உண்மைச் சரிபார்ப்புகளும்
2019 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 72 சதவீதத்தில் இருந்து 96 சதவீதமாக (24% அதிகரிப்பு) அதிகரித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டுக் கடனை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாகக் குறிப்பிடுகிறாரா அல்லது மொத்தக் கடனின் சதவீதமாகக் குறிப்பிடுகிறாரா என்பது தெளிவில்லை.
மத்திய வங்கியின் 2020 ஆண்டறிக்கையின் பிரகாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே 30% மற்றும் 41.3% ஆகும். அதேவேளை அரச கடனின் சதவீதமாக வெளிநாட்டுக் கடன் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே 41.6% மற்றும் 47.6% ஆகும். (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் சதவீதம் அவரது அறிக்கையின் இரண்டு விளங்கங்களிலும் மிகத் தவறு ஆகும்.
பாராளுமன்ற உறுப்பினர் தவறாகப் பேசியிருந்து, அவர் வெளிநாட்டுக் கடனுக்குப் பதிலாக மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடனைக் குறிப்பிட்டதாகக் கருதினால் அவர் குறிப்பிட்ட ஒரு சதவீதம் ஓரளவுக்குச் சரியாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே 72.3% மற்றும் 86.8% ஆகும். அவர் மொத்தப் பொதுப் படுகடனை (மத்திய அரசாங்கம் மற்றும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள்) குறிப்பிட்டதாகக் கருதினால், அவர் குறிப்பிடும் மற்றொரு சதவீதம் ஓரளவு பொருந்துகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்தப் பொதுப் படுகடன் 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே 80.7% மற்றும் 94.6% ஆகும் (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்).
சுருக்கமாகக் குறிப்பிடுவதானால், பாராளுமன்ற உறுப்பினர் வெளிநாட்டுக் கடனாகக் குறிப்பிடும் சதவீதம் மிகத் தவறு. அவர் மத்திய அரசாங்கத்தின் கடனைக் குறிப்பிடுவதாக இருந்தால் அவர் குறிப்பிட்ட 2019 ஆம் ஆண்டுக்கான சதவீதம் தவறு ஆகும். அவர் பொதுப் படுகடனைக் குறிப்பிடுவதாக இருந்தால் 2014 ஆம் ஆண்டுக்கான சதவீதம் தவறு ஆகும். 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கடன் அதிகரிப்பை பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கை மிகைப்படுத்திக் குறிப்பிடுகிறது. ஆகவே நாங்கள் ‘தவறானது’ என வகைப்படுத்துகிறோம்.
*FactCheck.lk முடிவு பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கும் சமீபத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு சரிபார்ப்பையும் பொறுத்தவரையில் புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் FactCheck.lk மதிப்பீட்டை மீண்டும் சரிபார்க்கும்.
மூலம்
மத்திய வங்கி ஆண்டறிக்கை 2020
மத்திய வங்கி ஆண்டறிக்கை 2017
நிதியமைச்சு ஆண்டறிக்கை 2019
நிதியமைச்சு ஆண்டறிக்கை 2014