உண்மைச் சரிபார்ப்புகளும்
[அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரிவர நிறைவேற்றியுள்ளனர் [சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்] … குறிப்பாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கைகளிலிருந்து அதனைத் தெரிந்துகொள்ள முடியும். அவர்கள் நவம்பர் 11 முதல் 23 வரை ஊடகங்களில் தோன்றி இவ்வாறான ஒரு நிலைமை எதிர்வரும் நாட்களில் நாட்டில் ஏற்படும் என எதிர்வுகூறியிருந்தனர்.]
வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் ரஹுமான் கருத்து தெரிவித்துள்ளார்
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு எச்சரிக்கைகளை விடுத்து “தங்கள் கடமைகளை நிறைவேற்றியுள்ளனர்” எனவும் தித்வா சூறாவளி “போன்ற நிலைமை ஒன்று” நாட்டில் “ஏற்படலாம்” என 2025 நவம்பர் 11 முதல் 23 வரை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கைகள் மூலம் தெளிவாவதாகவும் டிசம்பர் 4, 2025 அன்று ஊடகங்களிடம் உரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் வாதிட்டுள்ளார்.
நவம்பர் 11, 2025 முதல் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சூறாவளி தொடர்பான பொது எச்சரிக்கைகளை வெளியிட்டு கடமையை நிறைவேற்றியுள்ளதா என்பதை ஆராய்வதன் மூலம் FactCheck.lk இந்தக் கூற்றைச் சரிபார்க்கின்றது.
- ‘சூறாவளி தொடர்பான’ எச்சரிக்கையாகக் கருதப்படுபவை எவை?
உலக வளிமண்டலவியல் அமைப்பு மற்றும் ஆசிய – பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழு (WMO/ESCAP) ஆகியவற்றின் வெப்பமண்டல சூறாவளிகளுக்கான குழுவில் இலங்கை ஆரம்பகால உறுப்பினராகும். இந்த அமைப்பின் கீழ், பிராந்திய சிறப்பு வளிமண்டலவியல் நிலையம் – வெப்பமண்டல சூறாவளிகள், புது டெல்லி (RSMC-TCND) இந்திய வளிமண்டலவியல் திணைக்களத்தின் சூறாவளி எச்சரிக்கை பிரிவுடன் இணைந்து செயல்படுகின்றது. இது பிராந்திய அளவில் சூறாவளி கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அறிவிப்புகளுக்கான உத்தியோகபூர்வ ஆதாரமாகச் செயல்படுகின்றது. RSMC-TCND பயன்படுத்தும் துறைசார்ந்த சொற்களின் பிரகாரம், “சூறாவளி உருவாக்கம்” என்பது காற்றழுத்த தாழ்வு மண்டல நிலை அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் வலுப்பெறுவதைக் குறிக்கின்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலை “சூறாவளி குழப்ப நிலைகள்” என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த உண்மைச் சரிபார்ப்பிற்காக, ‘சூறாவளியுடன் தொடர்புடையது’ எனக் கருதப்படும் எச்சரிக்கையானது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது அதற்கு மேல் வலுப்பெறும் நிலையில் உள்ளதை அறிவிக்கும் கட்டத்திலிருந்தே தொடங்குகின்றது. வெறுமனே மழையைக் கொண்டுவரும் குறைந்த காற்றழுத்தப் பகுதிகள் இருப்பதைக் குறிப்பிடும் தகவல்கள் இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
- வளிமண்டலவியல் திணைக்களம் சூறாவளி தொடர்பான முதலாவது எச்சரிக்கையை எப்போது வெளியிட்டது?
இந்த உண்மைச் சரிபார்ப்பிற்காக ஆய்வு செய்யப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய உத்தியோகபூர்வ வானிலை முன்னறிவிப்புகள், அதன் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் நாளாந்தம் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில், சூறாவளி தொடர்பான முதலாவது தெளிவான எச்சரிக்கை (“காற்றழுத்த தாழ்வு மண்டலம்” என்ற சொல் குறிப்பிடப்பட்டுள்ளது) நவம்பர் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட கடற்பரப்பு தொடர்பான முன்னறிவிப்பில் காணப்படுகின்றது (ஆனால் இது வானிலை முன்னறிவிப்பில் இடம்பெறவில்லை). மேலும், வளிமண்டலவியல் திணைக்களம் சார்பில் பல்வேறு செய்தி ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட ஊடக விளக்கங்களும் ஆராயப்பட்டன. எனினும், அவை வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையப் பக்கங்களில் பதிவிடப்படவில்லை. மீனவர்களுக்கான சூறாவளி தொடர்பான எச்சரிக்கை ஒன்று நவம்பர் 20 ஆம் திகதி ஊடகத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் வளிமண்டலவியல் திணைக்களம் சூறாவளி தொடர்பான எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. மேலும் நவம்பர் 25 ஆம் திகதி வரை நாளாந்த வானிலை முன்னறிவிப்பிலும் எச்சரிக்கை இடம்பெறவில்லை. அன்றைய தினம் வானிலை தொடர்பில் சிறப்பு அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் காலவரிசை தவறானது: “நவம்பர் 11 முதல்” வளிமண்டலவியல்திணைக்களம் சூறாவளி தொடர்பான எச்சரிக்கைகளை வெளியிடவில்லை. பதிவுகளில் காணப்படும் அத்தகைய உத்தியோகபூர்வசூறாவளி தொடர்பான எச்சரிக்கை நவம்பர் 21 ஆம் திகதியே வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, ஊடக விளக்கங்கள் மூலம்வழங்கப்பட்ட எச்சரிக்கை நவம்பர் 11 ஆம் திகதி அன்றி, நவம்பர் 20 ஆம் திகதியே இடம்பெற்றுள்ளது. எனவே, இவ்விரண்டிலும்எதுவும் நவம்பர் 11 ஆம் திகதி அன்று வழங்கப்படவில்லை.
- நவம்பர் 11–19 காலப்பகுதியில், சூறாவளி தொடர்பான எச்சரிக்கைகளை முன்கூட்டியே வெளியிட வளிமண்டலவியல் திணைக்களத்திடம் போதுமான தகவல்கள் இருந்தனவா?
பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் தொடக்கத் திகதி தவறாக இருந்தாலும் அவர் குறிப்பிடும் கூற்றான (அதாவதுவளிமண்டலவியல் திணைக்களம் “தமது கடமையை சரிவர நிறைவேற்றியது”) என்பது அந்தக் காலப்பகுதியில் சூறாவளிதொடர்பான தகவல்கள் இல்லாமல் இருந்திருந்தால் உண்மையாக இருக்கக்கூடும். ஆனால், தித்வா சூறாவளியுடன் தொடர்புடைய தகவல்கள், வளிமண்டலவியல் திணைக்களம் சூறாவளி தொடர்பில் வெளியிட்ட முதலாவது எச்சரிக்கைக்கு முன்னதாகவே RSMC-TCND வழங்கிய நம்பகமான முன்னறிவிப்பில் இடம்பெற்றிருந்ததைச் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நவம்பர் 13 ஆம் திகதி வெளியான RSMC-TCND அறிக்கையில், நவம்பர் 21 முதல் 27 வரையிலான காலப்பகுதியில் வங்காள விரிகுடாவின் தென்பகுதி மற்றும் இலங்கைக்கு அருகாமையில் 40–60% சாத்தியக்கூறுடன் சூறாவளி தொடர்புடைய நிலைஉருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், RSMC-TCND வெளியிட்ட தித்வா தொடர்பான அதன் ஆரம்பஅறிக்கை மற்றும் அதன் 2025 ஆண்டறிக்கை (பிரிவு 2.16.3, பக்கம் 286; பிரிவு 4.3.4.1, பக்கம் 363) ஆகியவற்றிலும், “நவம்பர் 26 ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு மண்டல நிலை உருவாவதற்கு சுமார் 13 நாட்களுக்கு முன்னரே”, அதாவது நவம்பர் 13 ஆம் திகதி முதல், தித்வா தொடர்பில் கண்காணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுருக்கமாகக் கூறினால், நவம்பர் 13 ஆம் திகதி முதல் சூறாவளியுடன் தொடர்புடைய தகவல்கள் இருந்தபோதிலும், அவைநவம்பர் 21 ஆம் திகதி வரை வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வானிலை முன்னறிவிப்புகளில்பிரதிபலிக்கப்படவில்லை. (அத்துடன் நவம்பர் 20 ஆம் திகதி வரை எந்த வடிவிலும் இத்தகவல்கள் வெளியிடப்படவில்லை).
நவம்பர் 11 ஆம் திகதி முதல் சூறாவளி தொடர்பான எச்சரிக்கைகளை வெளியிட்டு அதிகாரிகள் “தங்கள் கடமையை நிறைவேற்றியுள்ளனர்” என்ற பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை, கிடைக்கப்பெறும் ஆதாரங்கள் ஆதரிக்கவில்லை. முதலாவதாக, நவம்பர் 11 ஆம் திகதி முதல் வளிமண்டலவியல் திணைக்களம் சூறாவளி தொடர்பான எந்த எச்சரிக்கையையும் வெளியிடவில்லை. சூறாவளி தொடர்பான தெளிவான எச்சரிக்கை, நவம்பர் 20 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதன் ஊடக விளக்கத்தில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இரண்டாவதாக, தித்வா தொடர்பான சூறாவளி சார்ந்த தகவல்கள், நவம்பர் 13 முதல் RSMC-TCND முன்னறிவிப்பில் காணப்பட்ட போதிலும், அவை நவம்பர் 25 ஆம் திகதி வரை வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வானிலை முன்னறிவிப்புகளில் வெளிப்படுத்தப்படவில்லை.
எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றை தவறானது என வகைப்படுத்துகின்றோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனதுமுடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மேலதிகக் குறிப்பு 1: சூறாவளிக்கான முன்னறிவிப்புகள் பெரும்பாலும் இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் உருவாக்கிய பல மாதிரிகள் ஒருங்கிணைந்த (MME) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது என RSMC-TCND இன் 2025 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணேஷ் மற்றும் பலர் (2019) மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், MME முறையானது, சூறாவளி உருவாவதற்கு (cyclogenesis) சுமார் 11–12 நாட்களுக்கு முன்னரே அதன் உருவாக்கக் குறியீடுகளைக் கண்டறிந்து பின்தொடரக் கூடிய திறன் கொண்டதாக உள்ளது. எனினும், சூறாவளி உருவாகும் துல்லியமான இடத்தைக் கணிப்பதில் சில வரம்புகள் இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம், தித்வா சூறாவளி தொடர்பான முன்னறிவிப்புகளிலும் உறுதிப்படுத்தப்பட்டது.
See Table 1 with clickable links here.
மூலம்
மூலங்களுக்கான முழுமையான பட்டியல்
- வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலுக்கான வெப்பமண்டல சூறாவளி செயல்பாட்டு திட்டம் – 2024 பதிப்பு(உலக வளிமண்டலவியல் அமைப்பின் தொழில்நுட்ப ஆவணம்) – https://community.wmo.int/site/knowledge-hub/programmes-and-initiatives/tropical-cyclone-programme-tcp/tropical-cyclone-operational-plans; TCOperationalPlanforBoB_Edition-2024.pdf
- வெப்பமண்டல சூறாவளிகளால் இலங்கைக்கு ஏற்படும் அபாயங்களின் விபரம் –https://www.dmc.gov.lk/images/hazard/hazard/Report/UNDP%20BOOK%20CHAP%2009_%20TROPICAL%20CYCLONES.pdf
- இந்தியாவில் சூறாவளி எச்சரிக்கை: நிலையான செயல்முறை வழிகாட்டி, இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் 2024 பதிப்பு –https://rsmcnewdelhi.imd.gov.in/report.php?internal_menu=NjE=
- தித்வா தொடர்பான RSMC-TCND ஆரம்ப அறிக்கை – https://rsmcnewdelhi.imd.gov.in/download.php?path=uploads/report/26/26_6943b16488196.pdf
- 2025 ஆம் ஆண்டில் வட இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சூறாவளி குழப்ப நிலைகள் குறித்த RSMC-TCND அறிக்கை (2025க்கான ஆண்டறிக்கை) – https://rsmcnewdelhi.imd.gov.in/download.php?path=uploads/report/27/27_c8dbd0_0_COVER_PAGE_RSMC_Report_2025.pdf
- இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஃபேஸ்புக் பக்கம் – https://www.facebook.com/SLMetDept
- வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னெடுத்த ஊடக விளக்கங்கள் மற்றும் பல்வேறு செய்தித்தளங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள்
- RSMC-TCND இன் நீண்டகால முன்னறிவிப்பு (சூறாவளி உருவாக்கம்) – https://rsmcnewdelhi.imd.gov.in/archive-information.php?internal_menu=MjQ=&menu_id=Mg==
- RSMC-TCND இன் வெப்பமண்டல வானிலை முன்னறிவிப்பு, சிறப்பு வெப்பமண்டல வானிலை முன்னறிவிப்புமற்றும் சூறாவளி அறிவிப்புகள்
- வட இந்தியப் பெருங்கடலில் வெப்பமண்டல சூறாவளிகளின் காலநிலை ஆய்வு – ஆனந்த குமார் தாஸ், இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் https://severeweather.wmo.int/TCFW/NewDelhi_Training2022/1_Climatology-of-TC-over-NIO-4th-April2022.pdf
- ஷர்மா, எம்., மொஹபத்ரா, எம்., & சுனிதா, பி. (2025). வட இந்தியப் பெருங்கடலில் சூறாவளி உருவாக்கம்குறித்த செயலில் உள்ள நீண்டகால முன்னறிவிப்புகளின் மதிப்பாய்வு. வெப்பமண்டல சூறாவளி ஆராய்ச்சி மற்றும் மதிப்பாய்வு, 14(1), 82–103. https://www.sciencedirect.com/science/article/pii/S2225603225000062?ref=pdf_download&fr=RR-2&rr=9c5620f85eac513a
- சரண்யா கணேஷ், எஸ்., அபிலாஷ், எஸ். சஹாய், ஏ. கே. மற்றும் பலர்.பல மாதிரிகள் ஒருங்கிணைந்தகட்டமைப்பில் வட இந்தியப் பெருங்கடலில் முன்-மழைக்கால சூறாவளிப் புயல்களின் உருவாக்கம் மற்றும்பாதை கணிப்பு: இயற்கை அபாயங்கள் 95, பக்கங்கள் 823–843 (2019). https://link.springer.com/article/10.1007/s11069-018-3522-6
- வட இந்தியப் பெருங்கடலில் ஏற்படும் சூறாவளி குழப்ப நிலைகள் தொடர்பான தொழில்நுட்பச்சொற்றொடர்கள், சூறாவளி எச்சரிக்கை பிரிவு, இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் – https://rsmcnewdelhi.imd.gov.in/images/pdf/terminology.pdf