உண்மைச் சரிபார்ப்புகளும்
இந்தக் கூற்றின் உண்மைத்தன்மையை ஆராய்வதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாரிய குற்றங்கள் தொடர்பிலான அட்டவணையில் உள்ள தகவல்களை நாங்கள் பயன்படுத்தினோம். பாராளுமன்ற உறுப்பினர் ‘சிறுமிகள்’ எனக் குறிப்பிட்டதனால் நாங்கள் 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மீதான பாலியல் பலாத்கார வழக்குகளை கவனத்தில் கொண்டோம். இது சட்டரீதியான பலாத்காரம் என வகைப்படுத்தப்படுகின்றது.
பாரிய குற்றங்கள் தொடர்பிலான அட்டவணையின் பிரகாரம், 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையில் சட்டரீதியான பலாத்காரம் வருடாந்தம் 1,438 முதல் 1,686 என்ற எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இந்தக் காலப்பகுதியில் பதிவான சட்டரீதியான பலாத்காரங்களின் சராசரியானது 1,556 ஆகும். பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்ட 1,600 என்ற எண்ணிக்கை இந்த தரவுகளுடன் ஒத்துப் போகின்றது.
எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றினை ‘சரியானது’ என வகைப்படுத்துகின்றோம்.
*FactCheck இன் தீர்ப்பு பொதுவாக அணுகக்கூடிய மிக சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, ஒவ்வொரு உண்மை சரிபார்ப்பின் போதும் புதிய தகவல் கிடைக்கப் பெறும் போது, FactCheck மதிப்பீட்டை மீள் பரிசீலனை செய்யும்.
2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பதிவான மொத்த பாலியல் பலாத்கார (16 வயதிற்கு மேற்பட்ட பெண்களையும் உள்ளடக்கியது) வழக்குகளின் சராசரி 1,898 ஆகும். எனினும், பாலியல் வன்முறைகளை எதிர்கொள்ளும் பல பெண்கள் இது தொடர்பில் முன்வந்து வழக்குப் பதிவு செய்வதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையான ‘பெண்களுக்கு எதிரான வன்முறைகளைப் புரிந்துகொள்ளுதலும், உரையாடுதலும்’ குறிப்பிடுவது என்னவென்றால், ‘பாலியல் வன்முறை தொடர்பான சிறந்த தரவுகள் சனத்தொகை அடிப்படையிலான கணக்கெடுப்பில் இருந்தே கிடைக்கின்றது. பாலியல் வன்முறை தொடர்பான பிற தரவுகள் பொலிஸ் அறிக்கைகள், மருத்துவ அமைப்புக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்களின் ஆய்வுகளில் இருந்து கிடைக்கின்றன. எனினும், இந்த அமைப்புக்களில் குறைந்த அளவிலான வழக்குகள் மாத்திரமே பதிவு செய்யப்படுகின்றன. இது உண்மையான எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுகின்றது’. எனவே, பொலிஸ் புள்ளிவிபரங்களைக் கொண்ட பாரிய குற்றங்கள் தொடர்பிலான அட்டவணையில் பதிவாகியுள்ள விகிதத்தை விட உண்மையில் வருடாந்தம் பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
மூலம்
- இலங்கை பொலிஸ், பாரிய குற்றங்கள் தொடர்பிலான அட்டவணை (2018), பார்வையிட: https://www.police.lk/images/crime/2019/disposal_of_grave_crime_policedivision.pdf
- இலங்கை பொலிஸ், பாரிய குற்றங்கள் தொடர்பிலான அட்டவணை (2017), பார்வையிட: https://www.police.lk/images/others/crime_trends/2017/grave_crime-2017.pdf
- இலங்கை பொலிஸ், பாரிய குற்றங்கள் தொடர்பிலான அட்டவணை (2016), பார்வையிட: https://www.police.lk/images/others/crime_trends/2016/grave_crime%20.pdf
- இலங்கை பொலிஸ், பாரிய குற்றங்கள் தொடர்பிலான அட்டவணை (2015), பார்வையிட: https://www.police.lk/images/others/crime_trends/2015/grave_crime_abstract_for_the_year_2015.pdf
- உலக சுகாதார நிறுவனம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை புரிந்துகொள்ளுதலும், உரையாற்றுதலும்: பாலியல் வன்முறைகள் (2012), பக்கம்1, பார்வையிட: https://apps.who.int/iris/bitstream/handle/10665/77434/WHO_RHR_12.37_eng.pdf;jsessionid=46A83DEC1693EFC3FE68DAE841BB7E71?sequence=1