உண்மைச் சரிபார்ப்புகளும்
டித்வா புயலுக்குப் பின்னர் நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முந்தைய ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தின் புதிய அனுமதி இன்றி அனர்த்தத்துடன் தொடர்புடைய செலவினங்களுக்கு நிதியைப் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறான நிதி உள்ளதா மற்றும் அப்படி இருந்தால் குறைந்தபட்சம் ரூ. 30 பில்லியன் தொகை கிடைக்குமா (பாராளுமன்றத்தின் புதிய அனுமதியால் கட்டுப்படுத்தப்படவில்லை) என்பதை ஆராய்வதன் மூலம் இந்தக் கூற்றை FactCheck.lk மதிப்பிடுகின்றது.
இந்தக் கூற்றைச் சரிபார்க்க, 2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இல. ஒதுக்கீட்டுச் சட்டம், 2025 ஆம் ஆண்டுக்கான அனுமதி அளிக்கப்பட்ட விரிவான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள், 2026 ஆம் ஆண்டுக்கான அனுமதி அளிக்கப்பட்ட விரிவான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் மற்றும் 2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இல. பகிரங்க நிதிசார் முகாமைத்துவச் சட்டம் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
- பாராளுமன்றத்தின் அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடிய நிதிகள் உள்ளனவா?
ஆம், ஏனென்றால் 2025 ஆம் ஆண்டின் 3 ஆம் இல. ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 6(1), தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளின் கீழான ஒதுக்கீடுகளை தேவைக்கேற்ப கைமாற்றக்கூடியதாக ஆக்குகின்றது. வேறு ஏதேனும் நிகழ்ச்சித்திட்டம் அல்லது செலவினத் தலைப்பிற்கு மாற்றுவதன் மூலம் மட்டுமே அதனைப் பயன்படுத்த முடியும். ஒவ்வொரு ஆண்டிற்கும் பாராளுமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் உள்ள வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு திறைசேரி செயலாளரின் (அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள்) கட்டளையின் படி இதனை முன்னெடுக்க முடியும் (மேலதிகக் குறிப்பு 1 ஐப் பார்க்கவும்).
2025 ஆம் ஆண்டுக்கு, இந்த ஒதுக்கீடுகளுக்கு ஒதுக்கீட்டுச் சட்டம் மற்றும் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் ஆகியவற்றின் ஊடாக பாராளுமன்றம் அனுமதி அளித்திருந்தது. தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளில் இரண்டு கூறுகள் உள்ளன: (1) வருடாந்த வரவு செலவுத்திட்ட ஒதுக்கு (ABR) (2) வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). வருடாந்த வரவு செலவுத்திட்ட ஒதுக்கின் கீழ் கிடைக்கப்பெறும் ஒதுக்கீடுகளுக்கான வழிகாட்டுதல்கள் 2025 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வருடாந்த வரவு செலவுத்திட்ட ஒதுக்கிற்கு, இயற்கை பேரிடர் மீட்பு உட்பட 11 அனுமதிக்கப்பட்ட பயன்பாடுகள் வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவு கூறுகளுக்கான அனுமதிக்கப்பட்ட நோக்கங்களின் பட்டியலை வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகள் குறிப்பிடாத போதும், பிரிவு 6(1) வரவு செலவுத்திட்ட முன்மொழிவு தலைப்புகளில் இருந்து நிதியைக் கைமாற்ற திறைசேரியை அனுமதிக்கின்றது. ஏனெனில் இது தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளின் கீழ் வருகின்றது. இதன் மூலம் ABR மாத்திரமன்றி, கைமாற்றுவதற்கு மேலும் அதிக நிதி கிடைக்கின்றது.
- குறைந்தது ரூ.30 பில்லியன் நிதி உள்ளதா?
மீளத்திருத்தப்பட்ட 2025 வரவு செலவுத்திட்ட பெறுமதிகளின் அடிப்படையில் ஆம்.
2025 வரவு செலவுத்திட்டத்தில் ABRக்கு ரூ.37.5 பில்லியன் பாராளுமன்றத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தது (அட்டவணை 1). நிதியாண்டின் தொடக்கத்தில் இந்த தலைப்பின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. ABR இல் உள்ள நிதி பயன்படுத்தப்பட்டால் வரவு செலவுத்திட்ட தலைப்பிற்கான பெறுமதி குறைக்கப்படுவதுடன் எந்த செலவினத்தின் (பரிமாற்றம்) கீழ் அறிக்கையிடப்படுகின்றதோ அந்த வரவு செலவுத்திட்ட தலைப்பின் பெறுமதி அதிகரிக்கும் வகையில் வரவு செலவுத்திட்ட பெறுமதிகள் அறிக்கையிடப்படுகின்றன.
எனவே ABRக்கான மீளத்திருத்தப்பட்ட 2025 வரவு செலவுத்திட்டப் பெறுமதியான ரூ.26.9 பில்லியன் “செலவிடப்படாதது” எனவும் பயன்படுத்தப்பட முடியும் எனவும் விளங்கிக் கொள்ளலாம்.
இந்தத் தொகை ஜனாதிபதி குறிப்பிடும் ரூ.30 பில்லியன் என்பதை விடச் சற்றுக் குறைவாக உள்ளபோதும், மேலே விளக்கப்பட்டது போன்று, வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் கூறிலிருந்து பாராளுமன்றத்தின் புதிய அனுமதியின்றி அவசரத் தேவைகளுக்காக திறைசேரியால் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். ரூ.96.2 பில்லியன் செலவிடப்படாமல் உள்ளது என மீளத்திருத்தப்பட்ட 2025 வரவு செலவுத்திட்ட பெறுமதிகள் சுட்டிக்காட்டுகின்றன (அட்டவணை 1).
மொத்தத்தில், மீளத்திருத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் நிதி உள்ளது என்பதுடன் அந்த நிதியை பாராளுமன்றத்தின் புதிய அனுமதி இன்றிப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி சரியாகக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும் அவ்வாறான நிதியில் ரூ.30 பில்லியன் செலவினங்களுக்காகப் பயன்படுத்த முடியும் என்பதையும் அவர் சரியாகத் தெரிவித்திருக்கின்றார்.
எனவே நாங்கள் ஜனாதிபதியின் கூற்றை சரியானது என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
அட்டவணை 1: தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் அபிவிருத்தி செயற்பாடுகள் தலைப்பிற்கான ஒதுக்கீடுகள், ரூ. பில்லியனில்

மூலங்கள்: 2025 அனுமதி அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் மற்றும் 2026 அனுமதி அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள்
மூலம்
2025 அனுமதி அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் மற்றும் 2026 அனுமதி அளிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள்