உண்மைச் சரிபார்ப்புகளும்
2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டில் ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகின்றார். ஏற்றுமதி விவசாயப் பயிர்கள் (EAC- Export Agricultural Crops) என்பது ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் மேற்பார்வையில் வரும் குறிப்பிட்ட பயிர்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இதில் பல்வேறு வகையான வாசனைப் பொருட்கள் (கறுவா, மிளகு, ஜாதிக்காய் போன்றவை), வெற்றிலை, பாக்கு, கோப்பி, கொக்கோ மற்றும் பல்வேறு நறுமண எண்ணெய்கள் உள்ளடங்கியுள்ளன.
இந்தக் கூற்றினை மதிப்பிடுவதற்கு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான ஏற்றுமதி விவசாயப் பயிர்களுக்கான ஏற்றுமதி புள்ளிவிபரங்களை FactCheck ஆராய்ந்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டது போன்று, இலங்கையின் ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் ஏற்றுமதி 2019 இல் ரூ.63,374 மில்லியனில் இருந்து 2020 இல் ரூ.72,851 மில்லியனாக அதிகரித்துள்ளது – இது 15% அதிகரிப்பாகும்.
சர்வதேச வர்த்தகப் பெறுமதிகள் அமெரிக்க டொலர்களிலேயே குறிப்பிடப்படும். ஆகவே, பிரதமர் ரூபாயில் குறிப்பிட்ட ஏற்றுமதி விவசாயப் பயிர்களின் ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பு, வெறுமனே 2019 முதல் 2020 வரையில் அமெரிக்க டொலர்களின் பெறுமதியில் ஏற்பட்ட தேய்மானத்தினால் ஏற்பட்டதில்லை என்பதை உறுதிப்படுத்த ஏற்றுமதிப் பெறுமானங்கள் ஐ.அ.டொலர்களில் மதிப்பிடப்பட்டன. ஐ.அ.டொலரில் கூட விவசாயப் பயிர்களின் ஏற்றுமதி 2019 மற்றும் 2020 க்கு இடையே ஐ.அ.டொ 354 மில்லியனில் இருந்து ஐ.அ.டொ 393 மில்லியனாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடியும். ரூபாயின் மதிப்பில் 15% அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் இது 11% அதிகரிப்பாகும் (அட்டவணை 1).
ஆகவே, நாங்கள் பிரதமரின் கூற்றினை “சரியானது” என வகைப்படுத்துகின்றோம்.
Additional Note
மூலம்
ஏற்றுமதி அபிவிருத்தி சபை, வர்த்தக புள்ளிவிபரத்தளம், பொருட்களின் தேடல்: மிளகு, கறுவா, கராம்பு, ஜாதிக்காய் மற்றும் ஜாவித்திரி, ஏலக்காய், ஓலியோரெஸின் (ஒரு வகையான பிசின்), இஞ்சி, மஞ்சள், வெனிலா, வெற்றிலை, பாக்கு, கோப்பி, கொக்கோ மற்றும் கொக்கோ தயாரிப்புக்கள், நறுமண எண்ணெய்கள், பார்வையிட: https://stat.edb.gov.lk/
இலங்கை மத்திய வங்கி, சராசரி மாதாந்த மாற்று வீதம், பார்வையிட: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/statistics/sheets/Monthly_Average_Exchange_Rates_20210301.xlsx