உண்மைச் சரிபார்ப்புகளும்
ஊடகங்களுடனான சந்திப்பின்போது, ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டெம்பர் 18 – அக்டோபர் 18 இடையே நிச்சயமாக நடத்தப்பட வேண்டும் என அரசியலமைப்பின் 31(3) உறுப்புரையை பாராளுமன்ற உறுப்பினர் விளக்குகிறார்.
இந்தக் கூற்றை மதிப்பிடுவதற்கு, இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரைகள் 31, 32 மற்றும் 40, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இல. ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றை FactCheck.lk ஆராய்ந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பிலவின் விளக்கம் (அ) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலம் (ஆ) அரசியலமைப்பின் உறுப்புரை 31(3) ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.
(அ) ஜனாதிபதி பதவிக்காலத்தின் முடிவு தொடர்பில் 31(3அ)(ஈ)(ii) உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர், பதவியில் இருப்பவர் இல்லையென்றால், “அத்தகைய தேர்தலின் முடிவு அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பதவி வகிக்கலாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக நவம்பர் 17, 2019 ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நவம்பர் 18, 2019 ஆம் ஆண்டு பதவிப் பிரமாணம் செய்துகொண்டாலும், அவரின் பதவி 17 ஆம் திகதி தொடங்கி நவம்பர் 17, 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது.
(ஆ) பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பின் 31(3) உறுப்புரையை மேற்கோள் காட்டுகிறார்: “ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, பதவியிலுள்ள ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு மாதத்திற்குக் குறையாமலும் இரண்டு மாதங்களுக்கு மேற்படாமலும் நடைபெறுதல் வேண்டும்”. இதன் பிரகாரம், இந்த உறுப்புரைக்குப் பொருத்தமான திகதிகள் செப்டெம்பர் 17, 2024 (பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு மேற்படாமல்) மற்றும் அக்டோபர் 17, 2024 (பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்குக் குறையாமல்) இடையே இருக்க வேண்டும்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் 31(3அ)(அ)(i) உறுப்புரையைக் குறிப்பிடவில்லை. இது மேலேயுள்ள கட்டுப்பாட்டை மீறும் விதியைக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நான்காண்டு கால ஆட்சியின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலை முன்னதாக நடத்துவதற்கு அழைப்பு விடுக்க இது அனுமதிக்கிறது.
எனினும் 40(1) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதியாகும் ஒருவர் முன்கூட்டியே தேர்தலைக் கோருவதற்கு உரிமை இல்லை என இந்தச் சுதந்திரத்தை உறுப்புரை 31(3அ)(உ) கட்டுப்படுத்துகிறது.
அரசியலமைப்பின் 40(1) உறுப்புரையின் விதிகளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் விளைவாக ஜனாதிபதி விக்கிரமசிங்க செப்டெம்பர் 17, 2024க்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுக்க முடியாது.
மேலேயுள்ள பகுப்பாய்வின் பிரகாரம், அடுத்த ஜனாதிபதித் தேர்தலை அக்டோபர் 17 ஆம் திகதிக்குப் பின்னரோ செப்டெம்பர் 17 ஆம் திகதிக்கு முன்னரோ நடத்துவதற்கு அரசியலமைப்பிலோ சட்டத்திலோ எந்தவித விதிகளும் இல்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்பினால் நிர்ணயிக்கப்பட்ட கால வரையறை தொடர்பில் (பொருத்தமான திகதிகளை ஒரு நாளினால் தள்ளிக் குறிப்பிட்டாலும்) பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில சரியாகக் குறிப்பிடுகிறார்.
எனவே நாங்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரியானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மூலம்
இலங்கை அரசியலமைப்பு: https://www.parliament.lk/files/pdf/constitution.pdf
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இல. ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம்: https://elections.gov.lk/web/wp-content/uploads/publication/acts/15-1981_E.pdf
ஜனாதிபதி செயலகம்: https://www.presidentsoffice.gov.lk/index.php/2019/11/18/new-president-sworn-in-2/
News.lk: https://www.news.lk/news/politics/item/28256-elected-7th-executive-president-of-sri-lanka
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு: https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/presidential-elections/pre2019/PRE_2019_All_Island_Result.pdf