இரான் விக்கிரமரத்ன

இலங்கையின் கடவுச்சீட்டு தொடர்பில் பா.உ விக்ரமரத்ன ஓரளவு சரியாகக் குறிப்பிடுகிறார்

"

இலங்கை கடவுச்சீட்டு… உலகளவில் 97 ஆவது இடத்தில் உள்ளது… இதன் அர்த்தம் என்ன? அதாவது… 40 நாடுகளுக்கு நீங்கள் விசா இல்லாமல் செல்லலாம். வேறு நாடுகளுக்குப் பயணிக்கும்போது, வருகையின்போது விசா பெறுவதற்கான அணுகல் இலங்கைக்குக் குறைவாக உள்ளது. (தொடர்ச்சி)

இரான் விக்ரமரத்னவின் யூடியூப் பக்கம் | டிசம்பர் 8, 2023

partly_true

Partly True

உண்மைச் சரிபார்ப்புகளும்

(தொடர்ச்சி) வருகையின்போது விசா பெறுவதற்கான அணுகல் உள்ள நாடுகளில் பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் டொமினிக்கா உள்ளன…

உலகளாவிய கடவுச்சீட்டு தரவரிசைப்படுத்தலில் இலங்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் இரண்டு கூற்றுகளை முன்வைத்துள்ளார்: (1) இலங்கையின் கடவுச்சீட்டு உலகளவில் 97 ஆவது இடத்தில் உள்ளது. (2) பாகிஸ்தான், சிங்கப்பூர் மற்றும் டொமினிக்கா உட்பட 40 நாடுகளுக்கு இலங்கையர்கள் விசா இல்லாமல் பயணிக்கலாம்.

இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க, பாராளுமன்ற உறுப்பினர் மேற்கோள் காட்டிய ஹென்லி கடவுச்சீட்டு தரவரிசையை (HPI) FactCheck.lk ஆராய்ந்தது.

HPI ஒரு எளிய புள்ளி முறையைக் கொண்டுள்ளது. அதாவது கடவுச்சீட்டு வைத்திருப்பவர் புறப்படுவதற்கு முன் பயண அங்கீகாரத்தைப் பெறாமல் செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையைக் கொண்டு புள்ளிகளைக் கணக்கிடுகிறது. ஒவ்வொரு பயண இடத்திற்கும் கடவுச்சீட்டை வைத்திருப்பவர் (அ) விசா பெறத் தேவையில்லை (ஆ) புறப்படுவதற்கு முன் அனுமதியைப் பெற்றுக்கொள்ளத் தேவையின்றி, வருகை தந்ததும் விசா, அனுமதி அல்லது இலத்திரனியல் பயண அங்கீகாரம் (ETA) என நுழைவதற்கான அனுமதியைப் பெறலாம் என்றால் அந்தக் கடவுச்சீட்டு ஒரு புள்ளியைப் பெறுகிறது. 227 பயண இடங்களுக்கு 199 கடவுச்சீட்டுக்களை HPI மதிப்பிடுகிறது. எனவே அதிகபட்சமாக ஒரு கடவுச்சீட்டு 227 புள்ளிகளைப் பெறலாம்.

கூற்று 1: பாராளுமன்ற உறுப்பினர் இந்த அறிக்கையை வெளியிட்டபோது, கிடைக்கும் சமீபத்திய HPI (நவம்பர் 15, 2023க்கு) அறிக்கை இலங்கையின் கடவுச்சீட்டை 97 ஆவதாக நிரல்படுத்தியுள்ளது. மோசமான செயல்திறன் கொண்ட கடவுச்சீட்டாக ஆப்கானிஸ்தானை 105 ஆவது இடத்தில் நிரல்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு கடவுச்சீட்டிற்கும் தர வரிசையை ஒதுக்கும் HPI முறை ஓரளவு வழக்கத்திற்கு மாறாக உள்ளது. அதிக புள்ளிகளைப் பெற்ற நாட்டின் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் அதிக புள்ளிகளின் எண்ணிக்கையால் தரவரிசையைத் தீர்மானிக்கிறது. உதாரணமாக, இலங்கை மற்றும் கொசோவாவின் கடவுச்சீட்டுக்கள் ஒவ்வொன்றும் 41 புள்ளிகளைக் கொண்டுள்ளன. அத்துடன் ஒரே தரவரிசையான 97 ஆவது இடத்தில் உள்ளன. இலங்கை மற்றும் கொசோவா ஆகிய இரண்டு நாடுகளும் 97 ஆவது இடத்தில் இருந்த போதிலும், 40 புள்ளிகளைக் கொண்ட (இலங்கையை விட 1 புள்ளி குறைவு) பங்களாதேஷ் கடவுச்சீட்டு 99க்குப் பதிலாக 98 ஆவது இடத்தில் உள்ளது. இதன் காரணமாகவே 199 கடவுச்சீட்டுகள் நிரல்படுத்தப்படும்போதும் மிகக்குறைந்த தரவரிசை 105 ஆக உள்ளது.

அதாவது புள்ளிகளின் அடிப்படையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97 ஆவது இடத்தில் உள்ளது. எனினும் நாடுகளின் கடவுச்சீட்டுகளின் நிரல்படுத்தலில் (அவ்வாறான நிரல்படுத்தலின் உள்ளார்ந்த புரிதல்), இலங்கை 199 நாடுகளில் 188 ஆவது இடத்தில் உள்ளது (HPI அறிக்கையிலுள்ள தரவின் அடிப்படையில்). சிங்கப்பூர் 193 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது, ஆப்கானிஸ்தான் 27 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் (199 ஆவது இடத்தில்) உள்ளது. HPI தரவு மாதாந்தம் புதுப்பிக்கப்படுகிறது, எனவே சமீபத்திய புள்ளிகள் மற்றும் தரவரிசை இங்கே மதிப்பிடப்பட்டதில் இருந்து வேறுபடலாம்.

கூற்று 2: நவம்பர் 2023 இல், இலங்கை கடவுச்சீட்டுக்கு HPI 41 புள்ளிகளை வழங்கியிருந்தது. அதாவது 41 நாடுகளுக்கு முன் அனுமதி இல்லாமல் பயணம் செய்ய முடியும். இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் பாகிஸ்தான், டொமினிக்கா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணத்திற்கான முன் அனுமதி பெறாமல் செல்ல முடியும். இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் வலைதளத்தில் இந்தத் தகவலை FactCheck.lk சரிபார்த்தது. எனினும் வழிகாட்டுதல்களில் விசா தேவைப்படும் என்றும், விண்ணப்பதாரர் நேரில் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விசா வழங்குவதற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் எடுக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இலங்கை கடவுச்சீட்டுடன் பாகிஸ்தான் பயணிப்பது தொடர்பில் HPIயின் தகவல்கள் தவறானவை என FactCheck.lk முடிவுக்கு வருகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் இலங்கையின் புள்ளியை 40 ஆகக் குறிப்பிடுகிறார், HPI (நவம்பரில் 41 என அறிக்கையிட்டிருந்தது) முந்தைய மாதங்களில் 40 ஆகக் குறிப்பிட்டிருக்கலாம். இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன் அனுமதியின்றி பாகிஸ்தானுக்குப் பயணிக்க முடியும் என HPIயை சரியாக பாராளுமன்ற உறுப்பினர் மேற்கோள் காட்டுகிறார். ஆனால் HPI சரியான தகவலை வழங்கவில்லை எனக் கண்டறியப்பட்டது. மேலும் பாராளுமன்ற உறுப்பினரால் சரியாக மேற்கோள் காட்டப்படும் HPI தரவரிசை இலங்கையின் கடவுச்சீட்டை 97 ஆவது இடத்தில் நிரல்படுத்தியுள்ளது. எனினும் புள்ளியின் பிரகாரம் 199 நாடுகளின் கடவுச்சீட்டுகளுடன் மதிப்பிடப்பட்டதில் இலங்கை 188 ஆவது இடத்தில் உள்ளதைத் தரவு காட்டுகிறது. ஒட்டுமொத்த அறிக்கையில் உள்ள இந்தத் தவறுகள் பாராளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய மூலத்தில் உள்ள குறைபாடுகளால் ஏற்பட்டுள்ளன.

ஆகவே பாராளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை நாங்கள் ஓரளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.



மூலம்

விசா வழிகாட்டுதல்கள், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம்,

https://www.pakistanhc.lk/?page_id=122 (இறுதியாக அணுகியது: பெப்ரவரி 22, 2024)

ஹென்லி கடவுச்சீட்டு தரவரிசை. (n.d.-b). ஹென்லி மற்றும் பங்காளர்கள்.

https://www.henleyglobal.com/passport-index/about

கடவுச்சீட்டு தரவரிசை ஒப்பீடு. (n.d.). ஹென்லி மற்றும் பங்காளர்கள்.

https://www.henleyglobal.com/passport-index/compare

உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு தரவரிசை நிரல்படுத்தல் (2023). ஹென்லி மற்றும் பங்காளர்கள்.

https://cdn.henleyglobal.com/storage/app/media/HPI/Henley%20Passport%20Index%202023%20November%20Global%20Ranking.pdf

உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு தரவரிசை நிரல்படுத்தல் (2024). ஹென்லி மற்றும் பங்காளர்கள்.

https://cdn.henleyglobal.com/storage/app/media/HPI/Henley%20Passport%20Index%202024%20February%20Global%20Ranking.pdf

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன