் தவறானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் இணைந்த நாடுகள் ஊழியர் முதல் சபை மட்ட ஒப்புதலுக்கு எடுத்துக்கொண்ட காலம்
மூலம்
https://www.veriteresearch.org/publication/issue-2-17-march-2023-verite-research-debt-update/ [இறுதியாக அணுகியது 19 ஏப்ரல் 2023]
https://www.imf.org/en/Publications/CR/Issues/2016/12/31/Sri-Lanka-Staff-Report-for-the-2016-Article-IV-Consultation-and-Request-for-a-Three-Year-43960 [இறுதியாக அணுகியது 19 ஏப்ரல் 2023]
https://www.imf.org/en/Publications/CR/Issues/2016/12/31/Sri-Lanka-Request-for-Stand-By-Arrangement-Staff-Report-Staff-Supplements-Press-Release-on-23388 [இறுதியாக அணுகியது 19 ஏப்ரல் 2023]