உண்மைச் சரிபார்ப்புகளும்
2019 இலிருந்து 2023 இல் உணவுச் செலவினம் ரூ.6,000 – 6,500 இலிருந்து ரூ.16,000 – 17,000 என மும்மடங்காக அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அலவத்துவல தெரிவிக்கிறார்.
இந்தக் கூற்றுக்களைச் சரிபார்க்க தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் பல்வேறு வெளியீடுகளை FactCheck.lk சரிபார்த்தது: (1) கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மற்றும் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண் (NCPI) ஆகியவற்றின் விலைச் சுட்டெண் தரவு (2) வீட்டு வருமானம் மற்றும் செலவினக் கணக்கெடுப்பு (HIES).
பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகள் கொழும்பு மாவட்டத்திற்கு அல்லது தேசிய மட்டத்தில் பொருந்தும் என அவர் குறிப்பிடுகிறார். பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதிகள் மாதாந்த (வாராந்தம் அல்லது ஆண்டுச் செலவினத்துடன் அல்ல) உணவுச் செலவினத்துடன் அதிகம் பொருந்துவதை FactCheck.lk கண்டறிந்துள்ளது.
தேசிய மட்டத்தில் சராசரி மாதாந்த உணவுச் செலவினம் ரூ.5,981 எனவும் கொழும்பில் ரூ.7,532 எனவும் 2019 HIES தரவு குறிப்பிடுகிறது (அட்டவணை 1 ஐப் பார்க்கவும்). பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதி இந்த இரண்டு பெறுமதிகளுக்கு இடையே உள்ளது. எனினும் உணவுச் செலவினம் அதிகரித்துள்ளது என்பதை மதிப்பிட இவ்வாறான ஒரு கணக்கெடுப்பு தரவு 2023 ஆம் ஆண்டுக்கு இல்லை.
ஆகவே, உணவுப் பொருட்களில் ஏற்பட்ட அதிகரிப்பை CCPI மற்றும் NCPI சுட்டெண்ணைப் பயன்படுத்தி FactCheck.lk மதிப்பிட்டது. ஜனவரி 2019 முதல் அக்டோபர் 2023 வரை இந்தச் சுட்டெண்களில் முறையே 2.3 மற்றும் 2.2 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடுவதை விட இது மிகவும் குறைவாகும்.
2019 HIES தரவு மற்றும் உணவுப் பொருட்களின் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் 2023க்கான சராசரி உணவுச் செலவினத்தை அதிகபட்சமாக தேசிய மட்டத்தில் நபர் ஒருவருக்கு ரூ.13,320 என மதிப்பிடலாம் (பாராளுமன்ற உறுப்பினரின் பெறுமதியை விட மிகக் குறைவாகும்). கொழும்பிலுள்ள நபர் ஒருவருக்கு ரூ.17,324 என மதிப்பிடலாம் (பாராளுமன்ற உறுப்பினரின் அதிகபட்ச பெறுமதியை விட ஓரளவு அதிகமாகும்) (அட்டவணை 1).
2019 ஆம் ஆண்டுக்கான சராசரி உணவுச் செலவினம் என பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடும் பெறுமதி, தேசிய மட்டம் மற்றும் கொழும்பு மாவட்ட செலவினங்களின் வரம்புக்குள் உள்ளது. அவர் குறிப்பிடும் 2023க்கான பெறுமதி கொழும்பு மாவட்டத்திற்கு ஓரளவு பொருந்துகிறது. எனினும் 2019 மற்றும் 2023க்கு இடையிலான உணவுச் செலவினத்தின் அதிகரிப்பை அவர் மிகைப்படுத்திக் குறிப்பிடுகிறார். அவர் இதை மும்மடங்கு (200% அதிகரிப்பு) எனக் குறிப்பிடுகிறார், ஆனால் அது 2.3 மடங்கே (130% அதிகரிப்பு) அதிகரித்துள்ளது.
எனவே நாங்கள் அவரது கூற்றை பகுதியளவு சரியானது என வகைப்படுத்துகிறோம்.
*பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே FactCheck.lk தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை FactCheck.lk மறுபரிசீலனை செய்யும்.
மேலதிகக் குறிப்பு: பாராளுமன்ற உறுப்பினர் 2023 ஆம் ஆண்டுக்குக் குறிப்பிடும் ரூ.16,000 முதல் ரூ.17,000 என்பதை அதே காலப்பகுதிக்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோட்டுடன் (OPL) ஒப்பிட முடியும். இது தேசிய மட்டத்தில் நபர் ஒருவருக்கு ரூ.16,112 ஆகவும் கொழும்பு மாவட்டத்தில் ரூ.17,377 ஆகவும் காணப்பட்டது. எனினும் பாராளுமன்ற உறுப்பினரின் கூற்று சராசரி உணவுச் செலவினத்தில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அதிகரிப்பையே குறிப்பிடுகிறது, மாறாக OPL இல் ஏற்பட்ட அதிகரிப்பைக் குறிப்பிடவில்லை. OPL இல் ஏற்பட்ட அதிகரிப்பும் 2.3 மடங்கு ஆகும்.
அட்டவணை 1: உணவுச் செலவினம் (2019 முதல் 2023 வரை)
*மதிப்பிடப்பட்ட பெறுமதிகள் உணவுச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை.
மூலம்
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம். (2023). மாதாந்த CCPI. http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyCCPI எனும் இணைப்பிலிருந்து பெறப்பட்டது
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம். (2022). மாதாந்த NCPI. http://www.statistics.gov.lk/InflationAndPrices/StaticalInformation/MonthlyNCPI#gsc.tab=0 எனும் இணைப்பிலிருந்து பெறப்பட்டது
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம். (2019). வீட்டு வருமானம் மற்றும் செலவினக் கணக்கெடுப்பு 2019 இறுதி முடிவுகள். http://www.statistics.gov.lk/IncomeAndExpenditure/StaticalInformation/HouseholdIncomeandExpenditureSurvey2019FinalResults எனும் இணைப்பிலிருந்து பெறப்பட்டது
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம். (2021). வறுமைக் கோடு 2021. http://www.statistics.gov.lk/povertyLine/2021_Rebase#gsc.tab=0 எனும் இணைப்பிலிருந்து பெறப்பட்டது