உண்மைச் சரிபார்ப்புகளும்
பாராளுமன்ற உறுப்பினர் அவரது அறிக்கையில் (அ) 2020 இல் இலங்கை 574,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்துள்ளது (ஆ) ஹெக்டேருக்கு 284 கிலோகிராமைப் பயன்படுத்துவதன் மூலம் தெற்காசியாவில் இரசாயன உரப் பயன்பாட்டில் முதலிடத்தில் உள்ளது எனக் குறிப்பிடுகிறார்.
முதலாவது கூற்றைச் சரிபார்ப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆண்டறிக்கை மற்றும் தேசிய உர செயலகத்தில் மாற்று தரவு மூலங்கள் காணப்படுகிறதா என FactCheck.lk ஆராய்ந்தது. 2020 இல் இலங்கை 952,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்துள்ளதாக மத்திய வங்கி தற்காலிகமாக மதிப்பிட்டுள்ளது (அட்டவணை 1ஐப் பார்க்கவும்). இது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் 574,000 மெட்ரிக் தொன்னுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும்.
இரண்டாவது கூற்றைச் சரிபார்ப்பதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் உலக வங்கியின் இரசாயன உரப் பாவனை தொடர்பான தரவை FactCheck.lk சரிபார்த்தது. உரப்பாவனை என்பதை “விளைநிலத்தின் ஒரு யூனிட்டுக்குப் பயன்படுத்தப்படும் தாவர ஊட்டச்சத்துக்களின் அளவு” என உணவு மற்றும் விவசாய அமைப்பு வரையறுக்கிறது. “உரத் தயாரிப்புக்களில் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் பொஸ்பேட்டு உரங்கள் (பொஸ்பேட்டு பாறை உள்ளிட்டன) ஆகியன உள்ளடங்குகின்றன’, விளைநிலம் என்பதில் ‘தற்காலிகப் பயிர்கள் (இருபோகப் பயிர் செய்யப்படும் பகுதிகள் ஒரு முறை கணக்கிடப்படுகின்றன), வெட்டுவதற்கு அல்லது மேய்ச்சலுக்கான தற்காலிக மேய்ச்சல் நிலங்கள், சந்தை அல்லது வீட்டுத் தோட்ட நிலங்கள் மற்றும் தற்காலிக தரிசு நிலங்கள் உள்ளடங்குகின்றன. விளைச்சலை மாற்றியதன் விளைவாகக் கைவிடப்பட்ட நிலம் இதில் உள்ளடக்கப்படவில்லை’.
உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் காணப்படும் உரப்பாவனை தொடர்பான சமீபத்திய தரவு 2018 ஆம் ஆண்டுக்குரியது. 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் இரசாயன உரப்பாவனையானது பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் ஹெக்டேருக்கு 284 கிலோகிராமை விட பாதியளவு குறைவானது என புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. இலங்கையை விட அதிகளவு இரசாயன உரத்தை பங்களாதேஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயன்படுத்துகின்றன (அட்டவணை 2 ஐப் பார்க்கவும்). எனவே இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதுடன், தெற்காசியாவில் இராசாயன உரத்தின் முதன்மையான பாவனையாளர் இல்லை என்பது தெரிகிறது.
பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றில் மூன்று தவறுகள் உள்ளன. உர இறக்குமதியைக் குறைத்து மதிப்பிடுவதுடன், ஹெக்டேர் ஒன்றுக்கு பயன்படுத்தும் உரத்தை மிகை மதிப்பிடுகிறார். அத்துடன் தெற்காசியாவில் இலங்கையின் இரசாயன உரப் பாவனையின் நிரல்படுத்தலையும் தவறாகக் குறிப்பிடுகிறார். ஆகவே நாங்கள் அவரது அறிக்கையினை ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
உலக வங்கியின் உத்தியோகபூர்வ வலைதளம், ‘உரப் பாவனை (ஒரு ஹெக்டேர் விளைநிலத்திற்குத் தேவையான கிலோகிராம்)’, பார்வையிட: https://datacatalog.worldbank.org/search?search_api_views_fulltext_op=AND&query=AG.CON.FERT.ZS&sort_by=search_api_relevance&sort_by=search_api_relevance [last accessed: 9 June 2021]
உலக வங்கியின் உத்தியோகபூர்வ வலைதளம், ‘தரவு வங்கி | உலக அபிவிருத்திக் குறிகாட்டிகள்’, பார்வையிட: https://databank.worldbank.org/reports.aspx?source=2&series=AG.CON.FERT.ZS[last accessed: 9 June 2021]
இலங்கை மத்திய வங்கி, ஆண்டறிக்கை (2020), பார்வையிட: https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports [last accessed: 9 June 2021]